“தி.மு.கவில் இளைஞர்களே இல்லை” என்று இப்போது சில அரசியல் ‘ஆய்வாளர்கள்’ சொல்வதுபோல, 1993ஆம் ஆண்டிலும் சொன்னார்கள். காரணம், தி.மு.கவிலிருந்து வைகோவும் அவரது ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டிருந்த நேரம் அது. தாங்கள்தான் உண்மையான தி.மு.க எனக் கட்சிக்கும் கொடிக்கும் அவர்கள் உரிமை கோரி வந்த வேளையில், ஒட்டுமொத்த இளைஞர்களும் அந்தப் பக்கம் சென்றுவிட்டார்கள் என்பதே ஊடகங்களின் மதிப்பீடாக இருந்தது.

nagoor hanifa

1994ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் சமூக நீதிப் பேரணியை நடத்தியது தி.மு.கழகம். அந்த மாபெரும் பேரணியில் பெரும்பாலும் இளைஞர்கள்தான் பங்கேற்றனர். அவர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது வயதில் முதுமையைத் தொட்டபோதும், குரலிலும் உணர்விலும் இளமை குறையாத கொள்கை முழக்கம். அந்த முழக்கத்தின் பெயர், இசைமுரசு நாகூர் அனீபா.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை நிறைந்திருந்த கூட்டத்தைக் கட்டிப்போட்டது அனீபாவின் கொள்கைக் குரல். “வளர்த்த கடா.. மார்பில் பாய்ந்ததடா’ என்று அவர் பாடியபோது அதன் உள்ளர்த்தம் புரிந்து கடல் அலைபோல தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்தபோது, கழகம் எப்போதும் கலைஞர் பக்கமே என்று சொல்வது போல ஆரவாரம் எழுந்தது.

அவர் பாடாத தி.மு.கழக மாநாடு இல்லை என்கிற அளவில் தன் வாழ்நாள் முழுவதும் மார்க்கப் பாடல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்திற்குச் சற்றும் குறையாமல் இயக்கப் பாடல்களையும் பாடியவர். காங்கிரஸ் ஆட்சியின்போது அவர் பாடிய, ’கீழே இறங்கு.. நீ கீழே இறங்கு’ என்ற பாடல் பின்னர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் அதே உணர்வுடன் அவரால் பாடப்பட்டபோது, 1960களின் உணர்வை 2006லும் தி.மு.கவினர் பெற்றனர்

அன்பை மதிக்கும் அதே நேரத்தில், இயக்கத்தைவிட எந்தத் தனி மனிதரும் பெரிதல்ல என்று கழகத்தின் பக்கம் உறுதியாக நின்று கொள்கை முழக்கம் செய்தவர் இசை முரசு. சட்டமேலவை உறுப்பினராக, வக்ஃபு வாரியத் தலைவராக, கழக நிர்வாக அமைப்புகளில் உறுப்பினராக அவருக்கு வாய்ப்புகள் வழங்கியது கட்சித் தலைமை. ஆனால், அதைவிடவும் அவர் பெரிதாக எண்ணியது கழக மேடைகளில் கொள்கை முழக்கம் இசைப்பதைத்தான்! மாநாட்டு மேடைக்கு கலைஞர் வந்தபிறகு, ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலைப் பாடி நிறைவு செய்வார் அனீபா. அவரது இசைக்கச்சேரி நிறைவுபெறும்வரை கட்சியின் தலைவர் காத்திருப்பார் என்பதுதான் நாகூர் அனீபா பெற்ற பெரும் பதவி.

8.-4.-2015 அன்று அவர் மறைந்தாலும் தி.மு.கவின் கொள்கைக்குரலாக என்றென்றும் ஒலித்துக்கொண்டிருப்பார் இசைமுரசு நாகூர் அனீபா.