முதலமைச்சரைப் புகழ்ந்து பேசவும்,கைவலித்தாலும் கவலைப்படாமல்,எதிரே உள்ள மேசையைத் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கவும் கற்றுக்கொண்டுவிட்டால், இன்றைய தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருக்க அனைத்துத் தகுதிகளையும் பெற்றுவிட்டதாகப் பொருள்.கைதட்டுவதும், பாராட்டுவதும் குற்றமில்லை. ஆனால் அதுவே சட்டமன்றத்தின் ‘நிரந்தரப் பணி’ என்றாகிவிடக் கூடாது.

இது ஒன்றும் மிகையான கூற்று இல்லை. ஒருமுறை முதலமைச்சர், சென்னையைத் தவிர, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களையும் ‘வறட்சிப் பகுதிகள்’என்று சட்டமன்றத்தில் அறிவிப்புச் செய்கின்றனர்.அதற்கும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கைத்தட்டுகின்றனர். நாடே வறட்சியில் தவிப்பது, கைதட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றா என்பதற்கு அவர்கள்தாம் விடை சொல்ல வேண்டும்.

எதிர்காலத்தில்,யாரேனும் இறந்து போக, அதற்கு இரங்கல் தீர்மானம் படித்தால் கூட எழுந்து நின்று கைதட்டுவார்களோ என்னவோ தெரியவில்லை.‘ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி, எதிர் வரிசையில் அமர்ந்திருக்கும் செ.கு.தமிழரசன், தனியரசு, சரத்குமார் போன்ற ‘சிறு குறு விவசாயி’களின் பாராட்டுச் சத்தமும் காதைப் பிளக்கிறது’ என்கிறார் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்.

பொதுவுடைமைக் கட்சியிலும், குறிப்பாகக் குணசேகரன் போன்றவர்கள் ‘கொளுத்திப்போடும் பட்டாசுகள்’அந்தக் கட்சியின் அடிப்படை மரபுக்கே எதிரானதாக உள்ளது.தலைவர் தா.பா.வின் வழியை மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர் போலும்.

எடுத்துச் சொல்லக்கூடிய எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு அல்லது இடைநீக்கம் செய்துவிட்டு,புகழுரைகளைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றார் முதலமைச்சர்.

சரி போகட்டும், நாட்டின் நிலை என்ன?

ஆயிரம் சிக்கல்களால் நாடு அலைக்கழிக்கப்படுகின்றது என்றாலும்,குறிப்பாக நான்கு பெரும் பிரச்சினைகள் நாட்டை உலுக்கி கொண்டுள்ளன.

1.இரண்டாண்டுகளாய்த் தொடரும் மின்வெட்டு

2.ஏறிக்கொண்டே போகும் விலைவாசி

3. அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட கொலை - கொள்ளைகள்

4. கொடூரமாய் முகம் காட்டும் குடிநீர்ப் பஞ்சம்

இவை குறித்தெல்லாம் தமிழக அரசு எடுத்துவரும் ‘போர்க்கால நடவடிக்கைகள்’ எவை?

மூன்றே மாதங்களில் மின்வெட்டு இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை ஆக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஏதோ காற்றலைகள் சுற்றினால், கொஞ்சம் கூடுதலாக மின்சாரம் கிடைக்கிறது. அடுத்த சில நாள்களிலேயே காற்று நின்று போக,மின்சார உற்பத்தியும் குறைந்து விடுகின்றது.

‘வானம் பார்த்த பூமி’ என்பார்கள். அதைப்போல் இன்று ‘காற்று நோக்கிய மின்சாரம்’ என்றாகிவிட்டது. அம்மையாரின் ஆட்சி ஏற்பட்ட நாளிலிருந்து, அனல், புனல் மின் நிலையங்களிலிருந்து 1 மெகாவாட் மின்சாரம் கூடப் புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை. தி.மு.கழக ஆட்சியில் நிறுவிய மின்நிலையங்களும் முறையாக நிர்வகிக்கப்படவில்லை.

விலைவாசி பற்றிக் கேட்டால், ‘அம்மா உணவகத்தில்’ இட்லி விலை ஒரு ரூபாய்தானே என்கின்றனர்.இட்லி விலை ஒரு ரூபாய்தான்.ஆனால் அதற்குச் செய்யும் விளம்பரச் செலவு ஒரு கோடி ஆகும்போல் இருக்கிறதே!மேலும்,எத்தனை ஊர்களில் அம்மா உணவகம் இருக்கிறது? சென்னை மக்கள் மட்டும்தான் ஆளுங்கட்சிக்கு வாக்களித்தார்களா?

அப்புறம் அது என்ன அம்மா உணவகம்? ‘அரசு உணவகம்’ என்று சொல்வதுதானே சரி? உணவகம் மட்டும் அம்மா உணவகம் என்றால்,டாஸ்மாக் யாருடையது? ‘அம்மா டாஸ்மாக்’ என்று கூறலாமா?

