வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவும், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலவும் இருக்கிறது ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ண (ரெட்டி)னின் பேட்டி. ‘எங்கள் வளத்தை வேட்டையாடுவதற்கு எவரேனும் உள்ளே வந்தால், அவர்களை நாங்கள் வேட்டையாடாமல் விடமாட்டோம்’ என்று ஆணவத்தின் உச்சியில் நின்று பேசியிருக்கிறார் அவர்.

fake encounter 340மரம் வெட்டுவதற்குக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட 20 தமிழர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, மோதல் சாவு (என்கவுண்டர்) நடந்திருப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது-. இதுபோல் சொல்லப்பட்ட பல மோதல் சாவு அறிக்கைகள் பொய் என மெய்ப்பிக்கப் பட்டுள்ளன. இந்த நிகழ்விலும் அதற்கான சான்று சிறிதும் இல்லை. காவல் மற்றும் வனத்துறையினரோடு மோதிவிட்டு, அவர்கள் தப்பிச் செல்ல முயன்றிருப்பார்கள் எனில், துப்பாக்கிக் குண்டுகள் அவர்களின் முதுகுப் பக்கத்தில்தான் பாய்ந்திருக்கும். ஆனால், இறந்து கிடக்கும் 20 தமிழர்களின் மார்புகளைத்தான் குண்டுகள் துளைத்திருக்கின்றன. அதுவும் மிக அருகில் நின்று அவர்களைச் சுட்டிருக்கிறார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

திருப்பதி வனப்பகுதியில், இரவு நேரத்தில், அவர்கள் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடந்ததாகச் சொல்லப்படுவது, கடைந்தெடுத்த பொய்யாக இருக்கிறது. பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் கீழே இறக்கப்பட்டுக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்குதான் இந்தப் படுகொலை நடந்துள்ளது-. அங்கிருந்து தப்பி வந்த சேகர் என்பவர், தன் ஊருக்கு வந்து நடந்ததைக் கூறியபிறகுதான் உண்மையை உலகம் அறிந்தது.

அந்தக் கொலைகளும் கூட, சாதாரணமாக நடை பெறவில்லை. பல்வேறு சித்திரவதைகளுக்குப் பிறகே அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உடலின் பல்வேறு பாகங்களில் கடுமையான காயங்கள் தென்படுகின்றன. நெருப்பில் எரித்தும் சிலரை வதைத்திருக்கிறார்கள் என்பது, கருகிப் போயிருக்கும் உடல்களிலிருந்து தெரிய வருகிறது. ஏன் இவ்வளவு கொலை வெறி என்று நமக்குப் புரியவில்லை.

அவர்கள் வெறும் கூலித் தொழிலாளர்கள்தாம். செம்மரங்களை வெட்டிக் கொண்டு சென்னைத் துறைமுகத்திற்கு வந்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி வணிகம் செய்கிற அளவுக்கு அந்தத் தொழிலாளர்களுக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை. கூடுதலாகக் கூலி தருகிறோம் என்று சொல்லியே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். வறுமையில் வாடும் அம்மக்கள், ஏதோ கொஞ்சம் கூடுதல் பணம் கிடைக்கும் என்னும் ஆசையில் அங்கே மரம் வெட்டச் சென்றிருக்கிறார்கள்.

ஆந்திர அரசுக்குத் துணிவு இருக்குமானால், இந்த ஏழைத் தொழிலாளர்களைக் கொண்டு செம்மரங்களை வெட்டி வெளிநாட்டுக்குக் கடத்தும் தேச விரோதிகளைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஏராளமாக இருக்கிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிச்சல் இல்லை என்பது மட்டுமின்றி, அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே நம் ஏழைத் தொழிலா ளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்களோ என்றும் ஐயம் எழுகிறது.

இப்படுகொலையைக் கண்டித்து உடனடியாக நீதிமன்றங்கள் தாமே இவற்றை வழக்காக எடுத்திருக்கலாம். இப்போது, வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலாவது, படுகொலையில் ஈடுபட்ட காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, இந்நேரம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

காக்கை குருவிகளைக் கூட இப்போதெல்லாம் எவரும் கேள்வி முறையின்றிச் சுட்டுத் தள்ளிவிட முடியாது. மானை வேட்டையாடிய குற்றத்திற்குத்தான், ஒரு வடநாட்டு நடிகர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம். எந்த விலங்குக்கு எந்தத் தீங்கு நடைபெற்றாலும், மத்திய அமைச்சர் மேனகாகாந்தி ஓடோடி வந்து குரல் கொடுக்கிறார். விலங்குகளுக்கு இருக்கிற பாதுகாப்பு கூட இன்று தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது-.

மராத்திய அரசு மாடுகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. சில ‘ஜீவகாருண்யர்கள்’ அச்சட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று அன்றாடம் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மாடுதான் முக்கியம், மனிதர் முக்கியமில்லை.

எல்லாம் போகட்டும் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இங்கே ஓர் அரசு இருக்கிறதா, முதலமைச்சர் என ஒருவர் இருக்கிறாரா என்னும் கேள்விகளுக்கு எவருக்கும் சரியாக விடை தெரியவில்லை. பட்டும் படாமலும் ஒரு அறிக்கையும், ஏதோ ஒரு ஈட்டுத் தொகையும் வழங்கிவிட்டால் போதும் என்று தமிழக அரசு கருதுகிறது. போயஸ் தோட்டத்தில் இருந்து வெளிவந்திருக்கும் அறிக்கையோ, ஆந்திர வனப்பகுதியில் நடைபெற்றிருக்கும் படுகொலை குறித்துச் சில சந்தேகங்கள் இருப்பதாக மட்டுமே கூறுகிறது-.

அடிப்பதுபோல் அடிக்கிறோம், அதை நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ள வேண்டாம் என்னும் போக்கில்தான் மேற்காணும் அறிக்கைகள் உள்ளன. தமிழ் அமைப்புகளும், திராவிட இயக்கங்களும் உணர்ச்சிப் பூர்வமான போராட்டங்கள் சிலவற்றை நடத்தின. சித்தூருக்கே போய் காவல் ஆணையர் அலுவகத்தை முற்றுகையிடும் முயற்சியிலும் ம.தி.மு.க. ஈடுபட்டது. ஆனால், அனைத்தையும் ஏளனம் செய்வதுபோல், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு(நாயுடு) ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கேலிச் சிரிப்பை உதிர்க்கிறார். வனத்துறை அமைச்சரோ, மேலும் மேலும் வாய்நீளம் காட்டுகிறார்.

ஆந்திராவிற்குத் தாங்கள் ஒன்றும் இளைத்தவர்கள் இல்லை என்பதைப் போலத் தெலங்கானா அரசு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் ஐந்து இசுலாமியர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லிச் சுட்டுக் கொன்றிருக்கிறது. தீவிரவாதிகளை விசாரிப்பதற்கு அம்மாநிலத்தில் நீதிமன்றங்கள் எவையும் இல்லை போலும்.

இவையெல்லாம் நல்லதற்கில்லை என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய நேரம் இதுவாக இருக்கிறது. இருமாநில மக்களிடையே தேவையற்ற பகைமையும், விரும்பத்தகாத மோதல்களும் தொடர்ந்து நடைபெறுமானால், அதற்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும்.

Pin It