இதை நான் சொல்லலங்க. சிங்கப்பூர் இலக்கிய (கவிதை) உலகில் கவனிக்கத்தக்கவராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன் சொல்லியிருக்காங்க. இவர் பெண் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இதைபற்றி இப்ப சொல்ல வருகிறேன்? புரிந்துணர்வு என்பதற்காக! எந்த ஒரு ஆணும் இன்றளவில் தனது கற்பு பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இத்தகு நிலையில் ஒரு பெண் ஆணின் அடிமனதில் சொல்லத் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அரூபத்திற்கு கவிதை வடிவிலே உருவம் கொடுத்துள்ளார். கவிஞரின் ஆண்களின் ஆதங்கம் கவிதை என்னையே குட்டிக் கொள்ளச் செய்தது. இந்த கவிதையை இலகுவாக புரிந்து கொள்கிறோம் (எல்லோரும் அப்படித்தானுங்களே!).

இன்று இலக்கிய உலகிலே பரவலாக தங்களுக்கு என்று ஒரு இடத்தை தைரியமாக பெண்கவிஞர்கள் கட்டி எழுப்பியுள்ளனர். அவர்களின் எழுத்தின் ஆளுமைகளால் பலவித நெடிய போராட்டத்திற்கு பின் (எல்லாம் எழுத்தில்தாங்க). ஆனால் பெண்கவிஞர்களால் பால் சார்ந்து எழுதப்படும் (பொதுவாக பெண் எழுதுவதையே) எழுத்துக்களை இன்றளவும் பலருக்கு ஏற்றுக்கொள்ள புரிந்து கொள்ள மனம் இடம்கொடுப்பதில்லை. அதிலும் ஆதிக்க எழுத்தாளர்கள் அறவே புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது.

இன்று பத்து நபர் பத்து கவிதை எழுதுகையில் கவிதை பத்து விதமாக பார்க்கப்படுகிறது. பத்துவிதமான தொனி வடிவம் என்று கவிதை இப்பிரபஞ்சம் முழுமைக்கும் பரவியுள்ளது. ஆக இங்கே பத்து விதமான கவிதைகளை புரிந்துகொள்வதற்கு புரிந்துணர்வு தேவைப்படுகிறது. இந்த புரிந்துணர்வு இன்று எத்தனை எழுத்தாளர்களிடம் உள்ளது. பலர் ஒருகவிதை தொகுப்பில் பத்துகவிதை தேறினால் போதும் என்கிற ரீதியில் படித்தால் எப்படிங்க இங்கே கவிதை?. இது கவிதையா என்று ஆதங்கப்படும் எழுத்தாளர்கள் அவர்களின் மனதினை (பொதிந்துள்ள ரகசியங்களை) எழுத துணிந்தால் அப்பொழுது புரியும் உள்மன அழுக்குகள் அத்தனையும்!. இந்த புரிந்துணர்வற்ற பயணம் நம்மை மாக்களைவிட கீழான நிலைக்குதான் எடுத்துச் செல்கிறது. இந்த புரிந்துணர்வு கவிதைக்கு மட்டுமல்ல நம்மின் நெடிய பயணமான வாழ்க்கைக்கும் தான்!.

திருமதி மலர்விழி இளங்கோவனின் கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தின் ஒழுங்கீனங்களை சாடுவதாக பாடுவதாகவே எனக்கு தோன்றுகிறது. பாரதியின் கவிதைகள் எப்படி நம்முடைய கன்னத்தில் அறைகிறது. அப்படி இவரது கவிதைகளின் கடைசிவரிகள் நம்மை பாதிக்கும். இந்தக் கவிதையின் கடைசிவரிக்காக காத்திருங்கள் என்று கவிப்பேரரசு வைரமுத்து சொல்லியது போல, திருமதி மலர்விழி இளங்கோவனின் பல கவிதைகளின் கடைசிவரிகளில் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்துள்ளேன். ஆணின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஒரு பெண்ணால் கவிதை எழுதமுடிகிறது. ஆனால் இன்று பெண்மையை பெண்ணியவாதிக் கவிஞர்களின் கவிதையை புரிந்துகொள்ளக் கூடிய அந்த புரிந்துணர்வுத் தன்மை எத்தனை பேருக்கு...?

உங்களுக்காக திருமதி மலர்விழி இளங்கோவனின் ஆதங்கம் இங்கே.

ஆண்களின் ஆதங்கம்.

திருமணமான
இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முறை
கூறியிருப்பாய்...
என்னையே
உனக்கு கொடுத்தேன்
என்று.
எண்ணிப் பார்ப்பாயா
என்றேனும்...
நீ உன்னை
என்னிடம் இழந்த
அதே நொடியில்தான்
நானும் என்னை
உன்னிடம் இழந்திருக்கிறேன் என்று
என்பதனை...

- நீ 'தீ"

Pin It