க்கள்திரள் பங்கேற்பை மறுக்கும் எந்தவொரு போராட்டமும் ஒழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டுகள் கண்ணெதிரே இருக்கின்றன. ஒன்று ஈழம், மற்றொன்று லால்கர்.

இந்திய மாவோயிஸ்ட் கட்சியை ஆதரித்து அதன் நிலைப்பாடுகளை வெளியிடுகின்ற People’s Truth என்ற Bulletin எண் 7ல் (செப். 2009) “தமிழீழ போராட்டமும் அதன் படிப்பினைகளும்” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் “விடுதலைப்புலிகளின் தோல்வியும் படிப்பினைகளும்” என்ற குறுந்தலைப்பில் “மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள்” என்ற மாவோவின் கூற்றை மேற்கோள் காட்டி “மாவீரர்களே வரலாற்றை படைப்பவர்கள்” என்ற விடுதலைப் புலிகளின் அணுகுமுறையை விமர்சித்து... “புலிகள் நடத்திய ஈழ விடுதலைப் போராட்டத்திலோ மக்கள் வெறும் ஆதரவாளர்கள் மட்டும்தான் ... மக்கள் மட்டுமே வரலாற்றை உண்மையாக உருவாக்குபவர்கள் என்ற உலகம் முழுவதும் போராடும் மக்களின் அனுபவத்திலிருந்து கிடைக்கப்பெற்ற வரலாற்று ரீதியான உண்மையையும் எவ்வளவுதான் போர்க்குணம் உள்ளதாக இருப்பினும் நீண்டகால தன்மை கொண்டதாக இருப்பினும் இந்த வரலாற்று அனுபவங்களிலிருந்து திசை விலகுவது தவிர்க்க முடியாதபடி தோல்வியை ஏற்படுத்தும் என்பதை உள்வாங்குவதில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தனர். ...” என இரவீந்திரன் எழுதியுள்ளார்.

இது அப்படியே இந்திய மாவோயிஸ்ட் கட்சிக்கு பொருந்தும். அது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

லால்கர் பழங்குடி மக்களுடைய போராட்டம் இன்றுவரை யிலும் ஆதரிக்கப்பட வேண்டியதே. மாவோயிஸ்ட் கட்சியின் மீதான அரசு அடக்குமுறையையும் கடுமையாக கண்டிக்கப் பட்டு அதற்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது. இதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை.

இந்திய மாவோயிஸ்ட் கட்சி மக்கள்திரள் வழியை புறக்கணித்து மேற்கொண்ட இராணுவவாத செயலினால் விளைந்த அரசு அடக்குமுறையை எதிர்த்து லால்கர் மக்கள், மக்கள் திரள் வழியில் திரண்டு அதை பின்வாங்க வைத்து 6 மாதங்களாக வெற்றிகரமாக போராடிக் கொண்டிருந்த வேளையில் அதை மீண்டும் இராணுவவாத வழியிலேயே சிதைத்து அந்த மக்கள்மீது அரசு அடக்குமுறை ஏவப்படுவ தற்கு பிரதான காரணமாகி விட்டது. எனினும் இந்திய மாவோயிஸ்ட் கட்சியின்மீது தொடுக்கப்படும் அரசு அடக்குமுறைக்கு எதிராக இயன்ற அளவு அனைத்தையும் செய்யவேண்டிய தருணம் இது.

முதலாவதாக, இந்திய மாவோயிஸ்ட் கட்சியானது. நவம்பர் 2008ல் மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா பயணம் செய்த தடத்தில் இரண்டு காரணங்களுக்காக கண்ணிவெடிகளை வெடிக்க வைத்தது. அவையாவன: புத்ததேவ், அரசு அடக்குமுறையை ஏவுகிறார். (2) இந்தியப் பெரு முதலாளி ஜிண்டால் அமைக்கின்ற சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படக் கூடாது.

மக்கள் விரோத முதலமைச்சர் இறப்பது பற்றி மக்களுக்காக இருப்போருக்கு வருத்தம் இருக்கப் போவதில்லை. ஆனால் அத்தகைய முதலமைச்சருக்கு எதிராக மக்கள்திரள் வழியில் மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் எதையும் இந்திய மாவோயிஸ்ட் கட்சி நடத்தவில்லை.

மேலும் முந்நாளைய மக்கள்யுத்தக் கட்சியானது 10 ஆண்டுகளுக்கு முன்பேயே புத்ததேவுக்கு மரண தண்டனையை அறிவித்துவிட்டது. இந்த 10 ஆண்டுகளில் அவருக்கு மரண தண்டனையை வழங்குவதை நியாயப் படுத்தும் வகையில் மக்கள்திரள் போராட் டம் எதையும் முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சியோ இந்நாளைய மாவோயிஸ்ட் கட்சியோ நடத்தவேயில்லை.

