first-copyஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட முடியாத காலம் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. குறிப்பாக, ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு. ஈழம் என்று பேசினால் ஒன்று அவர் விடுதலைப்புலி ஆதரவாளர் அல்லது விடுதலைப்புலி. அப்படித்தான் பார்த்தது அரசாங்கம். நரசிம்மராவ் அரசும் அப்படித்தான் பார்த்தது. ஜெயலலிதா அரசும் அப்படியே அணுகியது. அதன் காரணமாக ஈழ ஆதரவாளர்கள் அனுபவித்த கொடுமைகள் அநேகம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கட்சி மேடை தொடங்கி கல்லூரி மேடை வரை ஈழம் என்ற பதம் பலமாகவே பேசப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஈழ ஆதரவுக் குரல்கள் அழுத்தமாக ஒலிக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தமிழர் களுக்கு ஆதரவாகக் களமிறங்கி அதிர்வலைகளை உருவாக்கியதோடு, புதிய நம்பிக்கை விதையையும் விதைத்திருக்கிறார்கள்.

கொடூரமான இனப்படுகொலை காரணமாக மனம் மற்றும் உடல்ரீதியாக நசிந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் இத்தகைய சூழ்நிலைகள் ஊக்கத்தையும் உற்சாகத் தையும் கொடுத்திருக்கின்றன. முக்கியமாக, அவர்களுடைய எதிர்காலம் குறித்த நம்பிக்கையை உருவாக்கியிருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஈழப்பிரச்சினையை முன்வைத்து தமிழக மக்கள் மத்தியில் தற்போது உருவாகி இருக்கும் எழுச்சியை ஈழத்தமிழர் களுக்கு ஆதரவாகக் கொண்டுசெல்ல வேண்டும்; ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா முழுக்கக் கொண்டு சென்று, அனைவருடைய ஆதரவையும்  திரட்ட வேண்டும்; ஈழத்தமிழர் விவகாரத்தில் நியாயமான, உறுதியான நிலைப்பாட்டை இந்திய அரச எடுப்பதற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். இவைதான் உண்மையான ஈழ உணர்வாளர்களும் தமிழ் உணர்வாளர் களும் அரசியல் கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும், முக்கியமாக ஊடகங்களும் செய்ய வேண்டிய காரியங்கள்.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழல் அப்படியானதாக இல்லை. ராஜபட்சேவுக்கு எதிராகவும் ஈழத்மிழர் களுக்கு ஆதரவாகவும் கரம்கோத்துக் கள மிறங்க வேண்டிய உணர்வாளர்களும், ஊடகங்களும் தி.மு.க. எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் எழுச்சியைத் தி.மு.க.வுக்கு எதிரானதாக மடைமாற்றி, தி.மு.க.வைத் தனிமைப்படுத் தும் முயற்சியில்தான் அவர்கள் அதிக உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஊடகங்களின் அணுகுமுறையை எடுத்துக்கொள்வோம். இலங்கையில் இறுதி யுத்தம் தொடங்குவதற்கு முன்பே ஊடகங்கள் தி.மு.க.வுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்துவிட்டன. குறிப்பாக, ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட வெகுஜனப் பத்திரிகைகள். அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரமும் உச்சத்தில் இருந்தது. ஆகவே அந்த இரண்டையும் முன்வைத்து தி.மு.க.வைக் கடுமையாக விமர்சித்தன. தி.மு.க. கூட்டணி அதளபாதாளத்தில் விழப்போகிறது என்ற கருத்துத்திணிப்புகள் வெளி யாயின. ஆனால் அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கணிசமான வெற்றியைப் பெற்றுவிட்டது.

தங்களுடைய எழுத்தும் உழைப்பும் வீணாகிப் போனதில் அந்தக் குறிப்பிட்ட பத்திரிகை களுக்குக் கடுமையான ஆத்திரம். ஆகவே, அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயல்பட்டன. மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் மின்வெட்டுப் பிரச்சினை யையும் பெரிய அளவில் பேசின. அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. தி.மு.க. கூட்டணி கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.இப்போது பத்திரிகைகள் நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்துப் பேசியிருக்க வேண்டும். ஆட்சியில் நடைபெறும் நிறை குறைகளைக் கவனித்திருக்க வேண்டும். இதுதான் ஊடகதர்மம். ஆனால் தமிழ் நாட்டில் என்ன நடந்தது அல்லது நடந்து கொண்டிருக்கிறது?

