tamilaruvi-manian 400எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையட்டி, சுப்பிரமணியசாமி, சோ சாமிகளைக் காட்டிலும், பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வருகிறார் தமிழருவி மணியன். பா.ஜ.க.வின் கூட்டணி தரகராக தமிழ்நாட்டில் செயல்படும் அப்பழுக்கற்ற ‘காந்தியவாதி’ இவர்.

அதனால்தான் காந்தியைக் கொன்ற கூட்டத்தை அரியணையில் அமரவைக்க, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் ஓடிஓடி உழைக்கிறார். பா.ம.க., என்னும் சாதிக் கட்சியை மதவாதக் கட்சியான பா.ஜ.க. கூட்டணியில் சேர்த்துவிடவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்.

இதோ இவர் வருகிறார், அதோ அவர் வருகிறார் என்று சொல்லிச் சொல்லியே ஒருவழியாக ம.தி.மு.க.,வைக் கொண்டுபோய் சேர்த்து, வைகோவை அனைவரும் ‘புகழ்ந்து தள்ளும்படி’ செய்த பெருமையும் மணியனுக்கே போய்ச்சேரும்.

தே.மு.தி.க.வையும் பா.ஜ.க. கூட்டணியில் கொண்டு போய்த் தள்ளிவிட வேண்டும் என்று தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தவர்தான் இவர்.

கூடுதலாக, பா.ஜ.க., கூட்டணியில் சேராவிட்டாலும் பரவாயில்லை, தி-.மு.க. பக்கம் தே.மு.தி.க. போய்விடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறையோடு இருந்தார்.

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், தே.மு.தி.க. காணாமல் போய்விடும் என்று அழுதுகூடப் பார்த்தார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி பற்றிப் பேசினேன் என்றார். விஜயகாந்த அதை மறுத்தார்.

பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி நான் என்றார். அதை பா.ஜ.க. மறுத்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், மீண்டும், மீண்டும் தன் காரியத்தில் கண்ணாயிருந்தார். எதுவும் நடக்கவில்லை என்றதும், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர மாட்டுத் தரகர்போல தே.மு.தி.க. பேரம் பேசிவருவது நல்லதல்ல என்று சொல்லியிருக்கிறார். தன்னுடைய தொழிலுக்குப் போட்டி என்றால், பாவம் எரிச்சல் வரத்தானே செய்யும்!

Pin It