தளபதி மு.க.ஸ்டாலினின் வலைத்தளத்தில் ‘பிள்ளையார் சதுர்த்தி’க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு செய்தி வெளியானது. மறுநாளே, அவருக்குத் தெரியாமல் தவறுதலாக அது வெளியிடப்பட்டுவிட்டது என்று, தி.மு.க. தலைமைக் கழகம் மறுப்புத் தெரிவித்தது.

vinayagar- 600இது குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, தி.மு.கழகம் இந்துக்களை அவமதித்துவிட்டதென்றும், சுயமரியாதை உள்ள இந்துக்கள் அனைவரும் தி.மு.க.வை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பேட்டி அளித்தார். ‘அப்படியானால், சுயமரியாதை உள்ள தமிழர்கள் அனைவரும் பா.ஜ.க.வை விட்டு வெளியேற வேண்டும்’ என வலைத்தளத்தில் திராவிடப் புரட்சி தன் கருத்தைப் பதிவு செய்தார்.

வாசகர் கடிதம் பகுதியில், தினமலர் (07.09.14) மிகத் ‘தந்திரமான’ ஒரு மடலை வெளியிட்டிருந்தது. “பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்வதாலேயே, ஒருவர் அந்த விழாவை ஏற்கிறார் என்று ஆகிவிடாது” என்று விளக்கம் கொடுத்து விட்டு, “ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்துச் சொல்பவர்கள், பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்துச் சொல்வதில் என்ன தவறு?” என்று அம்மடலில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்தக் கேள்வி நியாயம்தானே என்று தோன்றும். திராவிட இயக்கங்கள் இந்து மதத்தை எதிர்க்கும் அளவிற்குப் பிற மதங்களை எதிர்ப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் நெடுநாள்களாகவே உள்ளது-. இவர்களின் மதச் சார்பின் மையே ‘இந்து மதச்சார்பின்மைதான்’ என்று குற்றம் கூறுவோரும் உண்டு.

ஓர் உண்மையை நாம் மறைக்க வேண்டியதில்லை. நாம் எந்த மதத்தோடும் உடன்பாடுடையவர்கள் இல்லை. எந்தக் கடவுளையும் நம்புகின்ற வர்களும் இல்லை. ஆனால், பிற மதங்களை விட, இந்து மதத்தின் மீது நம் தாக்குதல் கூடுதலாகத்தான் உள்ளது. ஏன்?

ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமி யரோ, கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறித்துவரோ, நம்மைச் ‘சூத்திரன்’ என்றோ, ‘பஞ்சமன்’ என்றோ கூறுவதில்லை. இந்து மதத்தின் இருப்பினால் எல்லாச் சமூக அதிகாரங் களையும் பெற்றுள்ள பார்ப்பனர்களே நம்மைச் சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் கூறி இழிவு செய்கின்றனர். எவன் நம்மை இழிவாகப் பேசுகின் றானோ அவனை நாம் எதிர்ப்பது இயற்கையானதும், நியாயமானதும் ஆகும்.

பூணூலை அறுத்துவிட்டு, சேரி களையும், ஊர்களையும் இணைத்துவிட்டு, தில்லை உள்பட எல்லா இந்துக் கோயில்களிலும் நந்தனார்களுக்குக் கதவுகளை அகலத் திறந்து வைத்துவிட்டு, ‘இந்துக்கள் எல்லோரும் சமம்’ என்று அறிவித்தால், அது ஏற்கக் கூடியதாக இருக்கும்.

அந்த நாள் என்று வருகிறதோ, அன்று இந்து மதத்தின் மீதான கூடுதல் தாக்குதலை நாமும் நிறுத்திக் கொள்ளலாம்!