அடுத்து, சிறப்பு பொருளாதார மண்டலம் (சி.பொ.ம.) அமைக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் எதையும் நடத்தவில்லை. மாறாக, இந்தியாவில் ஹரியானா, மஹாராஷ்டிரா, ஓரிசா ஆகிய இடங்களில் மக்கள்திரள் வழியில் பெரிய அளவில் சி.பொ.ம. அமைக்கப்படுவதற்கு எதிராக நடைபெற்று வருகின்றன.

ஒரிசாவில் தென்கொரிய தொழிற்கழகமான போஸ்கோ அமைக்கவுள்ள சுரங்கம், தொழிற்சாலை, துறைமுகம் ஆகியவற்றிற்கு எதிராக 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று இன்றுவரையிலும் அந்தத் தொழிற்கழகம் தோல்வியை சந்தித்து இதற்காக எதையும் செய்ய இயலாமல் திண்டாடி வருகிறது. அரசு அடக்குமுறை ஏவப்பட்டும் பலன் இல்லை. இப்பகுதியில் பொது வாக்கெடுப்பை நடத்துவதென ஒரிசா மாநில அரசாங்கம் ஜனவரி 2010 3ஆம் வாரத்தில் முடிவெடுத்துள்ளது.

அதே ஒரிசாவில் டாடா அமைப்பதாக இருந்த ஒரு பெரிய இராட்சச தொழிற்சாலை திட்டத்தை எதிர்த்து ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடந்ததால் டாடா அந்தத் திட்டத்தையே அண்மையில் கைவிட்டு விட்டது.

மஹாராஷ்டிராவில் ரிலையன்ஸ் அமைக்கவுள்ள சி.பொ. மண்டலத்தை எதிர்த்த போராட்டத்தில் மக்கள், பொது வாக்கெடுப்பை நடத்த நிர்ப்பந்தித்து மாவட்ட ஆட்சியர் அதை வேறுவழியில்லாமல் செய்தார். அதில் ரிலையன்சுக்கு எதிராகவே அதிக வாக்குகள் பதிவாயின. ரிலையன்ஸ் சில அடிகள் பின்வாங்கி சில சலுகைகளைஅளிக்க முன் வந்துள்ளது.

இதனால் இந்தச் சி.பொ. மண்டலத்திற்கு புதுப்பித்தல் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அடுத்ததாக, பி.எஸ். குல்கர்னி பூனாவில் அமைக்க உள்ள சி.பொ. மண்டலத்திற்கும் உள்ளூர் உழவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு இருக்கிறது. இந்த சி.பொ. மண்டலத்திற்கான இறுதி அறிவிக்கை கூட இதனால் தள்ளிப் போகிறது.

சட்டீஸ்கர் பாஜக அரசாங்கம் அந்த மாநிலத்தில் 3 சி.பொ. மண்டலங்களை அமைக்க தீர்மானித்து 25-30 கிராமங் களைச் சேர்ந்த 7000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப் படுத்த உத்தரவிட்டது. பின்னர் உழவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தினால் இந்த சி.பொ. மண்டலங்களை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த சி.பொ. மண்ட லங்களை எதிர்த்து மக்களை திரட்டவே இல்லை மாவோயிஸ்ட் கட்சி. முதலமைச்சருக்கு எதிராக கண்ணிவெடியையும் வைக்கவே இல்லை.

அடுத்ததாக, மாவோயிஸ்ட் கட்சி மிகவும் பலமாக உள்ள பஸ்தர் மாவட்டத்தில் டாடா - எஸ்ஸார் குழுமம் பைலாடிலாவில் இரும்புத் தாதுவை வெட்டியெடுத்து குழாய் வழியாக விசாகப்பட்டினம் வரை கொண்டு செல்வதற்காக 375 கி.மீ. அளவுக்கு குழாயை அமைத்து விட்டது.

லால்கரில் இருப்பதைவிட இம்மாவட்டத்திலும் ஒட்டுமொத்த சட்டீஸ்கர் மாநிலத்திலும் பலமாக இருக்கும் மாவோயிஸ்ட் கட்சியானது இவற்றை எல்லாம் தடுக்க மக்களை ஏன் திரட்டவில்லை? இந்த 375 கி.மீ. குழாய்க்கோ முதலமைச்சருக்கோ கண்ணிவெடியை வைக்கவே இல்லை.

இவ்வாறு ம.தி.வழியில் போராடுவதற்கு மாறாக இராணுவவாத வழியில் கண்ணி வெடிவைத்து ஜிண்டால் கம்பெனியை அமைக்கவிடாமல் செய்துவிடலாம் என மாவோயிஸ்ட் கட்சி நம்புகிறது.

