sathasivam karuchettaithamilar feb14 20142014 ஜனவரி 13ஆம் நாளோடு, இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதேபோன்று, மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்ட நாடாகவும் இந்தியா அறிவிக்கப்படுவதற்கான முன்னறிவிப்பாக, உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு அமைந்திருக்கிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் என்று சொல்லப்பட்ட, மாதையன், பிலவேந்திரன்,ஞானப்பிரகாசம்,சைமன் ஆகிய நால்வரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

இவர்களோடு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேருக்கும் தண்டனைக் குறைப்புச் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு, சனவரி 21ஆம் நாள் சிறப்பு வாய்ந்த இத்தீர்ப்பினை வழங்கியது.

நம்நாட்டில், அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த மனித உரிமைக் கொடி உச்சத்தில் பறக்க, வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மதிப்பிற்குரிய நீதியரசர் களுக்கு முதலில் நம்முடைய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள் வோம். அண்மைக்காலமாக உருவாகி வந்த, நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை யில்லாத் தன்மையை இத்தீர்ப்பு மாற்றியிருக்கிறது. நீதியமைப்பின் மதிப்பு மறு பதிப்புச் செய்யப்பட்டுள்ளது என்றுகூடச் சொல்லலாம்.

இத்தீர்ப்பில், தண்டனைக் குறைப் பிற்கு நீதிபதிகளால் சுட்டிக்காட்டப் பட்டுள்ள காரணங்கள், தூக்குத்தண்ட னைக்கு எதிராகப் போராடி வரும் மனித உரிமை ஆர்வலர்களால் இதுவரையிலும் முன்வைக்கப்பட்டவையே என்பது குறிப்பிடத்தக்கது. மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வருக்கும் 2004 ஜனவரி 29இல் தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதையடுத்து, நால்வரும் அதே ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பினர். அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு அப்துல் கலாம்.

அதற்கடுத்து திரு பிரதீபா பாட்டீல் என இரண்டு குடியரசுத் தலைவர்களின் கருணையைக் கடந்து வந்த, அந்த மனுக்கள், இன்று குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியால், 2013 பிப்ரவரி 8ஆம் நாள் தள்ளுபடி செய்யப்பட்டது. தான் பதவி ஏற்றதே, கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்வதற்குத்தான் என்பதுபோல, வரிசையாகத் தள்ளுபடி செய்தார்.

‘9 ஆண்டுகள் கால தாமதமாகக் கருணை மனுக்களின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்ததால், ஒவ்வொரு நொடியும் சாவினை எதிர்பார்த்து, காத்திருக்க நேரிட்டதால், மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு, மன நிலையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக் கின்றனர். எனவே மரணதண்டயைக் குறைக்க வேண்டும் என்னும் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதே போன்று மற்ற 11 பேரின் மனுக்களில் வைக்கப்பட்டுள்ள வாதங்களையும் இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது’ என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள வரிகள் இன்னும் தூக்குக் கயிற்றின் கீழ் நின்று கொண்டிருக்கும் பலருக்கும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியிருக்கின்றன.

அவர்களுள், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் இத்தீர்ப்பின் உயிர்ப்பான பகுதியான ‘காலதாமதம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்’ என்பது, முற்று முழுதாகப் பொருந்தக் கூடியது. காரணம், இம்மூவரின் கருணை மனுக்களுக்கு வயது ஏறத்தாழ 12 ஆண்டுகள். காலீஸ்தான் தீவிரவாதி என்று சொல்லப்படும் தேவேந்திர சிங் புல்லர் வழக்கின் நிலையும் இதே போன்றது தான்.  22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைபட்டுக் கிடக்கும் இவர்களிடம் எஞ்சியிருப்பது உயிர் மட்டுமே. இந்த உயிர்களைக் காப்பது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் சட்டத்தின் பெயரால் உயிர்கள் பறிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, போராட் டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

“குற்றத்தின் தீவிரத் தன்மையைக் குறைக்கின்ற சூழ்நிலையை பரிசீலிக்கவும், மரணதண்டனையை மாற்றவும், அரசின் அறிவுரை இல்லாமலே முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்க வேண்டாமா? வேண்டாம் என்றால், முன்முடிவுடன் அல்லது ஒருதலைப்பட்ட நிலையில் வழங்கப்படும் தீர்ப்புகளை எப்படித் தடுப்பது?” என்று கேட்கிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமன். கருணை மனுக்களின் மீது முடிவெடுக் கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் இருக்கிறது. ஆனால் அது தன்னிச்சையான அதிகாரமாக இல்லை என்பதற்கு, திரு வெங்கட் ராமன் முன்வைக்கும் வினாக்களே சான்றாக அமைவதைப் பார்க்க முடிகிறது. உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை குறித்த, குடியரசுத் தலைவரின் பார்வையை, ஆட்சியாளர்களின் முடிவுகள் கட்டுப்படுத்துகின்ற ஒரு நிலை இங்கே இருக்கிறது.

“அரசியலமைப்பின் மிக உயரிய அந்தஸ்தில் இருப்பவர் கள் என்பதால், கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவரும், ஆளுநரும் முடிவு எடுக்கவேண்டிய காலத்தை அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய முன்னோர்கள் வகுக்க வில்லை. அப்படியென்றால், கருணை மனுக்கள் மீது நியாயமான காலத்துக்குள் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதே அர்த்தம்.” என்கிறது உச்சநீதி மன்றத் தீர்ப்பு. காலக்கெடு சட்டத்தில் சொல்லப்படவில்லை என்பதை, தங்களின் தனி உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது, கருணை மனுக்களின் மீது காலந்தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டியது, அவர்களின் கடமை. அந்த நிலையில் இருந்து தவறுகின்ற சூழலில், நீதிமன்றம் தலையிட்டு, அரசியல் அமைப்பையும், அதன் மதிப்பையும் பாதுகாக்கும் என்றும் தெளிவானதொரு விளக்கத்தையும் நீதிபதிகள் வழங்கி யிருக்கிறார்கள்.

‘தூக்குத்தண்டனை உள்ளிட்ட தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதே இத்தீர்ப்பின் நோக்கமே தவிர, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு அரசியல மைப்பின் சட்டப்பிரிவுகள் 72 மற்றும் 161 வழங்கியுள்ள, மன்னிக்கும் அதிகாரம் அல்லது தள்ளுபடி செய்யும் அதிகாரம், மனுவைக் கிடப்பில் போடும் அதிகாரம் ஆகியவற்றில் தலையிடுவது அன்று’ என்று சொல்லப்பட்டுள்ளது.

உண்மையில் நம் நாட்டில், தூக்குத்தண்டனைக்கு ஆளானவர்கள், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர் களுடைய சட்ட உரிமைகளைப் பாதுகாக்க முதன் முதலாக நீதிமன்றம் முன்வந்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. ராஜீவ் கொலை வழக்கு போன்ற அரசியல் தொடர்புடைய வழக்குகளிலும், எத்தனை புனைவுகள் புகுத்தப்பட் டுள்ளன என்பதை, புலனாய்வுத் துறை முன்னாள் அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம் தெளிவாக்கியது. அதுவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டு வந்த வேளையில், தலைமை நீதியரசர் பி. சதாசிவம் தலைமையிலான அமர்வின் தீர்ப்பு, விடுதலையை உறுதி செய்வதாக அமைந்திருக்கிறது.

தண்டனைகள் மட்டுமே ஒருபோதும் குற்றங்களைக் குறைத்து விடாது. தனி மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் போதுதான், சமூகத்தில் குற்றங்கள் குறையும்.