சென்ற இதழ் தொடர்ச்சி…

உடனடியாக மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லாத இன்றைய சூழலில், அந்த மக்களின் அரசியல் பார்வை எப்படிப்பட்டதாக இருக்கிறது?

அடிப்படையில் அங்கு, பொதுமக்கள், பொதுவாழ்க்கையில் இருக்கின்ற மக்கள் என்ற இரண்டு நிலைகளை நாம் எடுத்துக் கொள்வோம். பொதுமக்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். பொதுவாழ்க்கையில் இருக்கிற மக்களை எடுத்துக்கொண்டால், ஒரு ஜனநாயக அரசியலுக்கான தளமே பல்லாண்டுகளாக அவர்களுக்கு இல்லை. அவர்கள் ஒரு நீண்ட போராட்டத்திலும், அதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்திலும் இருந்தவர்கள். ஆயுதப் போராட்டக் கலாச்சாரத்திற்கும், ஜனநாயக அரசியல் கலாச்சாரத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. தங்கள் முகாமில் இல்லாதவர்களை வெறுப்பது, சந்தேகிப்பது, ஒழிப்பது என்பது ஆயுதக் கலாச்சாரத்தின் கூறுகள். இதை சில இயக்கங்களின் மீதான குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். ஆனால், ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தால், அதன் தன்மைகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தில், எதிர்க் கருத்துகளை உடையவர்கள், எதிர் முகாம்களில் இருப்பவர்கள் கூட, ஒரே இடத்தில் அமர்ந்து விவாதிக்க முடியும்.

அவர்கள் இன்னும் ஜனநாயக அரசியலுக்குள் வருவதற்கான பண்புக் கூறுகளை அடையவில்லை என்றே தோன்றுகிறது. காரணம் நான் சந்தித்த நபர்கள் அனைவருமே தனித்தனி மனிதர்களாக இருக்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் அந்நியப்பட்டவர்களாகவே உணர்கிறார்கள். நம்பிக்கையற்ற போக்கைப் பார்க்க முடிகிறது. இன்னமும் இரகசிய இயக்கங்களுக்கான தன்மையோடுதான் இருக்கிறார்கள். பொதுத்தளத்தில் இணைந்து செயல்படுகின்ற, விவாதிக்கின்ற சூழ்நிலைகூட இன்னும் கனியவில்லை. ஏனென்றால், அவர்கள் நீண்ட காலமாக ஜனநாயக அரசியலுக்கு வெளியே இருந்துவிட்டார்கள். இனிமேல்தான் அதற்கான பண்புக்கூறுகளை அவர்கள் வளர்த்தெடுக்க வேண்டும். ஜனநாயகக் கலாச்சாரம் வளர வளரத்தான், இவர்கள் அமைக்கின்ற அரசு வலிமை பெறும்.

அண்மையில்தான் ஆயுதப் போராட்டத்தில் இருந்து வெளிவந்திருக்கிறார்கள் எனும்போது, உடனடியாக ஜனநாயக அரசியலை வளர்த்துக் கொள்வதில் அவர்களுக்கு இடர்ப்பாடுகள் இருக்கலாம். அடிப்படையில் அவர்களின் அரசியல் செயல்பாட்டுக்கான பண்புக்கூறுகள் மாற வேண்டும். இந்த மாற்றம் என்பதும், அந்த மக்கள் நலிவுற்ற நிலையிலிருந்து மீள்வதும், தங்களுக்கான அரசியல் வலிமையை வளர்த்துக் கொள்வதும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை உணரவேண்டும். நான் சந்தித்த ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் சுகு மற்றும் ஞானம் உரையாடும் போது, தமிழ்நாட்டில் நேர் எதிரான அல்லது விரோதமான அரசியல் போக்குகளைக் கொண்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள்கூட, ஒரே மேடையில், ஒரே அரங்கத்தில் உட்கார்ந்து விவாதித்துக் கொள்ள முடிகிறது. அது இன்னும் எங்களுக்கு சாத்தியப்படவே இல்லையே என்று குறிப்பிட்டனர்.

போருக்குப் பிறகு, அங்கே புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புகள் என்னென்ன விதங்களில் அமைந்திருக்கின்றன?

அங்கிருக்கின்ற தங்களுடைய உறவுகள், நண்பர்களுக்குப் பொருளாதார உதவிகளைப் புலம்பெயர்ந்த மக்கள் செய்யக்கூடும். அதைத்தாண்டி, தங்களுடைய இனத்தைப் பொருளாதார ரீதியில் வளர்த்தெடுப்பதற்கான பொதுத்திட்டங்களை அவர்கள் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை அல்லது குறைவாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். முற்போக்கான ஐரோப்பியக் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அந்தச் சமூகத்தைப் போன்று தங்கள் சமூகத்தை முற்போக்கான சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பவில்லை. ஈழத்தமிழர்கள் மட்டுமில்லை, தமிழ்நாட்டுத் தமிழர்களும்கூட, போகிற இடங்களில் எல்லாம் தங்களுக்கான அடையாளமாகக் கோயிலையும், சடங்கு சாத்திரங்களையும்தான் முன்னிறுத்தித் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பது, நாளைய உலகில், இவர்கள் இடத்தை உறுதி செய்வதற்கு நல்ல அறிகுறிகள் இல்லை. அரச மரத்தடியில் சிங்களர்கள் புத்தரின் சிலையைக் கொண்டு வந்து வைத்தால், அதற்கு மாற்றாக சிவன் கோயில்களையும், மடங்களையும் கட்டுவதற்கு ஆர்வமாக முன்வருகிறார்கள். கல்யாண மண்டபங்கள் கட்டுவதில் அக்கறை காட்டுகின்றனர். அதே அளவு அக்கறை நில உரிமைகளை மீட்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் காட்டப்படவில்லை என்று அங்கு வாழ்கின்ற மக்கள் சொல்கின்றனர்.

இப்பொழுது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைளாக நீங்கள் முன்வைப்பவை எவை?

அங்கு உள்ள நிலம் என்பது இன்றளவும் 80 விழுக்காடு அரசிடம் இருக்கிறது என்று நில ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர் தெரிவித்தார். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் ஒன்றிணைந்து இந்த நிலத்தைத் தமிழர்களின் தனி நில உடைமையாகப் பட்டா மாறுதல்கள் செய்வதற்கான பணிகளைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். இந்த திட்டமிடலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் பெருமளவில் வந்துவிடும். மேலும் இந்த நடவடிக்கையானது சிங்கள அரசின் சட்டங்களுக்கும் முரணாக இருக்காது. அங்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கின்ற உரிமையே என்பதால், இதனை ஒரு முழு ஜனநாயக நடவடிக்கையாக அவர்களால் மேற்கொள்ள முடியும். இந்தப் பணியே என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கான முதன்மையான அரசியல் பணியாக உணர்கிறேன். மேலும் தமிழக மக்களுக்கும், ஈழ மண்ணிற்கும் இடையே பொருளாதார, தொழில் ரீதியான உறவுகள் மேம்பட வேண்டும். அதற்கான பாதைகள் குறித்து (கடல்வழிப் பாதை உள்ளிட்ட), இருநாட்டு அரசியல், தொழில் முதலீட்டாளர்களும் தீவிரமாகச் சிந்தித்துப் பணியாற்றிட வேண்டும்.

ஈழத்தைத் தமிழ் நெஞ்சங்கள் உறவோடு நினைத்துப் பார்க்க வேண்டும். தங்களுடைய உதவிக் கரத்தையும் நீட்டிட வேண்டும்.

நேர்காணல்: இரா.உமா