pardhimakalgari 450“தென்னாட்டில் இருக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் இவைகளுக்கு எல்லாம் தமிழ் தலைமையானது. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய தமிழ்மொழியே, உயர்மொழி, உயர்தனிச் செம்மொழி” என்று சொன்னதுடன் உரிய சான்றாதாரங்களுடன் முதன் முதலாக நிறுவியவர் அறிஞர் பெருந்தகை பரிதிமாற்கலைஞர்.

இவரின் இயற்பெயர் வி.கோ.சூரியநாராயணன் (சாஸ்திரி) 1870ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 6ஆம் நாள், இலட்சுமி அம்மாள் & கோவிந்த சிவன் இணையரின் மகனாகப் பிறந்தார்.

மதுரை திருப்பரன்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரி இவரின் சொந்த ஊர்.

சிறுவயதில் தன் தந்தையிடம் சமஸ்கிருதம் படித்தார். பின்னர் மதுரையில் புகழ்பெற்றத் தமிழ் அறிஞரான சபாபதி முதலியாரிடம் முறைப்படித் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார்.

இவரின் கல்வி மதுரை உயர்நிலைப்பள்ளியில் தொடங்கியது. பசுமலைக் கல்லூரியில் தன் இடைநிலைத் தேர்வை முடித்தார். இதுதான் தொடக்ககால அமெரிக்கன் கல்லூரி.

பசுமலைக் கல்லூரியில் பரிதிமாற்கலைஞர் படிக்கும் பொழுது, அவரின் தமிழ் அறிவாற்றலை அறிந்த இராமநாதபுர சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி, அவரைச் சென்னை கிருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி இளங்கலை பட்டப் படிப்பைத் தொடர உதவி செய்தார்.

அங்கு தமிழ், தத்துவம் இரு பாடங்களிலும் மாநிலத்தின் முதல் மாணவராகத் தேர்ந்து, மன்னர் பாஸ்கர சேதுபதித் தங்கப் பதக்கம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழாசிரியராக அவரின் தமிழ்ப்பணி தொடங்கியது.

பரிதிமாற்கலைஞர் பாடம் நடத்துகிறார் என்றால், வகுப்பின் அனைத்து மாணவர்கள் மட்டுமில்லாமல், பிற துறைகளில் பயிலும் மாணவர்களும் கூட வகுப்பில் வந்தமர்ந்து பாடம் கேட்பார்கள்.

ஏனெனில் தனித்தமிழில் உரிய சான்றுகள், மேற்கோளுடன், எளிமையாகப் பயிற்றுவிக்கும் திறன் என்பதை மாணவர் அறிந்திருந்தனர்.

தமிழின்பால் பற்றுடைய மாணவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தொல்காப்பியம், நன்னூல் உட்பட இலக்கியங்களைச் சொல்லிக்கொடுப்பார்.

கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த சங்கப் பாடல்களுக்கு உரை எழுதி இருக்கிறார்.

தமிழ்க் குழந்தைகள் அவர்தம் 12ஆம் வயது வரை, கட்டாயம் தமிழிலேயே பாடம்படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதனை முழக்கங்களாக எழுப்பச் செய்தார்.

சென்னையில் ‘சென்னைச் செந்தமிழுரைச் சங்கம்’ என்று சங்கத்தை நிறுவிய பரிதிமாற்கலைஞர், இதன்மூலம் நூல்களைப் பதிப்பித்து இருக்கின்றார்.

1898ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப்பரணி’ -

1899ஆம் ஆண்டு மழவை மகாலிங்கர் எழுதிய ‘இலக்கணச் சுருக்கம்’ அதே ஆண்டில் புகழேந்திப் புலவரின் ‘நளவெண்பா’ -

1901ஆம் ஆண்டு, உத்தர கோசமங்கை மங்களேசுவரி ‘பிள்ளைத்தமிழ்’, ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

இவை மட்டுமன்றி, பரிதிமாற்கலைஞரின் ஆசிரியர் சபாபதி முதலியாரின் திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ், பஞ்சதந்திரம் உட்பட 67 நூல்கள் இவரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

விவேக சிந்தாமணி, ஞானபோதினி ஆகிய தமிழ் இதழ்கள் இவரின் கட்டுரைகளைத் தாங்கி அன்று வெளிவந்துள்ளன. அவைகளைத் தொகுத்துத் ‘தமிழ் வியாசகங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறார்.

