"ஆம், நாங்கள் அணுகுண்டு தயாரித்திருப்பது உண்மைதான். அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்?' என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதி நிசாத் வெளிப்படையாக எழுப்பியுள்ள கேள்வி, உலகெங்கும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் உலகப்போரை நோக்கி உலகம் நகர்கிறதோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

20ஆம் நூற்றாண்டு இருபெரும் உலகப் போர்களைச் சந்தித்தது. உலக நாடுகளில் ஒருநாடும் மீதமில்லாமல், எல்லா நாடுகளும் அழிவுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாயின. கோடிக் கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். பொருட்சேதத்திற்கும் அளவில்லை. அடுத்த போர் வந்துவிடுமோ என்று 1950களில் உலகம் அஞ்சி நடுங்கியது. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அப்படி ஏதும் நடந்துவிடவில்லை.

ஆனாலும், இரு வல்லரசுகளாகத் திகழ்ந்த அமெரிக்காவும், சோவியத்தும் பனிப்போர் ஒன்றை நடத்திக் கொண்டேதான் இருந்தன. சில வேளைகளில் தங்களின் வலிமையை வியட்நாம் போன்ற அயல்நாடுகளில் சோதித்துப் பார்த்துக் கொண்டன. இறுதியாக 1990ஆம் ஆண்டு அப்பனிப்போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சோவியத் 14 துண்டுகளாக உடைந்து சிதற, அமெரிக்காவே உலகின் ஒற்றை வல்லரசாய் முடி சூடிக் கொண்டது.

Iran_370கிழக்கில் ஒரு ராட்சதன் பதுங்கி இருக்கிறான். என்றேனும் ஒருநாள் அமெரிக்காவுக்கு எதிராய் அவன் எழுவான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சீனாவைக் குறிப்பிடுவார்கள். இப்போது அந்த அரக்கன் வெளிப்பாடு தெரிகிறது. சீனாவின் பின்புலத்தில் தான், ஈரான் அதிபர் அமெரிக்காவை எதிர்க்கத் துணிந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அதனை அவர் மறைக்காமல் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

அண்மைக் காலமாகவே அமெரிக்கா இசுலாமிய நாடுகளின் மீது போர் தொடுப்பதை ஒரு வழக்க மாகக் கொண்டுள்ளது. அதிபர்களாக இருந்த இரண்டு புஷ்களும் படையயடுப்பில் பேரார்வம் காட்டினர். 1990களின் தொடக்கத்தில், ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அது முழுமை பெறாவிட்டாலும், பத்தாண்டு களுக்குப் பிறகு அவ்வெண்ணம் நிறைவேறியது. அதுபோலவே ஆப்கானிஸ்தான் மீதும் கடும் யுத்தம் ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டது. அந்த வரிசையில் அடுத்து ஈரான்தான் என்னும் எண்ணம் உலக நாடுகளுக்கு இருந்தது.

ஈராக் பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கிறது. இரசாயனக் குண்டுகளும் அதில் அடக்கம். அவற்றை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அழிக்காமல் விட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்நாட்டின் மீது அமெரிக்காவின் போர் தொடங்கியது. ஆனால் இறுதி வரையில் எந்த ஒரு ஆயுதத்தையும் அங்கே அமெரிக்கா கண்டெடுக்கவில்லை. சதாம் உசேனை தூக்கில் ஏற்றியதோடு அதன் பணி முடிந்து விட்டது. அங்கு நடந்து முடிந்த மனித உரிமை மீறல்கள் கட்டுக்கடங்காதவையாக இருந்தன. அவற்றை எல்லாம் தட்டிக்கேட்க உலகில் எந்த நாட்டிற்கும் வலிமை இல்லை.

இப்போது ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்போம் என அமெரிக்கா சொல்லிக் கொண்டிருந்தது. உலகையே அதிர வைக்கும் வகையில், ஈரானின் அதிபர் அது உண்மைதான் என அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வழங்கவும் தடை விதித்திருக்கிறார். இவை அனைத்தும் மூன்றாவது உலகப் போருக்கான முன்னோட்ட மாகவே தோன்றுகிறது.

இன்னொரு உலகப் போரை இனி ஒரு நாளும் மக்கள் விரும்ப மாட்டார்கள். வல்லரசுகள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.