கலை இலக்கியம் யாவும் கையில் தடி எடுத்தவர்களுக்காகவே என்பதை நோக்கி நகர்கிறது இந்திய அரசியல். இப்போதுதான் ஒரு மாதத்திற்கு முன், தமிழில் வெளிவந்த மெர்சல் என்னும் படம் காவிகளின் எதிர்ப்புக்கு ஆளானது. இப்போது ‘பத்மாவதி’ என்னும் பாலிவுட் படம் கடும் எதிர்ப்புக்கும், கொலை மிரட்டல்களுக்கும் ஆளாகியுள்ளது.

அந்தப் படம், முறைப்படி தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தில் தடை கோரும் அளவிற்கு ஏதுமில்லை என்று அக்குழு கூறியுள்ளதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, தணிக்கைக் குழுவின் முடிவில் தாங்கள் தலையிட முடியாது என்று ஒருமுறைக்கு இருமுறை கூறிவிட்டது. ஆனால் கலவரக்காரர்கள் ஓய்வதாக இல்லை. அங்குள்ள  அரசுகளும் தங்கள் மௌனத்தைக் கலைப்பதாக இல்லை.

ரஜபுத்திர அரசியான பத்மாவதி பற்றிய கற்பனை கலந்த கதை அது.அடக்க ஒடுக்கமான ஆண்களுக்கு அடங்கிய பெண் என்னும் கற்பிதம் உடைக்கப்பட்டு, சுதந்திரமாக ஆடிப்பாடும் காட்சிகள் படத்தில் உள்ளன என்பது எதிர்ப்புக்கு ஒரு காரணம் என்கின்றனர். அலாவுதீன் கில்ஜியுடன் கனவுப் பாடல் ஒன்றில் பத்மாவதி நடனமாடுகிறாள் என்பதுதான் கோபத்திற்கான முதல் காரணம் என்கின்றனர். ஆனால் படத்தில் அப்படி  ஒருகாட்சியே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார், அப்படைப்பின் இயக்குனர் பன்சாலி.

கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கே சென்று கலவரம் செய்து,  படப்பிடிப்புத் தளத்தையே ஒருகும்பல் அடித்து  நொறுக்கியுள்ளது. இப்போது, அப்படத்தின் முன்னோட்டக்  காட்சி இடம்பெற்ற ஒரு திரையரங்கம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, இயக்குனர் பன்சாலி, கதாநாயகி தீபிகா படுகோனே இருவரின்  தலைகளையும் கொண்டு வருபவர்களுக்குப் பத்துக் கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று, ஹரியானாவின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்றுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. உ.பி.யின் துணை முதல்வரே, அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சட்டத்திற்குப் புறம்பாகப்  பேசியுள்ளார்.

ஜனநாயகத்தை விட்டு விலகி, சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா செலுத்தப்படுகிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. ஆயிரம் தலை கேட்கும் இந்த அபூர்வ சிந்தாமணிகளின் கொட்டத்தை அடக்கியே தீர வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.                                                                                  

Pin It