எதற்கு எடுத்தாலும் நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற சாமியார்களின் மத வெறி தலைக்கேறிக் கொண்டு இருக்கிறது.

அண்மையில் சனி பகவான் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என்று துவாரகா பீடத்தின் தலைவர் ஸ்வரூபநந்தா என்ற சாமியார் சொல்லியிருக்கிறார்.

400 ஆண்டுகளாக மராட்டியத்தின் சிங்கணாப்பூர் சனி கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது, வழிபடக்கூடாது என்று இந்து மதம் தடை விதித்திருந்தது.

பெண்களின் வலிமையான போராட்டமும், நீதிமன்ற அனுமதியும் பெண்கள் அக்கோயிலுக்குள் நுழைய வாய்ப்பாக அமைந்தன.

பெண்கள் அக்கோயிலுக்குள் நுழைந்தால், பாலியல் வன்கொடுமை நடக்கும் என்று மதவெறியுடன் அந்தச் சாமியார் சொல்கிறார். சாமியாரின் இந்தப் பேச்சு, இப்படி நடக்க வேண்டும் என்பது போன்ற நாக்குத் தடித்த பேச்சு.

கேரளாவில் சபரிமலைக் கோயிலிலும் பெண்கள் வழிபட இந்து மதம் தடை செய்கிறது. அதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம், பாலின நீதி அபாயத்தில் இருக்கிறது என்ற வாதத்தை ஏற்கவில்லை. மரபாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பொறுத்து முடிவு எடுக்க முடியாது. அரசியல் அமைப்புக் கோட்பாடுகளின் கீழ்தான் முடிவு எடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறது.

அத்துடன் “பொது இடத்திற்குள், கோயிலுக்குள் நுழைவதற்குப் பெண்களுக்கு அனுமதி மறுப்பவர்கள் எந்த உரிமையின் கீழ் அதைச் சொல்கிறார்கள்?” என்று கோள்வி எழுப்பியுள்ளது.

இது பெண்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதோடு, “மரபாகப் பின்பற்றப்படும்” என்ற இந்துமத வாதத்தைச் சிதறடிக்கிறது.

பெண்கள் இன்று எவரெஸ்ட் மலை ஏறுகிறார்கள், விமானங்களை ஓட்டுகிறார்கள், விண்வெளியில் பறக்கிறார்கள். ஆனால் இந்து மதம் தீட்டு என்றும் பாலியல் அடிப்படையிலும் பெண்களைப் பார்ப்பது மனு அநீதியின் அடையாளம்.

சனி பகவானைப் பெண்கள் வணங்கக் கூடாது என்று சொல்ல துவாரகா சாமியார் யார்--? அவருக்கென்ன உரிமை?

பெண்களால் சனியனுக்குத் தீட்டு இல்லை.

சனியனால்தான் பெண்களுக்கு அவமானம்.

இது சபரிமலைக்கும் பொருந்தும்.