பரிதிமாற்கலைஞர் பல்வேறு நூல்கள் எழுதி இருக்கிறார்.

மதிவாணன், ரூபாவதி அல்லது காணாமல் போன மகள், கலாவதி, சூர்ப்பநகை ஆகியவை இவரின் உரைநடை நாடகங்கள்.

இதில் ரூபாவதி, காலவதி ஆகிய இருநாடகங்களை மேடையேற்றி அவ்விரு நாடகங்களிலும் பரிதியார் பெண்வேடமிட்டு நடித்திருக்கிறார், 1898ஆம் ஆண்டில்.

மானவிஜயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து, சித்திரக் கவி ஆகியவை இவரின் செய்யுள் நாடகங்கள்.

‘தமிழ் மொழியின் வரலாறு’ இவரின் ஆய்வு நூல்.

நாடக இலக்கண நூலாக இவர் எழுதிய  நூல் ‘நாடகவியல்’

தாமோதரம்பிள்ளை, கடிகை முத்துப்புலவர், அருணாசலக்கவிராயர், மயிலேறு பெருமாள் பிள்ளை ஆகியோர் உட்பட ஒன்பது பேர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதி இருக்கிறார்.

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் நூலின் 51 பாடல்களுக்கும் இவர், குறிப்பிடத்தக்க உரை எழுதியிருக்கிறார்.

சமகால கருத்துகளைப் பண்டைய இலக்கியம் கொண்டும், தமிழ்ப் பண்பாடு கொண்டும், நாகரிகம், மொழி ஆகியவை கொண்டும் சான்றுகளுடன் கூடிய ஆய்வு நோக்கில் இவரின் எழுத்தும், பேச்சும், செயலும் இருந்தது.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைய முனைந்தபொழுது பாண்டித்துரைத் தேவருடன் இணைந்து பெருமுயற்சி செய்தவர், பரிதிமாற்கலைஞர்.

1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் மதுரையில் நிறுவப்பட்டது நான்காம் தமிழ்ச் சங்கம்.

அச்சங்கத் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட பரிதிமாற்கலைஞர் அச்சங்கத்தின் எதிர்காலம், அதன் செயல்பாடுகள், தமிழ்மொழிக்கு அச்சங்கம் ஆற்ற வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து விளக்கமாகப் பேசினார்.

அச்சங்கத்தின் சார்பாகச் ‘செந்தமிழ்’ என்ற மாத இதழும் தொடங்கப்பட்டது.

அவ்விதழில் தமிழ் மொழியின் சிறப்பு, மேன்மை, தொன்மை பற்றி விளக்கி, ‘தமிழ் உயர்தனிச் செம்மொழி’ என்ற அரிய ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.

அன்று அவரால் சொல்லப்பட்ட செம்மொழித்தமிழ், கலைஞர் ஆட்சியில் தான் உயர்தனிச் செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது என்பது குறிக்கத் தக்க வரலாறு.

1902ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், கல்லூரிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழை நீக்கிவிட்டு, சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முயற்சி செய்தது.

இதனை அறிந்த பரிதிமாற்கலைஞர் அவர்கள், சென்னைப் பல்கலைக் கழக முடிவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பினார். அறிஞர் மு.சீ.பூரணலிங்கம் பிள்ளை பரிதிமாற்கலைஞருடன் இனைந்தார். பணிந்தது பல்கலைக் கழகம். அது தன் முடிவை மாற்றியது. தமிழே தொடர்ந்தது.

இத்தகைய அறிஞர் பெருந்தகையர் நூல்களை அரசுடைமை ஆக்கினார் தி.மு.கழக ஆட்சியின் முதல்வர் கலைஞர். அவர் செம்மொழி மாநாட்டின் மூலம் பரிதிமாற்கலைஞருக்குச் சிறப்பு செய்தார், அவரின் நூற்றாண்டு கடந்த நிலையில்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பார் வள்ளுவர்.

எலும்புருக்கி நோயால் 1903 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 2ஆம் நாள், 33 ஆம் வயதில் மறைந்தார், பரிதிமாற்கலைஞர்.   

Pin It