மானுட வாழ்வில் வளர்ச்சியும், மாற்றமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. உலகில் பெரும்பாலும் மக்களின் வாழ்வு முறையைத் தீர்மானிப்பதும் ஒழுக்க நெறிகளுக்கான அளவீடுகளைக் குறிப்பதும் சமயங்கள். எனவே சமயங்களே மக்களை ஆளுகின்றன. அவைகளே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்கியாகவும் இருக்கின்றன. இந்த ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவில் உள்ள சமயங்கள் பற்றியும், அதன் மீதான அமபேத்கரின் விமர்சனங்கள் பற்றியும், அம்பேத்கரின் சமய மாற்றம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கரின் சமயங்கள் பற்றிய ஆய்வும், அதன் காரணமாக இந்து சமயத்தின் மீது அவர் வைத்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமயத்திலிருந்து வெளியேறி பவுத்தம் தழுவுவதற்குப் பெரும் அழைப்பைக் கொடுத்திருக்கின்றன. புரட்சியாளரின் சமய மாற்றக் கொள்கையும் , சமய மாற்ற நிகழ்வும், உலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

 எனவே புரட்சியாளர் அம்பேத்கரின் துல்லியமான சமய ஆய்வும், அதன் மீதான நியாயமான விமர்சனமும், சமய மாற்றமும், அடிமை வாழ்வை விரும்பாத அத்தனை மக்களையும் கவர்ந்திழுப்பதோடு, அவர்களை ஒன்றிணைத்து அவர் வழியில் நடக்க தூண்டுதல் தரக்கூடிய ஆற்றலாகவும் அமைந்துள்ளது. 

சமயங்களுக்குள் பலநிலைகள் உள்ளன.

1.சடங்குநிலை

2.கற்பனைநிலை

3.தத்துவநிலை

4.அறநெறிநிலை

பூகோள அடிப்படையில் உலகில் உள்ள சமயக் கொள்கைகள் 1. இந்தியாவில் இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் 2. சீனம், ஜப்பானில் கன்பூசியஸிசம், டோயிசம், சின்டோயிசம் 3. மத்திய கிழக்கு நாடுகளில் - யூதம், ஜொராஸ்டிசம், கிறித்துவம், இசுலாம்.

கிறித்துவம், பெளத்தம், இசுலாம், இந்து, யூதம் ஆகிய ஐந்து சமயங்கள்தான் பெரிய சமயங்களாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 1000 பேரில் 239 கிறித்தவர்கள், 140 இசுலாமியர்கள், 126 இந்துக்கள், 63 பெளத்தர்கள், 4 யூதர்கள் இருக்கின்றனர்.

அம்பேத்கர் இந்து சமயம் ஒரு சமயமே அல்ல. ஏனெனில் அது கடவுளின் பெயரிலும், புனிதத்தின் பெயரிலும், ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதரை ஒதுக்குதலுக்கு உள்ளாக்குகிறது என்கிறார். சமயம் ஒருவரது வாழ்வின் சிறப்பானதொரு பங்கினை வகிக்கின்றது. ஒருவரின் சீரிய வாழ்க்கைக்குச் சமூக மேம்பாட்டிற்கும் சமயம் மிகவும் உதவுகிறது. பிறந்தது முதல் ஒவ்வொருவரும் சமயத்தின் ஓர் அங்கமாக வளருகின்றனர் என்பதை மறுக்கிறார் அம்பேத்கர்.

இயற்கை, சமூகம், வாழ்க்கை, சிந்தனை இவைகள் பற்றிய ஒரு விதமான கண்ணோட்டம், அதையயாட்டிய வாழ்க்கை முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாரங்கள் இவைகளின் ஒட்டுமொத்தமே ஒரு மதமாக அமைகிறது. அக்காலத்தில் வேதங்களை இதற்கான வழிகாட்டியாகக் கொண்டனர். வேதங்களில் நம்பிக்கை கொண்டனர். வேதம் மதத்திற்குத் துணை செய்தது. இந்திய உபகண்டத்தின் ஆதிகால மதம் ‘வேத மதம்’ என்று அறியப்படுகிறது. இது உலகரீதியாக அவ்வளவு பிரபலமான மதமன்று. வேதமத காலத்திலேயே வருணாசிரம முறை - நான்கு வருணங்கள் - தோன்றின. ரிக்வேதத்தில் நான்கு வருணங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. வேதங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவானதல்ல. நீண்டகால இடைவெளியில் பலரால் பாடப்பட்டவைகள். காலத்தால் பல விதமான திருத்தல்களும், மாறுதல்களும் இவற்றில் இடம் பெற்றுள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டின் சாபக்கேடான சாதீய முறையின் மூலவேரான நான்கு வருணத்தினர் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று ரிக்வேதம் கூறுகிறது.

பிராமணோஸ்ய முகமஸுத் பாஹறூ ராஜன்ய : கிருத :

உளரு ததஸ்ய யத்வைஸ்ய : பத்பியாம் சூத்ரோ அஜாயத :

(ரிக் வேதம், 10-90-2)

கடவுளின் வாயிலிருந்து பிராமணனும், தோளிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், பாதங்களிலிருந்து சூத்ரனும் தோன்றினார்கள் என்பதே இதன் பொருள். இந்த நான்கு பிரிவுகள் பின்னர் ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிந்தன. நான்கு வருணமுறை தோன்றிய பிறகு பிராமணர்கள் புரோகிதர்களானார்கள். சமுதாயத்தில் அவர்களின் ஆதிக்கம் வலுத்தது. அவர்களை கடவுளுக்குச் சமமானவர்களாக மக்கள் நம்பும்படி செய்தனர். நான்கு வருணமுறையில் மூன்று வருணத்தினரும் சூத்திரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். சூத்திரர்கள் அல்லது தாஸர்கள் அடிமைகள். எல்லோருக்கும் மேலாக பிராமண ஆதிக்கம் வலுத்தது என்பதை அம்பேத்கர் தெளிவாக உறுதிப்படுத்துகிறார்.

