‘நீட்’ தேர்வு எதிர்ப்பு, தமிழகமெங்கும் பெருநெருப்பாய்க் கிளர்ந்து எழுந்துள்ளது. மாணவி அனிதாவின் உயிர்த் தியாகம், சமூக நீதிப் போராட்டத்தை மீண்டும் கொழுந்து விட்டு எரிய வைத்திருக்கிறது. சபரிமாலா என்னும் ஆசிரியை தன் பணியையே உதறி எறிந்துவிட்டுக் களத்தில் குதித்துள்ளார்.

போராட்டத்தின் அனலைத் தாங்கமுடியாத சிலர் நீதிமன்றம் சென்று, போராட்டங்களுக்குத் தடை பெற முயன்றுள்ளனர். வழக்கம்போல், நீதிமன்றமும், சமூக நீதிச் சிக்கலை வெறும் சட்டம் ஒழுங்குச் சிக்கலாகப் பார்த்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுரை கூற, அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தமிழகக் காவல்துறை அதாவது தமிழக அரசு, செப். 8 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குத் தடை விதித்தது.

பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த திடல் 5.30 மணிக்குக் காலியாக இருந்தது. தடை விதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே 20 ஆயிரம் நாற்காலிகளும் நிரம்பி வழிந்தன. அடிக்க அடிக்கப் பந்து எழும் என்பது அங்கு உண்மையாயிற்று. தலைவர்கள் மேடைக்கு வந்தனர். கூட்டம் தொடங்கிற்று. காவல்துறை கண் பிதுங்கி நின்றது. மக்களின் எழுச்சிக்கு முன்னால், ஒடுக்குமுறை முயற்சிகள் எகிறிப்போயின!

ஆனாலும் ஜனநாயக மறுப்பு வேலைகள் தொடங்கிவிட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முதல் முறையாக, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய 5 பெண்கள் உள்ளிட்ட 81 இளைஞர்கள் மதுரையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது வெறும் தொடக்கம்தான் என்று தெரிகிறது. எப்படியாவது போராட்டத்தை அடக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்து, அதற்கு இங்கே உள்ள கையாலாகாத மாநில அரசைப் பயன்படுத்துகிறது.

முரசொலி பவழ விழாவில், தளபதி அவர்கள் சொன்னது போல மோடி அரசு ஒரு மோசடி அரசு என்பதை நாடு அறிந்துகொண்டது.

இனிமேல், நீட் தேர்வுக்கு எதிராக மட்டுமில்லை, அரசை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும், ஒடுக்குமுறைகள் தொடரும் என்பது தெளிவாகிவிட்டது.

ஜனநாயகம் அடைக்கப்படுகிறது. சிறைக்கதவு திறக்கப்படுகிறது. தோழர்களே அணியமாகுங்கள் - சிறை நம்மை அழைக்கிறது!

Pin It