விலைவாசி உயர்வுக்கு, இந்த ஜிகினா வேலைகள் எல்லாம் மாற்றாக முடியாது. உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, புளி, மிளகாய்,ஏலம், மிளகு என்று எல்லாப் பொருள்களும் விலை ஏறி உள்ளன. குறைப்பதற்கான நடவடிக்கை என்று அரசு தரப்பில் அறிவிப்பு ஏதுமில்லை.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில்,கொலை-கொள்ளை நடக்காத நாள் என்று ஒரு நாளைக் கூடக் குறிப்பிட முடியாது. சென்னை, பொதுமருத்துவமனைக்குள் புகுந்து கொலை, காவல் நிலைய வாசலிலேயே அரிவாள் வெட்டு, ஆளுங்கட்சி உறுப்பினர் வீட்டில் பணம் கொள்ளை,அதை விசாரிக்கப் போன காவல் ஆய்வாளர் வீட்டில் நகை திருட்டு என்று அன்றாடம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நீரோ அரசி மட்டுமின்றி, எதிரில் இருப்பவர்களும், ஊடகங்களும் சேர்ந்து பிடில் வாசித்துக் கொண்டுள்ளனர்.இத்தனையும் போதாதென்று, கடுமையான குடிநீர்ப் பஞ்சம் தமிழக மெங்கும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீர் அளவு 20ஆயிரம் கன மீட்டர்.இப்போது கையிருப்பாக 2500 கன மீட்டர் தண்ணீர் மட்டுமே உள்ளது என்கின்றனர். மீதம் 17500 கன மீட்டர் தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற எந்தத் திட்டமும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

மின்வெட்டு போன்றவைகளிலிருந்து ஓரளவிற்குத் தப்பிய சென்னையும்,குடிநீர்ச் சிக்கலிலிருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி ஆகியனவற்றி லிருந்துதான், சென்னைக்குக் குடிநீர் வரவேண்டும். ஆனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் இருப்பு மிகக் குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டு மே மாதம் பூண்டியில் 32 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்துள்ளது. இந்த ஆண்டு, 20.9 அடி உயரம்தான் உள்ளது என்கின்றனர். எப்படித் தமிழகம் எதிர்நோக்கப் போகிறது இந்தச் சிக்கல்களை என்பது குறித்துச் சட்டமன்றத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை.

ஜனநாயகத்தில் எவ்வளவு குறைகள் இருந்தாலும்,‘விவாத உரிமை’  அதன் பெருமை என்று கூறுவர். அந்தப் பெருமையை நம் சட்டமன்றம் இன்று முழுமையாக இழந்துவிட்டது.

விவாதமே கூடாது என்ற நோக்கில்தான்,முதலமைச்சர் 110ஆவது விதியின் கீழ் அன்றாடம் அறிக்கை படிக்கின்றார்.

110ஆவது விதி என்பது என்ன? அதனை எப்போது பயன்படுத்த வேண்டும்? அதனை அடிக்கடி பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

தமிழகச் சட்டமன்ற விதிகள் மற்றும் நடத்தைகளின் 110ஆவது பிரிவு,மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது. பொது முக்கியத்துவம் கருதி, ஓர் அமைச்சரால் இவ்விதியின் கீழ் அறிக்கை படிக்கப் படலாம் என்கி றது முதல் உட்பிரிவு. அவைத்தலைவரின் அனுமதி பெற்றுப் படிக்க வேண்டும் என்கிறது, மூன்றாவது உட்பிரிவு. இரண்டாவது உட்பிரிவுதான் முக்கியமானது. இவ்விதியின் கீழ் படிக்கப்படும் எந்த ஓர் அறிக்கையின் மீதும், எந்த ஒரு விவாதத்தையும்  அனுமதிக்க இயலாது என்று கூறுகின்றது இரண்டாவது உட்பிரிவு.

அதனால்தான்,அம்மையார் அந்த விதியின் கீழ் மட்டுமே பல அறிக்கைகளைச் சட்டமன்றத்தில் படிக்கிறார்.முந்தைய ஆட்சிக் காலங்களிலும்,அரிதாக அவ்விதி பயன்பட்டுள்ளது.எப்போதாவது பயன்படுத்தப்பட்ட அவ்விதியை எப்போதும் பயன்படுத்துவதே, இன்றைய முதலமைச்சரின் போக்காக உள்ளது.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது,அந்த விதியின் கீழ் அறிக்கை படிக்காமல் இருப்பதில்லை. சிகரம் வைத்தாற்போல், 11.05.2013 அன்று, ஒரே நாளில் 4 அறிக்கைகளை அவ்விதியின் கீழ்ப் படித்துள்ளார். ‘கின்னஸ்’ சாதனைக்கு முயற்சிக்கின்றாரோ, என்னவோ!

அந்த அறிக்கைகளில் நிதி தொடர்பான செய்திகளையே மிகுதியும் படிக்கின்றார் என்பது இன்னொரு அதிர்ச்சியான செய்தி. ஏற்கனவே, இவ்வாண்டு நிதிநிலை அறிக்கை சுமார் 30 ஆயிரம் கோடிப் பற்றாக்குறை உடையதாக உள்ளது. இப்போது 110இன் கீழ் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் மூலம்,இன்னொரு 40ஆயிரம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனஆக மொத்தம்,70ஆயிரம் கோடியைத் தாண்டும் ஓர் ஆண்டுப் பற்றாக்குறையை அரசு எப்படி சரிசெய்யப் போகிறது என்பதை முதலமைச்சரோ, நிதியமைச்சரோ வெளிப்படுத்தவில்லை.

110ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்படுவதால், அது குறித்துச் சட்டமன்றத்தில் எவரும் வினா எழுப்பவும் முடியாது.எனவே எந்த விவாதமும் அற்ற பாராட்டு மன்றமாக நம் சட்டமன்றம், நம் வரிப்பணத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

ஊடகங்களாவது இவை குறித்துக் கேட்கலாம்.ஆனால்அவையோ,கோபாலபுரத்தில் கலைஞரின் கொள்ளுப் பேரன்கள் சாக்லெட்டிற்குச் சண்டை போட்டுக் கொண்டால் கூட, அதனைப் பெரிதுபடுத்தி, அடுத்த வார அட்டைப்படக் கட்டுரை எழுதுவதிலேயே முனைப்புக் காட்டுகின்றன.

அடடா, இதுவன்றோ மக்கள் நலம் பேணும் ஜனநாயக நாடு!