இந்து மதம் மக்களிடையே ஒற்றுமைக்குப் பதிலாகப் பிரிவினையையும், வேற்றுமை உணர்ச்சியையும் வளர்த்து வந்திருக்கிறது. சாதி என்பதே பிரிவினையின் மறுபெயர்தான். அதிலும் தீண்டாமை என்பது சாதியிலிருந்து சாதி பிரிக்கப்படுவதின் உச்ச நிலையைக் காட்டுவதாகும்.

இந்து மதமும், சமூக ஒற்றுமையும் என்றும் ஒன்றுசேர முடியாதவைகளாகும். இதனால் தான் ஒரு இந்து இன்னொரு இந்துவை ஒதுக்கி வைக்கவும், பிரிவினைப்படுத்திக் காட்டவும் செய்கிறான். இந்துமதம் ஒற்றுமையை வளர்க்கத் தவறி வேற்றுமைக்கு வித்திடுகிறது.

இந்து சமூகம் என்ற பெயரே வெறும் கற்பனைதான். இந்து என்ற பெயரே ஓர் அந்நிய பெயர்தான். இந்த நாட்டு மக்களிடமிருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகமதியர் வைத்த பெயர் தான் இந்து என்பது. முகமதியரின் படையயடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் ‘இந்து’ என்ற சொல் காணப்படவில்லை. சொல்லப்போனால் இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை. இருப்பதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே. அந்தச் சாதியிலும் போராட்டம், ஏற்றத்தாழ்வு, துன்பம்!

மதமாற்றம் தாழ்த்தப்பட்டவர்களை அவர்களுடைய துன்பமயமான நரக வாழ்விலிருந்து மீட்டு, சமத்துவமான வாழ்விற்கு இட்டுச் செல்லும் என்று எண்ணுவது தவறான கருத்தாகும். மற்ற எந்தவொரு புதிய மதத்தில் சேர்ந்தாலும், அங்கும் சுதந்திரத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் போராட வேண்டியிருக்கும். கிறிஸ்தவ மதத்திலோ, இஸ்லாமிய மதத்திலோ, சீக்கிய மத்ததிலோ சேர்ந்தாலும் நாம் அங்கும் போராட வேண்டியிருக்கும். முகம்மதியராக மதம் மாறிவிட்டால் நம்மில் ஒவ்வொருவரும் நவாபாக மாறிவிடுவோம் என்றோ, கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தால் ஒவ்வொருவரும் போப்பாக மாறிவிடுவோம் என்றோ எண்ணுவது தவறாகும். ஆனாலும் மதமாற்றம் நிகழ்ந்தது.

 “மதமாற்றத்தால் ஏற்படக்கூடிய சிக்கல் குறித்து மிக நீண்ட காலமாகவே நான் சிந்தித்துக கெணடிருக்கிறேன். அதனால்தான் மத மாற்றத்தை மேற்கொள்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். ஆனால் இப்போது என் உடல் நாளுக்கு நாள் மிக வேகமாகச் சரிந்து வருகிறது. என் வாழ்வின் இறுதியை நெருங்கிக் கொண்டிருப்பதாக உணருகின்றேன். ஆகவே நான் மதம்மாறுவது எனபதை இந்தத் தடவை தள்ளிப் போடப் போவதில்லை. என்னுடன் மதம் மாற விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன். மத மாற்றத்தை ஆதரிக்காதவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் நடந்து கொள்ளலாம். அவ்வாறு நடந்து கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கிறது” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.

சமூகம் சட்டத்தின் வழியே இயங்குவதாக அல்லது நல்லொழுக்க நெறியில் நடப்பதாக அமைத்தல் வேண்டும். இவ்விரண்டில் ஒன்றேனும் இல்லாவிட்டால் சமூகம் உடைந்து, துண்டு துண்டாகச் சிதறிவிடும் என்பது உறுதி. மதம் செம்மையாகச் செயல்பட வேண்டுமானால் அது பகுத்தறிவின் அடிப்படையில் இயங்க வேண்டும். இந்தப் பகுத்தறிவின் மற்றொரு பெயர் தான் விஞ்ஞானம். ஒரு மதம் நல்லொழுக்கக் கோட்பாடுகளை மட்டும் கொண்டிருந்தால் போதாது. அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலான அடிப்படை தத்துவங்களை ஏற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும். மதம் வறுமையை, இழிவை, புனிதமானது என்றோ, மேன்மையானது என்றோ கருதக் கூடாது.

மேலும் “நான் ஒரு இந்துவாக பிறந்து விட்டேன். ஆனால் இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்த புரட்சியாளர் அம்பேத்கர் இந்துத்துவக் கொள்கை பிறந்த நாக்பூரில் சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கும் விதமாக 1956 அக்டோபர் 14 இல் 5 லட்சம் மக்களோடு பெளத்த மதம் தழுவிப் புரட்சி செய்தார். இவ்வளவு பெரிய அளவில் ஒரே நாளில் நடைபெற்ற இந்த மதமாற்றம் உலகில் எங்கும் நிகழாத வரலாற்றுச் சம்பவமாகும். அம்பேத்கர் வரலாறானார்.