இந்திய மாவோயிஸ்ட் கட்சியானது சி.பொ. மண்டலத்திற்கு எதிரான மக்கள்திரள் வழியிலான போராட்டங்களுக்கு பதிலாக இத்தகைய வடிவத்தையே மேற்கொண்டது.

மக்கள் திரள் வழி மற்றும் போராட்டங்களின் முக்கியத் துவம் பற்றி முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சி, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (MCC) இந்நாளைய இந்திய மாவோயிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆவணங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

“நமது கட்சியானது நமது மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான பாதையாக நாடாளுமன்ற பாதைக்கு எதிராக ஆயுதப் போராட் டமே ஒரே பாதை என சரியாக வகுத்தது. ஆனால் நாம் ஆயுதப் போரட்டப் பாதையுடன் இதர போராட்ட வடிவங்களை குழப்பிக் கொண்டோம்...”

இதர போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் (மக்கள்திரள் போராட்டமும் மக்கள்திரள் அமைப்பு களும்) இன்றியமையாதவை. அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ புரட்சிகரப் போருடன் இணைக்கப் பட வேண்டும். நாம் ஆயுதப் போரட்ட வடிவத்தை ஒரே போராட்ட வடிவமாக தவறாக மேற்கொண்டோம்.

ஸஆதாரம்: “கடந்த காலத்தை தொகுத்து ஆயுதப் போராட் டப் பாதையில் வெற்றிகரமாக முன்னேறுவோம்” (சுய-விமர் சன மீளாய்வு); வெளியீடு - மையக் குழு, (இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட்) (மக்கள் யுத்தம்) ; 22. 4. 1980; பிரசுரிப்பு-டிசம்பர் (1984); ஆங்கிலப் பிரதி)]

“.... மக்கள்தான் பலமான கோட்டை - இரும்பினாலான கோட்டை என்று மிக வேகமாக நாம் கூறிய நேரத்திலும் நடைமுறையில் அவர்களை அணிதிரட்டி உறுதிப்படுத்தும் அவசியத்தை உணரத் தவறினோம். மேலும் வெகுஜன ஸ்தாபனங்கள், ஆயுதப் போராட்டத்திற்குத் தடைகள் என்று கருதினோம். அதன் விளைவாக போராட்டத்தின் கடந்த பத்தாண்டின்போது மக்கள் தங்களுடைய தயார்நிலை, உணர்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உகந்த வகையில் உறுதிப்படுத்துவதற்கு வசதி அளித்து இருக்கக் கூடிய போராட்ட வடிவங்கள், ஸ்தாபன வடிவங்கள் ஆகிய இரண்டு சம்பந்தப்பட்ட மட்டிலும் முழுக்க, முழுக்க எதிர்மறையான ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொண்டோம். அந்த அளவில், மக்களிடையே ஊடுருவுவதிலும் அவர்களை முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, திருத்தல்வாத செல்வாக்கு ஆகியவற்றில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதிலும் அவர்கள்மேல் தொழிலாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவுவதிலும் நமது கடமையின் பங்கை நிறைவேற்ற நாம் தவறினோம்.”

(மேலே பார்த்த சுய- விமர்சன மீளாய்வு, பக். 33-34)

இந்த மீளாய்வு அறிக்கை இந்தத் தவற்றை சீர்செய்வதற்கான வழியை இவ்வாறு குறிப்பிடுகிறது.

“வெகுஜன ஸ்தாபனங்களின் முக்கிய நோக்கம் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவதாகும். மக்கள் முறையாக அணி திரட்டப்படாதவரை, புரட்சி வெற்றிகரமாக மாற முடியாது. புரட்சியின் வெற்றிக்கு ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சி நீடிப்பது ஒரு நிபந்தனையாக இருப்பது போல், ஒரு பலமான மக்களின் ஸ்தாபனமும் ஒரு முன்நிபந்தனை யாகும். கடந்த காலத்தில் இந்த விஷயத்தில் நாம் செய்த தவறுகளை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்....”

(மேலே பார்த்த ஆவணம், பக். 59)

மேலே பார்த்த இரு பத்திகளில் உள்ளவை கடைப்பிடிக்கப்படவேயில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம்) 1995-ல் நடத்திய அனைத்திந்திய சிறப்பு மாநாட்டின் அரசியல் - அமைப்பு மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக

“...மக்கள்திரள் அமைப்புகள் மற்றும் இயக்கங்களில் நம்மிடையே சில குறைபாடுகள் உள்ளன. அவையாவன:

1. திறமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மக்கள்திரள் அமைப்புகளையும் இயக்கங்களையும் கொண்டு செல்லும் திறமையான செயல்வீரர்கள் இல்லாமை.

