“இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” என்று மனித இனத்திற்கே சொன்னவர் திருவள்ளுவர்.

எது இனியது, எது இன்னாதது என்பதை இன்றைய குழந்தைகள் கூடச் சொல்லும். அந்த அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்ற காலம் இது.

வெள்ளத் தனைய மலர் நீட்டம்...

எச்.ராஜாவுக்கோ வெள்ளத்தைத் தாண்டி நாக்கு நீட்டம்.

பொது மேடையானாலும் சரி, சமூக வலைதளங்களானாலும் சரி, செய்தியாளர்களிடம் பேசினாலும் சரி தரம்தாழ்ந்த சொற்கள், கருத்துகளைக் கூறுவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார் அவர்.

அருவெறுக்கத்தக்க வகையில் தனி நபர்களைத் தாக்கிப் பேசுவதற்குக் கொஞ்சமும் கூச்சப்படாத மனிதர்.

பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள். இன்று அந்த பார்ப்பனியத்தை உடைத்துக் கொண்டு சமூக அரசியலில் வெளிவருகிறார்கள் அவர்கள்.

இதைக் கூடப் பொறுக்க முடியாத எச்.ராஜா அவர்களையும் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார் இன்று, நாக்கூச்சம் இல்லாமல்.

“பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது மன வேதனையைத் தருகிறது” என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்னாலும், இவரும் கூட எச்.ராஜாவை நேரடியாகச் சுட்டிக் காட்டவில்லை.

இப்படிப்பட்ட ஒருவரை தங்கள் கட்சியின் தேசியச் செயலாளராக வைத்திருப்பதற்காக பா.ஜ.க. சற்றும் வெட்கப்படவில்லை. நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் நியாயமான பல்வேறு போராட்டங்களை ஒடுக்கி வருகின்ற தமிழக அ.தி.மு.க. அரசு, எவ்வளவுதான் எச்.ராஜா எப்படித்தான் கேவலமாகப் பேசினாலும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.

இதனால் ஏற்பட்ட தைரியம்தான் எச்.ராஜாவுக்கு பாதுகாப்புக் கவசமாக அமைகிறது.

ராஜாவின் பேச்சும் செயலும் அமைதியாக வாழும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்.

சாதிக் கலவரம், மதக் கலவரம் ஏற்பட வழிவகுக்கிறது எச்.ராஜாவின் தொடர் பேச்சுகள்.

வடக்கே தோழர் லெனின் உருவச் சிலையை பெயர்த்தெடுத்த சங்பரிவார் செயலை வரவேற்ற ராஜா, தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளைத் தகர்ப்போம் என்று சொன்னதன் விளைவாக, தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டன. கலவரங்களும் ஏற்பட்டன.

ஒரு காடு எரிய ஒரு தீக்குச்சி போதும்.

வரும் முன் காப்பது அரசுக்கு அழகு.

நாவடக்கம் அற்ற, குழப்பங்களை விளைவிக்கின்ற, சமூக நல்லிணக்கங்களுக்கு எதிரான எச்.ராஜா என்ற அந்த மனிதரை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும்.