ஆடம்பரமான அறிவிப்புகள், மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விளம்பரங்கள் என்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய தமிழக அரசு, பொருளாதார வளர்ச்சியில், தமிழகத்தை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்னும் உண்மை நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

tharavaresai-able- 3502012 - 13ஆம் நிதியாண்டிற்கான, மாநிலங்களின் வளர்ச்சி குறித்து, மத்தியப் புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்திய மாநிலங்கள் சிறப்புத் தகுதி பெற்றவை, பெறாதவை என இரு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. எல்லையோரத்தில் உள்ள மாநிலங்கள், கடுமையான வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களுக்கு உள்ளான மாநிலங்கள் ஆகியவை அரசின் சிறப்புக் கவனத்தைப் பெறும்.

அவ்வாறு அல்லாமல், இயல்பான வளர்ச்சிப் போக்கில் உள்ள மாநிலங்களாகப் பதினெட்டு மாநிலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் தமிழகம். இந்தப் பதினெட்டு மாநிலங்களுடைய வளர்ச்சிப் பட்டியல்தான் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பட்டியல் ஆண்டுதோறும் வெளிவரும் ஒன்றுதான். 2011ஆம் ஆண்டுவரையில் 3 அல்லது 4ஆவது இடத்திலேயே தமிழகம் இருந்தது. பீகார் போன்ற மாநிலங்கள், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வளர்ச்சி மிகவும் குன்றி, பட்டியலின் கீழ்ப் பகுதியில் காணப்பட்டன. ஆனால் இன்றோ, நிலமை தலைகீழாக மாறியிருக்கிறது. கீழே இருந்த பீகார் முதல் இடத்திற்கு வந்துள்ளது. முன்வரிசையில் இருந்த தமிழகம், ஜெயலலிதா ஆட்சியில், கடைசி இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அடுத்த பக்கம் அந்தப் பட்டியல் உள்ளது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, அம்மாநில வேளாண்மை, தொழில், கல்வி ஆகிய பல்வேறு தளங்களைச் சார்ந்தது. பொதுவாக, அறிவு வளர்ச்சி, பொருளதார வளர்ச்சி என இரண்டாகப் பகுத்துப் பார்க்கலாம்.

புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டி ருக்கிற இப்போதைய அறிக்கை பொருளாதார வளர்ச்சி பற்றிப் பேசுகிறது. அந்த வளர்ச்சி யில்தான், ‘மிகப்பெரிய சாதனையாக’ 18 மாநிலங்களில், 18ஆவது இடம் என்பதாகத் தமிழகத்தின் நிலை அமைந்துள்ளது.

இந்நிலைக்கு என்ன காரணம்? அல்லது என்னென்னவெல்லாம் காரணம் என்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

மின்வெட்டுதான் முதல் காரணம் என்பதை மறுக்க முடியாது. 2001 முதல் 2006 வரை தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா அரசு, மின் உற்பத்திக்கான எந்த செயல் திட்டத்தையும் வகுக்கவில்லை-. எனினும், 2006ஆம் ஆண்டுவரை மின்வெட்டு இல்லாமல் இருந்ததற்கு, 1996 - 2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களே பின்புலமாகும். அப்போது தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தி, 2002க்குப் பிறகு தொடங்கிற்று. ஆனால், அதற்குப் பிறகு மூன்று நான்கு ஆண்டுகள் எந்தத் திட்டமும் இல்லாத காரணத்தால், 2010ஆம் ஆண்டே மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கி விட்டது. அதன் காரணமாக ஒரு நாளைக்கு 2 முதல் 4 மணி நேரம் வரை, மின்வெட்டு நடைமுறைக்கு வந்தது.

அதன் பொருட்டு, அன்றைய தினம் மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி கடும் கண்டனங் களுக்கும், எள்ளல்களுக்கும் உள்ளானார். அவரை மின்துறை அமைச்சர் என்றில்லாமல், மின்வெட்டு அமைச்சர் என்றெல்லாம் ஊடகங்கள் கேலி பேசின.

ஒவ்வொரு நாளும் மின்சாரத்தின் பயன்பாடும் தேவையும் கூடிக்கொண்டே போகின்றன. ஆனால் அதற்கு இணையாக மின்உற்பத்திக் கூட்டப்படவில்லை என்றால், மின் வெட்டு தவிர்க்க முடியாததாகவே ஆகும். இதனை உணர்ந்து ஒவ்வொரு அரசும், மின் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதனை 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜெயலலிதா அரசு செய்யத் தவறியதால் விளைவுகளை இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக் கிறோம்.