முக்கிய ஊடகங்கள் அனைத்துமே தி.மு.க.வைப் பற்றியே பேசி வருகின்றன. தி.மு.க.வின் ஒவ்வொரு அசைவையும் காட்டமான மொழியில் விமர்சிக்கின்றன. இலங்கை இறுதி யுத்தத்தின்போது தி.மு.க. எடுத்த நிலைப்பாடுகளை விமர்சித்துப் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதுகின்றன. சட்டமன்றத் தேர்தலில் தோற்றதற்குக் காரணமாக ஈழவிவகாரத்தில் தி.மு.க. எடுத்த நிலைப்பாடுதான் என்ற சித்தரிப்பில் இறங்கியுள்ளன. தி.மு.க. குறித்த எதிர்மறைச் செய்திகளை மட்டுமே தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தனைக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தில் தி.மு.க. பிரதான எதிர்க்கட்சி கூடக் கிடையாது. ஆனாலும் ஊடகங்களின் ஒரே குறி தி.மு.க. காரணம் எளிமையானது. அம்மாவைப் பற்றி எழுதினால் அடுத்த நொடி வழக்கு. ஆனால் கலைஞரை எதிர்த்து எழுதினால் கைமேல் பலன். சர்க்குலே­ன் சகட்டுமேனிக்கு உயரும். இதற்கு மேல் வேறென்ன வேண்டும் பத்திரிகை முதலாளிகளுக்கு? 

அ.தி.மு.க. அரசு பற்றிய செய்திகளை ஊடகங்கள் அடக்கியே வாசிக்கின்றன. தப்பித்தவறி சில செய்திகள்  வெளியிடப் பட்டபோது வழக்குகள் பாய்ந்தன. பிறகென்ன? மூச்! இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அலை வீசத்தொடங்கியது. எங்கு பார்த்தாலும் ஈழ ஆதரவுப் பேச்சுகள். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்றகோ­ம் வலுவடைந்தது. அதனையயாட்டி லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

தி.மு.க.வை எதிர்ப்பதற்கு இன்னொரு வலுவான ஆயுதம் கிடைத்தால் அதையும் பயன்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ஊடகங்களுக்குத் ஈழத்தமிழர் விவகாரம் வசமாகச் சிக்கியது. ஆயுதங்கள் மாறினாலும், இலக்கு ஒன்றுதான். ஈழப்பிரச் சினையை முன்வைத்து தி.மு.க.வை மீண்டும் விமர்சிக்கத் தொடங்கின. ஏற்கனவே தி.மு.க.வின் ஏற்பாட்டில் மீண்டும் தொடங்கப் பட்ட டெசோ அமைப்பு குறித்துக் கிண்டலும், கேலியும் வி­மமும் கலந்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தன. ஐ.நா. தீர்மானம் தொடர்பாக மத்திய அரசுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

உணர்ச்சிக் கொந்தளிப்பு நிறைந்த சூழ்நிலையில் ஆனந்த விகடன் பத்திரிகையில், அன்று பராசக்தி...இன்று பல்டியே சக்தி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எடுத்த நிலைப்பாடுகள் குறித்து அருவருப்பான கேலிச்சித்திரங்களுடன் வெளியான கட்டுரை அது. அதில் இடம்பெற்ற அம்சங்கள் அனைத்துமே 2009ஆம் ஆண்டு தொடங்கி பலமுறை ஊடகங்களாலும் ;அரசியல் கட்சிகளாலும் விமர்சிக்கப்பட்ட வி­யங்களே. அதற்கான பதில்கள் அப்போதைக்கப்போது தி.மு.க. தரப்பில் இருந்து தரப்பட்டுக் கொண்டே இருந்தன. என்றாலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் நினைவூட்டி விரிவான கட்டுரையை எழுதிட என்ன காரணம்?

வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதுதான் ஊடகங்களின் பணி. அந்த அடிப்படையில்தான் கட்டுரை வெளியிடப்பட்டது என்றால், ஜெயலலிதா கடந்த காலங்களில் எடுத்த மாறுபட்ட நிலைப்பாடுகள் பற்றி ஒரு விழிப்புணர்வுக் கட்டுரைகூட அந்தப் பத்திரி கையில் வெளியிடப்படாதது ஏன்? பொதுமக் களுக்கு ஒரு தரப்புக் குறித்த செய்திகள் மட்டும் தெரிந்தால் போதுமா? இன்னொரு தரப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளவே தேவையில்லையா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆனந்த விகடனில் வெளியான இன்னொரு கட்டுரையில் விடை இருந்தது. “ஜெய் ஹோ, ஜெயா ஹோ” என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், “ஈழ விவகாரம் இப்போது சற்றே அடங்கி இருப்பதுபோலத் தோன்றினாலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் மறு பிரளயத்தை உருவாக்கும்” என்ற வரி இடம்பெற்றுள்ளது.

ஆக, மக்களவைத் தேர்தலின்போது மக்கள் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாரைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைத் தமது கட்டுரைகள் வழியாக வாசகர்களுக்கும், மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் நோக்கத்துடனேயே கட்டுரைகளும், கருத்துகளும் வெளியாகின்றன என்பதற்கு இதைவிடப் பொருத்தமான வேறு சாட்சி தேடினாலும் கிடைக்காது.

கருணாநிதியின் ஈழ நிலைப்பாடு பற்றிய கட்டுரையில் அவரைக் காட்டமான மொழியில் விமர்சித்த ஆனந்த விகடன், ஜெய் ஹோ...ஜெயா ஹோ என்ற கட்டுரையில் எத்தனைப் பக்குவத்தைக் கையாண்டுள்ளது என்பதற்குச் சில உதாரணங் களை மட்டும் பார்க்கலாம்.

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதி இல்லை என்று “பிரகடனம்” செய்தார் ஜெயலலிதா என்கிறது ஆனந்த விகடன். இதே ஐ.பி.எல் போட்டிகள் கடந்த ஆண்டிலும் நடந்தன; அப்போதும் இலங்கை வீரர்கள் தமிழ்நாட்டில் விளையா டினர்; அப்போதும் ஈழத்தமிழர் விவகாரம்  தமிழ்நாட்டில் விவாதத்தில் இருந்தது; அப்போதே இனப்படுகொலைகள் நடந்திருந் தன. ஆனாலும் அப்போது ஏன் இப்படியான பிரகடனத்தை அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா செய்யவில்லை என்று இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பவில்லை. செலக்டிவ் அம்னீ´யா?

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமருக்கு அவர் (ஜெயலலிதா) எழுதிய கடிதம் இலங்கைக்கு அடுத்த அச்சுறுத்தலாக அமைந்தது என்பது கட்டுரையில் இருக்கும் ஒரு வாக்கியம். முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்குக் கடிதம் எழுதினால் அது கேலிக்குரிய வி­யம். ஆனால் அதே கடிதத்தை முதலமைச்சர் ஜெயலலிதா எழுதினால் அது அடுத்த நாட்டையே அச்சுறுத்தும். இது எப்படி சாத்தியம்? விகடனாருக்கே வெளிச்சம்.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய உடன்படிக்கையை இந்தியா உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இல்லையயன்றால், காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் சென்று உரிமையை நிலைநாட்டியது போலச் செய்வேன் என்று அறிவித்தார் என்கிறது அந்தக் கட்டுரை. ஆனால் 22 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே சூளுரையைத்தான் ஜெய லலிதா செய்தார். ஆனால் அந்த முயற்சியில் ஓரங்குலம்கூட முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை ஏன் கட்டுரையாளர் எழுதவில்லை?

