karunanidhi bookதமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவின் போது, ‘ஃப்ரண்ட்லைன்’ இதழ் கலைஞர் குறித்த ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. தற்போது கலைஞரின் முதல் நினைவு நாளையொட்டி, அச்சிறப்பிதழ் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கான கலைஞரின் பங்களிப்பையும், பேருழைப்பையும் விவரிக்கிறது இந்நூல். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலைஞரைப் பன்முக நோக்கில் ஆராய்ந்து கட்டுரைகளை எழுதியுள்ளது, இந்நூலின் சிறப்பம்சம்.

தமிழக அரசியலின் போக்கினை நிர்ணயம் செய்யும் ஆற்றலாக விளங்கிய கலைஞரின் அரசியல் அனுபவத்தைத் தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களின் கட்டுரைகள் விவரிக்கின்றன. தேவ கவுடா, முலாயம்சிங் யாதவ், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரின் கட்டுரைகள் இந்திய அரசியலில் அவரது பங்களிப்பைக் குறிப்பிடுகின்றன.

பெரியாரின் கனவுகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய சமூகநீதிக் களமாகட்டும், அல்லது அண்ணாவின் முழக்கமான மாநில சுயாட்சிக் களமாகட்டும், கலைஞர் இவை குறித்துக் காட்டிய அக்கறை நூலின் பக்கங்கள் அனைத்திலும் இழையோடுகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்வதற்கான கலைஞரின் அர்ப்பணிப்பும், உழைப்பும் பொருளாதார அறிஞர்களால் ஆராயப்பட்டுள்ளது.

திரைப்படங்களின் மீதான திராவிட இயக்கத்தின் தாக்கம் இயல்பாக நடந்ததொரு நிகழ்வு. புராணங்களைப் பேசிய திரைப்படங்கள் புரட்சி பேசத் தொடங்கியது திராவிட இயக்கத்தினால் மட்டுமே. திரைப்படங்களின் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்துகள் மக்களை எளிதாகச் சென்றடைந்தன. இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்களுள் கலைஞர் முதன்மையானவர். ஆனால் திரையுலக வாழ்க்கையிலும் அவர் சந்தித்த இடர்கள் சாதாரணமானவை அல்ல. கடின உழைப்பிற்குப் பிறகே, கலைஞர் வெற்றிக் கனியை எட்ட முடிந்தது. சாமானியனையும் சென்றடைந்த கலைஞரின் சாதனையைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்நூல்.

தமிழகம் மட்டுமல்லாது இந்திய வரலாற்றின் முக்கிய தருணங்களையும் பதிவு செய்திருக்கும் இந்நூல் ஒரு வரலாற்று ஆவணம்.

ஒரு மனிதன் ஒரு இயக்கம்

வெளியீடு : ஃப்ரண்ட்லைன்

விலை : ரூ. 200/-