2007 - 2008 ஆம் ஆண்டு களில் மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்கள்தான் இப்போது (2014) ஓரளவு மின் உற்பத்தியைத் தந்து கொண்டுள் ளன. முற்றுமாக மின்சாரமே இல்லாமல், இருண்ட தமிழகமாக ஆகிவிட்ட 2012 - 13இல் தொழில் வளர்ச்சி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

சிறு குறு தொழில் களும் ஏறத்தாழ அழிந்து போகும் நிலைக்கு வந்துவிட்டன. இனி மின்சாரம் கிடைத்தாலும், மீண்டும் மேல் எழ முடியாது என்னும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டி ருக்கிறது. இந்தச் சூழலில்தான், 2012 - 13 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் வந்து நிற்கிறது. இனி கீழே போவதற்கு இடமில்லை.

மின்வெட்டைத் தாண்டி நம் வீழ்ச்சிக்கு இன்னும் சில காரணங்களும் உள்ளன. அவற்றுள் முதன்மையானது, தமிழக அரசின் வெற்று அறிவிப்புகளும், வீண் விளம்பரங்களும் ஆகும். சட்ட மன்றத்தில் 110ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்கள் இன்றுவரையில் நிறை வேற்றப்படாமல், ஏடுகளில் மட்டுமே தூங்கிக் கொண்டி ருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டிற்கும் நிதி நிலை அறிக்கை ஒன்று சட்டமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அந்த அறிக்கையில் காட்டப்படும் வரவுகள் அனைத்துக்குமான, வழி வகைகள் சொல்லப்பட்டிருக்கும். எனவே எந்த ஒரு வரவையும், அதன் மூலமாக நிறைவேற்றப்படக் கூடிய திட்டங்களையும் தெளிவாக வரையறுக்க முடியும். அவ்வாறு இல்லாமல் அமைச்சர வைக்கான தனி உரிமையைப் பயன்படுத்தி 110ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கான வரவு பற்றிய தெளிவான வழிமுறை ஏதும் யாருக்கும் தெரியாது.

அது குறித்த எந்த ஒரு கேள்வியையும், எந்த ஒரு எதிர்க்கட்சி உறுப்பினரும் கேட்க முடியாது. ஆகவே அவை அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக ஆகிவிடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அப்படித்தான் இன்றைய தமிழகத்தின் நிலை ஆகிவிட்டது என்பதை நாம் கண்கூடாக அறிகிறோம்.

இந்தச் சூழலில் அரசின் சார்பில் விளம்பரங்கள் மட்டும் அளவுக்கு மீறி ஊடகங்களுக்கு அளிக்கப்படுகின்றன. நடைபெறாத வேலைகளுக்குச் செய்யப்படும் விளம்பரங்களால், ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்பது போல நிறைவேறாத திட்டத்திற்கு இரண்டு செலவுகள் ஆகின்றன. கவர்ச்சித் திட்டங்களால் மட்டுமே காலத்தை ஓட்டி விட முடியும் என்று, இன்றைய தமிழக அரசு நம்புகிறது. ‘அம்மா’வின் பெயரால் அனைத்து விளம்பர உத்திகளும் கையாளப் படுகின்றன.

மிகவும் பின்தங்கிய பீகார் மாநிலம் முதல் இடத்தைப் பிடித்திருப்பது பெரும் வியப்பிற்கும் பாராட்டிற்கும் உரியது. அங்கே எந்த விதமான கனிம வளமும் கிடையாது. வேளாண்மையோ, தொழிற் சாலைகளோ குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. நீண்ட நெடு நாள்கள், இந்தியாவிலேயே கல்வியில் பின்தங்கி இருந்த மாநிலமும் பீகார்தான்.

ஆனால், இத்தனை தடைகளையும் தாண்டி, 10.79 என்னும் அளவிற்குப் பொருளாதார வளர்ச்சியில் அம் மாநிலம் இன்று முன்னேறியுள்ளது. 9 விழுக்காடு, 8 விழுக்காடு என்னும் அளவில் மாராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ந்துள்ளன. ஐந்துக்கும் ஆறுக் கும் இடைப்பட்ட நிலையில், 5 மாநிலங்கள் உள்ளன. கோவா போன்ற மிகச் சிறிய மாநிலங்கள், ஜார்கண்ட் போன்ற மிகப் புதிய மாநிலங்கள் எல்லாம் கூட, வளர்ச்சியில் தமிழகத்தை விஞ்சி நிற்கின்றன. 4 விழுக்காட்டுக்கும் குறைவாக (3.39) வளர்ச்சி விகிதத்தில் பின்னடைந்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக ஆக்குவேன் என்று முதலமைச்சர் கொடுத்த உறுதிக்கு என்ன பொருள் என்பது இப்போதுதான் புரிகிறது. கடைசி வரிசையில் முதல் மாநிலமாக ஆக்குவது என்று அவர் முடிவெடுத்துச் செயல் பட்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.