மராத்திய மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர் தன் உரிமைக்காகப் போராடி வரும் செய்தியை இந்து நாளிதழ் (01.09.2013) வெளியிட்டுள்ளது.

அந்த ஆசிரியரின் பெயர் சஞ்சய் சால்வே. ஆங்கில ஆசிரியர். 1996 ஆம் ஆண்டு முதல், நாசிக்கில் உள்ள சாவித்ரிபாய் பூலே பள்ளியில் பணியாற்றி வருகின்றார். முதல் 12 ஆண்டுகளிலும் நல்லாசிரியர் என்ற பெயர் பெற்றவர். தலித் வகுப்பினர். சில ஆண்டுகளுக்கு முன் புத்த மதத்தைத் தழுவியவர்.

2007 ஆம் ஆண்டு அந்தச் சிக்கல் தொடங்கியது. ஒரு நாள் காலையில் பள்ளியில் இறை வணக்கம் நடைபெற்ற போது, சால்வே பின்புறமாகக் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டி ருந்தார். அதனைக் கவனித்த தலைமை ஆசிரியர், மதுக்கர் பச்சவ் அவரைத் தன் அறைக்கு அழைத்துக் கண்டித்தார். அதற்கு சால்வே, தான் ஒரு பௌத்தன் என்றும், தனக்கு உடன்பாடில்லாத மத வழிபாட்டு முறையைத் தான் ஏற்க இயலாது என்றும் கூறினார். தலைமை ஆசிரியர் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நிர்வாகத்தினரிடம் சென்றார்.

 அதனை ஒழுங்குப் பிரச்சி னையாகக் கருதிய நிர்வாகம் அவர் மீது நட வடிக்கை எடுத்தது. 2008ஆம் ஆண்டு முதல், சட்டத்திற்கு விரோதமாக அவருடைய ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தது. அது கண்டு அஞ்சாத சால்வே, எவரிடத்தும் சென்று கெஞ்சவில்லை.

மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அரசமைப்புச் சட்டம் 28(3)க்கு இது விரோதமானது என்று கூறி வாதாடினார். அதனை ஏற்ற நீதிமன்றம் நல்ல தீர்ப்பை 2010இல் வழங்கியது. ஆனால் இன்றுவரை பள்ளி நிர்வாகம் நீதிக்கு இணங்க வில்லை. சால்வே தொடர்ந்து நீதிமன்றம் சென்று கொண்டுள்ளளார்.

உற்றார் உறவினர்கள் அவருக்கு ஊக்கமளிக்கவில்லை. உனக்கு ஏன் இந்த வம்பு, நிர்வாகத்துடன் இணங்கிப் போ என்கின்றனர். ஆனால் ஊதியத்தை இழந்தாலும், தன்மாணத்தை இழக் காமல் சால்வே இன்றுவரை போராடி வருகின்றார்.

சால்வேயை வியக்கிறோம். சால்வேயைப் பாராட்டுகிறோம். சால்வேக்குத் தலை வணங்குகின்றோம்!