nedumaranஅந்தக் கட்டுரை இப்படி முடிகிறது. ‘பெரிய கெட்ட பெயரை அவரே உருவாக்கிக் கொள்ளாமல் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில், ஜெய் ஹோ...ஜெயா ஹோதான்’. எப்படி...பூனைக்குட்டி குபீரென்று குதிக்கிறது பாருங்கள். அதாகப்பட்டது, ஜெயலலிதா அரசு இன்னமும் எந்தவிதமான கெட்ட பெயரையும் வாங்கவில்லையாம். பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு விவகாரம், அமைச்சரவை மாற்றம், பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தர்மபுரி சாதிக்கலவரம், தொடரும் வரலாறு காணாத மின்வெட்டு என்று எல்லாவற்றையும் நாம் மறந்துவிட வேண்டுமாம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஓரிரு நடவடிக்கைகள் எடுத்து விட்டதால் மக்களவைத் தேர்தலில் முழுமையான வெற்றியை அம்மாவுக்குத் தரவேண்டுமாம். இதுதான் விகடனின் விருப்பம், விழைவு. அதைத்தான் தன்னுடைய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை மோசமான கருத்துத் திணிப்பு இது.

ஆனந்த விகடன் மட்டுமன்று, குமுதம் ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், தினமலர், தினமணி போன்ற அச்சு ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர்களுக்குத்தான் சிவப்புக்கம்பள வரவேற்பு. அவர்களுடைய பேட்டிகளும், கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன. அச்சு ஊடகங்கள்  மட்டுமல்லாமல், புதிய தலைமுறை, தந்தி டி.வி., சத்யம் டிவி போன்ற புதிய தொலைக்காட்சி சேனல்களும் அவ்வப்போது தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுக்கின்றன. விவாத நிகழ்ச்சிகளும் தி.மு.க.வைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. டி.ஆர்.பி. ரேட்டிங்கும் எகிறும், ஆளுங் கட்சியின் ஆதரவும் கிட்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வேண்டுமா, ஓங்கி அடி தி.மு.க.வை!

ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அடையாளம் தேட விரும்புகின்ற அல்லது அடையாளத்தை இழக்க விரும்பாத ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும்கூட இதே நிலைப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, பழ. நெடுமாறன், தமிழருவி மணியன், தா. பாண்டியன், பெ. மணி யரசன் போன்ற கருணாநிதி எதிர்ப்பாளர்கள் இப்போது ஆவேசத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கருணாநிதிதான் காரணம் என்று கட்டுரை எழுதிவிடு கிறார்கள். தொட்டதற் கெல்லாம் 2009இல் என்ன செய்து கொண்டிருந்தார் கருணாநிதி என்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எம்.பி பதவியை தி.மு.க. ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்றால், தி.மு.க.வுக்கு மட்டும்தான் உணர்வு இருக்கவேண்டும்; மற்றவர்களுக்குப் பதவி பத்திரமாக இருக்க வேண்டு மா? ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களின் எம்.பிக்கள் ராஜினாமா செய்திருந்தால், அது தி.மு.க.வுக்கு எத்தனை பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கும்? வேறு வழியில்லாமல் தி.மு.க.வும் வெளிவந்திருக்குமே? ஆட்சியும் கவிழ்ந்தி ருக்குமே? யுத்தமும் நின்றி ருக்குமே? ஏன் அவர்கள் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை?

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகினால், தமது கட்சியின் ஒன்பது எம்.பிக்கள் அரசை ஆதரிப்பார்கள்; எஞ்சிய ஒன்பது எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டித் தரவேண்டியது தன்னுடைய பொறுப்பு என்று ஜெயலலிதா சொன்னது, எல்லாம் அவர்களுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் அதைப்பற்றிப் பேசமாட்டார்கள். காரணம், அவர்களுடைய நோக்கம் எல்லாம் தி.மு.க. எதிர்ப்பு மட்டுமே.

