rajini 311நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

இது அவருக்கே தெரியாத ‘பிரம்ம ரகசியம்’. அவரின் ரசிகர்களைக் குழப்பும் ‘இராஜரகசியம்’.

‘‘நான் பச்சைத் தமிழன்’’ என்பார்.

‘‘என்னைத் தூக்கி வீசினால் நான் இமய மலையில்தான் விழுவேன்’’ என்பார்.

எதற்காக இவர் அங்கே போய் விழவேண்டும். ‘பச்சைத் தமிழனுக்கு’ இமயமலையில் என்ன வேலை?

அங்கே ககோரிகளும், கஞ்சா பேர்வழிகளும் திரிவதாகக் கேள்வி.

இது போன்ற நதி மூலங்களையும், ரிஷி மூலங்களையும் தேடிக்கொண்டிருப்பது நம் வேலையன்று & விட்டுவிடுவோம்!

« « «

‘‘தலைவா! நீங்க அரசியலுக்கு வர வேண்டும்! எப்ப வருவீங்க? சொல்லுங்க!’’ & இது ரசிகர்களின் ஏக்கம்.

‘‘நான் அரசியலுக்கு வந்தா பதவி வாங்கிடலாம். என்னை வச்சு சம்பாதிச்சிடலாம் என்று மட்டும் நினைச்சிடாதீங்க. அதுக்கு நான் விடமாட்டேன்’’ & இது ரஜினி தந்த ‘ஒரு மாதிரி’ நம்பிக்கை!

‘‘நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்கனு சொல்லுங்க தலைவா’’ & மீண்டும் ரசிகர்கள்.

‘‘ஆண்டவன் சொல்றான், நாம செய்றான்’’ & பாவம் ரசிகர்கள்.

இது அவர்கள் பிரச்சினை விட்டுவிடுவோம்!

« « «

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

‘‘வருவார்; இல்லை வரமாட்டார்’’ & இது ஊடக விவாதங்கள்.

‘‘வந்தால் வரவேற்போம்’’ & சில தலைவர்கள்.

‘‘வராமல் இருப்பதே நல்லது’’ & இன்னும் சில தலைவர்கள்.

 ஆனால் ரஜினி மட்டும் வாய் திறக்க மாட்டார். இருந்தாலும் ஊடகங்கள் விட்ட பாடில்லை.

பா.ஜ.க. மட்டும் ரஜினியைத் தொடர்கிறது. சும்மா ‘ஜவ்வு-’ மாதிரி இழுஇழு என்று இழுத்துக்கொண்டு இருக்கிறது.

கலைஞரின் ஓய்வும், ஜெயலலிதா மரணமும் தமிழகத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதனால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் பா.ஜ.க. அவரை அரவணைக்கக் காத்திருக்கிறது என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

அப்படி என்ன வெற்றிடம் இங்கே ஏற்பட்டு விட்டது. எந்த விளக்கத்தையும் இதுவரை அந்த கிருஷ்ணன் சொன்னதாகாத் தெரியவில்லை.

அதே வெற்றிடத்தைத் தமிழிசை சவுத்தர்ராஜனும் கண்டுபிடித்து விட்டாராம். ரஜினி ஆன்மிக வாதியாம். பா.ஜ.க. கோட்பாடுகளுக்கு அவர் உடன் பட்டவராம். அதனால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமாம். சரிதான்!

இவர்கள் பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள்.

அமித்ஷாவும் மோடியும் கூட ரஜினியை வரவேற்கின்றார்கள் என்பது செய்தி. இவர்கள் அகில இந்தியத் தலைவர்கள்.

பா.ஜ.க. இப்படி ஒரு நிலையை எடுத்திருக்கும் வேளையில், அக்கட்சியின் மூத்த தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் சு.சாமி &

‘‘நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல், அடிப்படை உரிமைகள் பற்றி எதுவும் தெரியாது’’ என்றும், ‘‘நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் RK 420” என்றும் ‘‘அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்குத் தான் ஆபத்து’’ என்றும் கூறுகிறார் சு.சாமி.

‘ஆபத்து’ என்று ரஜினிக்கு சு.சாமி விடுக்கும் ‘மிரட்டல்’ எப்படிப் பட்டது என்பதை அவர் விளக்கவில்லை.

நாவடக்கம் இல்லா மனிதர் சு.சாமி என்பது தெரியும் அவரின் கட்சி எடுக்கும் முடிவுக்கு எதிராக அவர் பேசுவது நாவடக்காமையா அல்லது நடிப்பா. தெரியவில்லை.

சாதாரணமாக ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு மாறாக அக்கட்சியின் சாதாரண உறுப்பினர் பேசினாலும் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சின்னஞ் சிறிய கட்சிகள் தயங்காது.

இங்கே நாடாளும் பெரிய கட்சியான பா.ஜ.க.வில் சு.சாமி குறுக்குச்சால் ஒட்டுகிறார்.  இதை பா.ஜ.க. அலட்டிக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சு.சாமியின் பேச்சு அவரின் சொந்தக் கருத்து என்று பூசி மெழுகுகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவை ஒதுக்கியது பா.ஜ.க. ஓ.பன்னீர்செல்வத்தை கையில் எடுத்தது. இப்பொழுது எடப்பாடியும் அதில் மாட்டிக் கொண்டார்.

ஆனால் அ.தி.மு.க. என்றாலே சசிகலா அணி மட்டும்தான் என்று தன் கட்சிக்கு எதிராகவே ஓங்கி அடித்துப் பேசினார் சு.சாமி.

இதுவும் அவரின் தனிப்பட்ட கருத்து என்றார் தமிழிசை.

நடிகர் ரஜினி காந்த் குறித்த பா.ஜ.க.வின் அணுகுமுறையும், சு.சாமியின் அணுகுமுறையும் முரண்பட்டவை இல்லை. எதிர்மறைத் தூண்டல் மூலம் ரஜினியை அரசியலுக்கு இழுக்கப்பார்க்கிறார் சு.சாமி. பா.ஜ.க.வின் ஒரு விசித்திரமான, குறுக்குப்புத்தித் தந்திரம் இது.

‘பாபா’ என்று படுத்துக் கொண்டிருக்கும் ரஜினியை உசுப்பேற்றி அரசியலுக்கு இழுத்து அதன்மூலம் தமிழக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது பா.ஜ.க.

இது அத்தைக்கு மீசை முளைக்கும் கதையாகத்தான் முடியும்

Pin It