tranport employees strike

தமிழக மக்கள் அன்றாடப் பணிகளில் நிலைகுலைந்து போய் இருக்கிறார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் முடங்கிக் கிடக்கின்றன.

13ஆவது ஊதியக் குழுப் பரிந்துரையை நடைமுறைபடுத்த வேண்டும். ஏனைய பொதுத் துறை தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - இவைதான் போராடும் தொழிலாளர்களின் வேண்டுகோள்.

இதே வேண்டுகோளை வைத்துச் சென்ற ஆண்டு இவர்கள் போராடினார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்ற அ.தி.மு.க. அரசு இதுவரை சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

இப்போதைய போராட்டத்தில் 21 தடவைகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாட்டுக்கு வராத அரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.

போக்குவரத்துத் துறையில் 10 ஆண்டுகளுக்குக் குறைவாக பணிபுரியும் ஓட்டுநர்களின் ஊதியம் தர ஊதியத்துடன் ரூ.14,500. இவர்களுக்கு அரசு தருவதாகச் சொல்லும் ஊதிய உயர்வு 2.44 சேர்த்தால் ஊதியம் ரூ16,500 ஆக இருக்கும்.

இதே தகுதியுடைய அரசுத் துறை பிற ஓட்டுனர்களின் சம்பளம் ரூ.19,500. இதற்கு இணையாக அதாவது 2.57 ஊதிய உயர்வு கேட்கிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள்.

அதோடு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை 7 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு அதைத் தவணை முறையில் தருவதாக அரசு சொல்கிறது.

இவைகளினால் ஏற்பட்ட தொழிலாளர்களின் கோபம் போராட்டமாக இன்று மாநிலம் முழுவதும் எரிந்துகொண்டிருக்கிறது.

துறை சார்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சனைக்குத் தீர்வு காண முனைவதை விட்டுவிட்டுத் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் போராட்டத்தைத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டிருக்கிறது.

போராட்டக் காரர்கள் பணிக்குத் திரும்ப வில்லை என்றால் அவர்கள் மீது இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்ற ஆணை வலியுறுத்துகிறது.

தொ.மு.ச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 17 தொழில் சங்கங்கள் ஒன்று கூடி, நீதிமன்றம் அரசு சொன்னதை மட்டுமே கேட்டுக்கொண்டு, எங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை என்று கூறி போராட்டத்தைத் தொடர்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை மாவட்டம் தோறும் நடத்தி அரசுப் பணத்தை வீணடிக்கும் இந்த அ.தி.மு.க. அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான வேண்டுகோளை நிறைவேற்றாமல் “அரசு கஜானாவில் பணம் இல்லை’’ என்று சொல்வது ஆளத் தகுதியற்ற அரசுதான் இது என்பதை உறுதி செய்கிறது.

‘‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு’’ - என்கிறார் திருவள்ளுவர்.

இது தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம்! மக்களின் வாழ்க்கை போராட்டம்! அரசுக்கோ பெரும் தள்ளாட்டம்!

Pin It