கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கோர் கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததாம் & சொல்வார்கள் கிராமங்களில்.

மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்தப் பழமொழியைத் தான் நினைவு படுத்துகின்றனர்.

தமிழகத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டிக்கொள்ளலாம்  என்று கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம், இரண்டு நாள்களுக்கு முன்னால்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் 'ஆமாஞ்சாமி' போட்டிருக்கிறார் தமிழக வழக்கறிஞர் சேகர் நாப்டே. இது பெரிய கொடுமை.

2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, தமிழகத்திற்குக் கர்நாடகா 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அப்படிச் செய்யவில்லை.

காவிரியின் உபரி நீரை வழங்குவதோடு, பெரும்பாலான காலங்களில் நீரை வழங்குவதே இல்லை.

வறண்ட நிலமாகிப் போன காவிரி டெல்டா விவசாயப் பெருங்குடி மக்கள் தமிழக அரசையும், மத்திய அரசையும், நீதிமன்றத்தையும் நாடிநாடி ஓய்ந்து போனார்கள்.

மத்திய மாநில அரசுகள் கிஞ்சித்தும் இவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தமிழக அரசு பசப்பு வார்த்தைகளை மட்டும் அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறது.

உச்ச நீதிமன்ற ஆணை, காவிரி நடுவர் நீதிமன்ற ஆணை இவைகளுக்கு கர்நாடகா அரசு கட்டுப்படுவதே இல்லை.

இன்று விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் பரிதாபமாக, ஆனால் விடாமுயற்சியோடு.

இந்நிலையில் காவிரியின் குறுக்கே இன்னொரு அணை கட்ட அனுமதி அளிக்க முயல்கிறதோ நீதிமன்றம் என்ற ஐயம்  ஏற்படுகிறது.

இதுவரை அளித்த நீதிமன்ற ஆணைகளைக் காற்றில் பறக்கவிட்டு மதிக்காத கர்நாடகா அரசு இனியும் மதிக்குமா?

தமிழகத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம், கர்நாடகக் காவிரியில் அணை கட்டலாம் என்பது எப்படி நியாயமாகும்.

தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதே கர்நாடகம் தானே.

அது மீண்டும் ஓர் அணை கட்டினால், அது தமிழகத்திற்கு இன்னொரு பெரிய ஆபத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தும்.

தெளிவாகச் சொன்னால் காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் 'சகாரா' பாலைவனமாக ஆகிவிடும்.

இனி வரும் தீர்ப்பு, இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில், தமிழகத்தின் உரிமை நிலைபெறும் வகையில் நதிநீர் தீர்வு இருக்கவேண்டும்.

தற்போது நீதிமன்றம் கூறிய கருத்து தமிழகத்தால் ஏற்கக் கூடியதாக இல்லை.

சமன் செய்து சீர்தூக்கி ஒரு பக்கம் சாயாமல் கருத்தும், தீர்ப்பும் அளிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தின் கடமையாகும்.

Pin It