ஒரு நாட்டின் அரசு, அந்நாட்டு குடிமக்களுக்குக் குடியுரிமை அடையாள அட்டை வழங்குகிறது என்றால் அது ஏற்புடையது.

மாறாக, இந்த அட்டை குடியுரிமைக்கான அடையாள அட்டை இல்லை என்று சொல்லிக்கொண்டு, ரேசன் கடை முதல் சுடுகாடு வரை இந்த அட்டைதான் கட்டாயம் என்று ஆதார் அட்டையைத் திணிப்பது எந்த வகையில் நியாயமாகும்?

ஆதார் அட்டையை அரசு திட்டங்களுக்காகத் தன்னலமாகக் கருதி கட்டாயமாக்கக் கூடாது என்று முன்னர் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

அண்மையில் உச்ச நீதிமன்றம் தனி நபர் இரகசியம் அடிப்படை உரிமை. அதை மறுக்கும் வகையில் ஆதார் இருக்கக் கூடாது எனத் தீர்ப்பளித்தது.

கைரேகை முதல் கருவிழி வரை விஞ்ஞான அடிப்படையில் பதிவு செய்து, தனிமனித உரிமையில் தலையிட்டு மனித உரிமையை மீறியிருக்கிறது பா.ஜ.க.வின் மத்திய அரசு, இந்த ஆதார் அட்டையின் மூலம்.

மத்திய அரசின் ஆதார் நெருக்கடியைப் பயன்படுத்தித் தனியார் கைபேசி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் எண்களை இணைக்க வற்புறுத்தி வருகின்றன.

தனிப்பட்ட ஒருவரின் இரகசியத்தை அரசாங்கமே அறிந்துகொள்ள உரிமையில்லாத போது, தனியார் நிறுவனங்களுக்கு இந்த அத்து மீறிய உரிமை எப்படி வந்தது-?

மத்திய அரசு வழங்கறிஞர் சொல்கிறார் நீதிமன்றத்தில், கள்ளப்பணத்தை கட்டுப்படுத்திக் கண்டுபிடிக்கவும், பெரும் அளவிளான வருமான வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும் ஆதார் உதவு-கிறது என்று.

தினக்கூலிகள், அன்றாடம் காய்ச்சிகள் என்று மக்கள் தொகையில் அதிகமாக வாழும் அடித்தட்டு மக்களிடம் இருக்கும் கருப்புப் பணம், வருமான ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்க இந்த ஆதார் பயன்படும் என்கிறாரா வழக்கறிஞர்?

எரிவாயுவில் ஆதார் எண்ணை இணைத்தால் மானிய விலையை வங்கியில் போடுவோம் என்றார் மோடி.

ஆதார் எண்ணை ரேசன் அட்டையில் இணைக்கச் சொன்னார் அதே மோடி. இரண்டையுமே இழுத்து முடும் நிலைக்கு வந்து விட்டது மத்திய அரசு.

இப்படித் தனிநபர் இரகசியங்களை, அவர்களின் அடிப்படை உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, மக்கள் நலத் திட்டங்களை ஆதார் அட்டையின் மூலம் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் விரோத மோடி அரசுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு தடை, பின்னடைவு.

இதில் எல்லாத் திட்டங்களிலும் ஆதார் அட்டையை இணைக்கும் பா.ஜ.க. அரசு, வாக்காளர் பட்டியலில் ஏன் அதை இணைக்கச் சொல்லவில்லை.

தனிமனித இரகசியம் என்றால் என்ன? அதுகுறித்து நீதிமன்றம் விளங்கச் சொல்லவில்லை.

துள்ளுக்குட்டியின் ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது&

‘‘காப்பதற்கு ஏதுமற்ற பின்பு

ரகசியம் உரிமையாகி

எதைகாக்கப் போகிறது-? & ஆதார்!’’

தீர்ப்பு வரவேற்கத் தக்கது! ஆனால் தெளிவாக இல்லை!