ஒருவரின் அடையாளத்தை அழிப்பதென்பது அவரது வாழ்வின் பொருளையே அழிப்பதற்குச் சமம். அதுதான் அப்துல் கலாம் மணிமண்டபத்தில் நடந்திருக்கிறது!

மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது, என் போன்றவர்களுக்கு பெரிய மாயை ஏதும் இல்லை. அவர் பல சமரசங்களைச் செய்து கொண்டார் என்ற வருத்தமும் உண்டு. ஆனாலும், அவருக்கென்று ஓர் இடமிருக்கிறது. அந்த உரிய இடம் கூட இப்போது மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் பதவி வகித்த  எவருக்கும் இல்லாத செல்வாக்கு, அப்துல் கலாமுக்கு மக்களிடையே இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவரிடம் அப்படி ஓர் அன்பு வைத்திருக்கின்றனர். அவர் பெயரைக் குறிப்பிட்டால் போதும், மாணவர்கள் துள்ளி எழுந்து கைதட்டுகின்றனர். அப்படி ஒரு புகழ் அவருக்கு உள்ளது.

அதனால்தான், அவர் இறந்துபோன அன்று, எல்லாத்  தரப்பு மக்களும் வருந்தினார்கள். கடைகள், பல ஊர்களில், தாமாகவே அடைக்கப்பட்டன. இவையெல்லாம் வியப்பான செய்திகள்தாம். அதே நேரத்தில், இறந்துபோன  ஒரு மனிதருக்காக ஏழை, பணக்காரர், நல்லவர், கெட்டவர்  எல்லோருமே வருத்தப்படுவதும்,  அனைத்துக் கட்சியினரும்,  மதத்தினரும் துயரம் கொள்வதும் ஒரு விதத்தில் ஆபத்தானது. எந்த ஒரு மனிதரும் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அவர் யாருக்குமே உண்மையாக இருக்கவில்லையா என்று ஐயம் கொள்ள இடம் உள்ளது.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இயல்பாகவே இஸ்லாமியர்களின் மீது பகை கொண்டுள்ள பாஜக, பிறப்பால் இஸ்லாமியரான அப்துல் கலாமை மட்டும் இப்படிக் கொண்டாடுவது ஏன் என்ற வினா எழுகிறது.

இப்போது கொண்டாடுவது இருக்கட்டும், அன்றே  எப்படி அவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கினார்கள் என்னும் கேள்வியும் இருக்கிறது.  அன்று அவர் பாஜகவினருக்குத் தேவைப்பட்டார். 2002 பிப்ரவரி குஜராத் படுகொலைகள் நடந்து முடிந்த நேரம் அது. அதே ஆண்டு ஜூலை மாதம்தான் அப்துல் கலாம் பதவி ஏற்கிறார். இஸ்லாமியர்களுக்குத் தாங்கள் எதிரானவர்கள் என்ற கறையைக் குறைத்துக் கொள்ள அன்று அவர் தேவைப்பட்டார்.  "பாருங்கள் ஒரு இஸ்லாமியரை நாங்கள், நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்த்தியிருக்கிறோம்" என்று சொல்வதற்கு அது பயன்பட்டது.

அவர்களின் தேவையைக் கலாம் மிகப் பொருத்தமாக நிறைவேற்றினார் என்பதையும் நாம் ஏற்க வேண்டும். பதவி ஏற்பதற்கு முன், நேர்காணலில் அவர் சொன்ன வரிகள் "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...." என்று தொடங்கும் வரிகள்தாம்! கீதையின் வரிகள் என்று மக்களால் நம்பப்படும் வரிகள் அவை! குஜராத்தில் நடந்தவைகள் எல்லாம் நன்றாகவா நடந்தன என்று நம்மில் பலரும் கேட்கத் தவறிவிட்டோம்.

பதவிக்காலம் முடிந்த பின்னரும், ஈழச்  சிக்கல், அணு உலை எதிர்ப்பு ஆகியனவற்றில் அவர் மக்களுக்கு ஆதரவாக இல்லை. வெகு மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்து, அரசுக்கு ஆதரவாகவே அவரின் குரல் ஒலித்தது.

எனவே, அப்துல் கலாம் என்னும் மனிதரைக் கொண்டாடுவது பாஜகவிற்குப் பல வகையிலும் உதவியாக இருந்தது, இருக்கிறது. அதனால்தான் மணிமண்டபம் கட்டி, அதனைத் திறக்க பிரதமர் மோடியே நேரில் வருகின்றார். அந்த மண்டபத்திலாவது, அவரின் முதன்மை அடையாளத்தைக் காட்ட வேண்டாமா? ஒரு குடியரசுத் தலைவரின் அல்லது  அறிவியல் அறிஞரின் தோற்றம்தானே அங்கு இடம் பெற்றிருக்க வேண்டும்?

வீணை வாசிப்பது போன்ற ஒரு தோற்றம், அருகில் பகவத் கீதை புத்தகம் என்றால், எவ்வளவு பெரிய மோசடி இது! அவர் என்ன வீணை வித்வானா?? கேட்டால், அவருக்கு வீணை மீட்டத் தெரியும் என்றும், அதில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்றும் கூறுகின்றனர். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதுவா அவரது அடையாளம்?

ஒரு வேளை,  ராஜாஜிக்குப் புல்லாங்குழல் இசைப்பதில் பயிற்சியும், ஈடுபாடும் உண்டென்று வைத்துக் கொள்வோம்.  அதற்காக அவர் புல்லாங்குழல் இசைப்பது போல எல்லா இடங்களிலும் சிலை வைப்பது பொருத்தமானதாக இருக்குமா? பெரியாரைப் பெரியாராகவும், ராஜாஜியை ராஜாஜியாகவும் காட்டுவதுதானே நேர்மை? யாருடைய அடையாளத்தையும் அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

கடைசியாக மோடியின் அறிவிப்பைப் பாருங்கள். ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்குத் தொடர்வண்டி விடப்படுமாம். அதாவது, இஸ்லாமியர்களே, நீங்கள் இனிமேல் உங்களின் மெக்கா, மதீனா பயணத்தைக் கைவிட்டுவிட்டு, காசி ராமேஸ்வரம் பயணத்திற்குத் தயாராகுங்கள் என்கிறார் மோடி!  

Pin It