நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்.

இங்கு நோயுற்ற வாழ்வோடு, குறைவுற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

டெங்கு என்ற காய்ச்சல் மாநிலத்தில் பரவலாகவும், வேகமாகவும் பரவிக்கொண்டு வருகிறது.

மாநிலச் சுகாதாரத் துறைச் செயலாளர் சொல்கிறார். 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்று.

ஏறத்தாழ இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் இக்கொடிய காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகளைப் பார்க்கிறோம்.

தூர்வாராத சாக்கடைகள், குப்பை மேடுகள், கொட்டிக் கிடக்கும் கழிவுப் பொருள்கள் எனப் பல்வேறு இடங்களில் சுகாதாரம் சீர்கெட்டு இருப்பது டெங்கு கொசுக்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது.

தமிழக அரசு சுகாதாரப் பணியை சரியாகச் செய்யாமல் கொசு ஒழிப்பு வேலையை முறையாகச் செய்யாமல், டெங்கு காய்ச்சல் நடவடிக்கையை வார்த்தை சாலங்களால் பூசி மெழுகிக் கொண்டிருந்தால் நாடு நாடாக இருக்காது.

1,200 வீடுகளில் டெங்கு கொசுக்களின் புழுக்கள் இருப்பதாகச் சொல்லி அந்த வீடுகளுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பும் வேலையை விட்டுவிட்டு, முதலில் டெங்குவைக் கட்டுப்படுத்தப் போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

Pin It