cartoon children

விசுவ இந்து பரிசத்தின் அனைத்துலகச் செயலாளர் ஷம்பத்ராய் என்பவர், இந்துப் பெற்றோர்கள் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 25 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் நான்கு குழந்தைகளை வளர்க்க முடியாதா? எத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்கள் முடிவு செய்ய முடியாது என்று பேசியிருக்கிறார்... இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர், பெண்ணுடைய கர்பப்பை மீது ஆணாதிக்கம் அல்லது இந்தச் சமூகம் செலுத்துகின்ற ஆதிக்கத்தில்தான் அடங்கியுள்ளது. குழந்தைப் பருவம் மாறுவதற்கு முன்பே தாயாகிவிட வேண்டிய விதிதான் பெண்ணுக்கு இந்த மண்ணில் எழுதப்பட்டிருந்தது.

அவளுடைய திருமண வயதைப் படிப்படியாக உயர்த்தியதன் மூலம், ஒரு தொடர் போராட்டத்தின் விளைவாகவும், கல்வி உரிமைகள், வேலை வாய்ப்பு உரிமைகள் அவளைச் சென்றடைந்ததன் விளைவாகவும் இன்றைய தினம், பெண் மகப்பேறு அடையும் வயது குறைந்தபட்சம் இருபதைத் தாண்டி இருக்கிறது.

குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், 16,17இல் இருந்து இன்றைய தினம் இரண்டு அல்லது ஒன்று என்பதாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயர்த்தப்பட்ட திருமண வயதும், குறைக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும்தான் பெண்ணை ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது. இன்றைய பெண், திருமணம் வேண்டுமா - வேண்டாமா, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா - வேண்டாமா என்றெல்லாம் யோசிக்கத் தலைப்பட்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், இந்த நாட்டின் பெண்கள் 4 பிள்ளை பெற வேண்டும், 40 பிள்ளை பெறவேண்டும் என்றெல்லாம் அரசியல்வாதிகள் பேசத் தலைப்படுவது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பெண்கள் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படிச் சொல்லுகிற அரசியல்வாதிக்கு ஒன்று தெரிய வேண்டும். அவர் கட்சிப் பெண்களிடம், ஏன் அவர் வீட்டிலுள்ள பெண்களிடம் கூட இதைப் பேச முடியாது. எனவே பொதுவெளியில் இது போன்று பிதற்றாமல் இருப்பது நல்லது-.

இது போன்ற கட்சியில் ‘மிஸ்டு கால்’ கொடுத்துச் சேர வேண்டாம் என்று பெண்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் அவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை ‘மிஸ்’ பண்ண வேண்டி வந்துவிடும்.

  - ஓவியா, புதிய குரல்