vaikoஎதிர்க்கட்சியாக இருக்கும்போது டெசோவைப் புதுப்பிக்கும் கலைஞர், ஆட்சியில் இருக்கும்போது ஏன் டெசோவைத் தொடங்கவில்லை என்று வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கேட்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது அதிகாரம் கையில் இருக்கிறது. ஆகவே, தனியாக அமைப்புகள் எதுவும் தேவை யில்லை. ஆனால் ஆட்சி போனபிறகு அதிகாரம் கையில் இல்லாத சூழலில் பல அமைப்புகளை ஒருங்கிணைத்துப் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. டெசோ புதுப்பிக்கப்படுகிறது. இந்த யதார்த்தம் அவர்களுக்கும் தெரியும். அதற்காகத் தி.மு.க.வை விமர்சிக்காமல் விட்டால் விளம்பர வெளிச்சத்துக்கு எங்கே போவது? தி.மு.க.வைத் தாக்கி எழுதினால்தானே வைத்தியநாத அய்யர்கள் நடுப்பக்கக் கட்டுரைக்கு வாய்ப்பளிப்பார்கள்.

தமிழ்நாட்டில் மாணவர் போராட்டம் வெடித்த போது, அதை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எப்படிப் பயன்படுத்துவது என்று சிந்திப்பதற்குப் பதிலாக, உருவாகியிருக்கும் எழுச்சியை தி.மு.க. எதிர்ப்புக்கு எப்படிப் பயன்படுத்துவது என்றுதான் சில ஈழ ஆதரவு இயக்கங்களும், தமிழ்த்தேசிய இயக்கங்களும்  சிந்தித்தன. உதாரணமாக, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது குறித்து சமீபத்தில் உருவான ஈழ ஆதரவு இயக்கம் ஒன்றின் ஒருங்கிணைப் பாளரிடம் கருத்துக் கேட்கிறது ஒரு தொலைக்காட்சி சேனல். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்:

“தி.மு.க.வின் டெசோ நாடகங்கள் இங்கே அம்பலப் பட்டுக் கொண்டிருக்கின்றன”.

இது என்ன வகையான பதில்? ஒன்று, மாணவர்கள் போராட்டத்தை அவர் வரவேற்க வேண்டும். எங்கள் ஆதரவு மாணவர்களுக்கு உண்டு என்று சொல்லவேண்டும். அல்லது இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தரப்போவதில்லை என்று சொல்லவேண்டும். இங்கே தி.மு.க.வும் டெசோவும் ஏன் வந்தன? வி­யம் இருக்கிறது. தி.மு.க.வையும் டெசோவையும் பற்றிப் பேசினால் அன்று மாலையே பிரபல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உறுதியாகும். ஆக, இலக்கு அதுதான் என்கிறபோது அப்படியான பதிலைத்தானே சொல்ல வேண்டியிருக்கும்?

சமீபத்தில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அப்போது தி.மு.க. வெளிநடப்புச் செய்து, ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டது என்கிறார் பழ. நெடுமாறன். உண்மையில் அன்று தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதன்பிறகுதான் ஈழம் தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப் பட்டது. ஒருவேளை தி.மு.க. வெளிநடப்புச் செய்திருந்தால் மீண்டும் சட்டமன்றத்துக்குள் நுழையலாம். மாறாக, சபாநாயகரால் வெளியேற்றப்பட்டிருந்ததால் உள்ளே வர முடியாது. ஈழப் பிரச்சினைக்காகக் கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தபோது, அதே சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பதவியில் நீடித்த பழ. நெடுமாறனுக்கு, சட்டமன்ற விதிகள் நன்றாகவே தெரியும். ஆனாலும் தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துவிட்ட பிறகு, விதிகளை எல்லாம் நினைவூட்டிக் கொள்வது வீண்வேலை அல்லவா?

ஆக,இவர்கள் அனைவருக்கும் இன்றைய இலக்கு, தி.மு.க.வை எதிர்ப்பது மட்டும்தான். அதன்மூலம் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒன்றுதிரட்டி, அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க.வுக்கு அல்லது அதன் கூட்டணிக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் இது. அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைப் பிரபல ஊடகங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆக, தி.மு.க.வுக்கு எதிரான இருமுனைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்கள். வாழ்க அரசியல் நேர்மை! வாழ்க ஊடக தர்மம்!