2. மக்கள் திரள் இயக்கங்களை தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கான உடனடி நிகழ்ச்சி நிரல் இல்லாமை

3. மக்கள்திரள் அமைப்புகளின் கொள்கை அறிக்கை மற்றும் விதிப்படி, அமைப்பு கட்டமைப்பு மேற்கொள்ள திட்டமின்மை...”

(ஆதாரம் :- இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தின் (MCC) அரசியல் அமைப்பு மீளாய்வு அறிக்கை, 2004 - பக். 69) (தமிழ் பிரதி)

“...பல பகுதிகளில் நமது கட்சியின் செயற்பாடு இன்னமும் ஆயுதக்குழுவை மையமாக கொண்டு இருக்கிறது. இது மக்கள் திரள்களை செயலற்ற ஆதரவாளர்களாக ஆக்குகிறது; போராட்டங்களை மேற்கொள்வதற்கு ஆயுதக் குழுக்கள் மீது சார்ந்திருப்பதாக ஆக்குகிறது.”

(ஆதாரம்: இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் -அமைப்பு அறிக்கை, இந்திய மாவோயிஸ்ட்டுகள், ரேடிகல் பப்ளிகே ஷன்ஸ்,கோல்கத்தா, 2009 பக். 99, ஆங்கிலம்.)

“...அரசியல் சிக்கல்களின் மீதான பரந்த அடிப்படையிலான மக்கள்திரள் இயக்கங்களை கட்டியமைப்பதில் சரியான திசைவழி என்ற பிரச்னை இன்னமும் இருக்கிறது.”

(ஆதாரம்: மேற்கண்ட நூல்; பக். 104)

மேலே பார்த்த பத்திகள் மக்கள்திரள் வழி மற்றும் மக்கள்திரள் அமைப்பு -இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவை நடைமுறையில் இல்லாதது பற்றியும் சுயவிமர்சனமாக பார்க்கப் பட்டுள்ளன.

ஆனாலும் இந்த சுயவிமர்சனப் பார்வை லால்கர் சிக்கலில் பிரயோ கிக்கப்படவே யில்லை.

லால்கர் மக்கள் மாவோயிஸ்ட் கட்சியின் இராணுவவாத செயற் பாட்டால் ஏற்பட்ட அரசு அடக்கு முறையினை போர்க்குணமிக்க வகையில் மக்கள்திரள் வழியில் எதிர்கொண்டு 6 மாதங்களுக்கும் மேலாக அரசு அடக்குமுறையினை பின்வாங்க வைத்து இருந்தனர்.

எட்டு போலீஸ் முகாம்களை அப்புறப்படுத்த வைத்தனர். அரசாங்க நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. போலீசை மக்கள் சமூக பகிஷ்காரம் செய்து தனிமைப்படுத்தினர். நாடாளுமன்ற தேர்தலின்போது போலீஸ் இதைச் சாக்காக வைத்து நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக வாக்குச் சாவடிகளை வேறிடங்களில் அமைக்க வைத்து உறுதியாக இருந்து அதில் வெற்றிபெற்றனர்.

சிபிஎம் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் கடும் தோல்வி யடைந்த பின்னர் லால்கர் பகுதியில் உள்ள சிபிஎம் ஆதிக்கச் சக்திகளை முறியடிப்பதற்கு மக்கள்திரள் வழியை மேற் கொள்வதற்கு மாறாக, மாவோயிஸ்ட் கட்சியின் ஆயுதக் குழுவினர் ஆங்காங்கே அவர்களை அழித்தொழித்தனர். காலங்காலமாக சிபிஎம் அரசாங்கத்தின்மீது இருக்கும் கோபத்தில் ஒரு பிரிவு பழங்குடிகளும் இந்த ஆதிக்கச் சக்திகளின் மீதான தாக்குதல்களில் பங்குகொண்டு அவர்களின் வீடுகளை அடித்து நொ இந்தப் பங்கேற்பை வைத்து லால்கர் பகுதியை விடுதலைப் பிரதேசமாக அறி வித்துவிட்டது. விடுதலைப் பிரதேசம் என ஒரு பகுதி குறிப் பிடப்படுவதற்கு மாவோயிஸ்ட் கட்சி சொல்கின்ற வரையறைகளுக்கு முரணாகவே இந்த அறிவிப்பு இருக்கிறது.

மத்திய -மாநில அரசாங்கங்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டதாலும் விடுதலைப் பிரதேசம் என அறிவிக்கப்பட்டதாலும் தாக்குதலை தொடுக்கத் தொடங்கின.

மாவோயிஸ்ட் கட்சி மக்களை முன்னிறுத்தி இந்த அரசு அடக்குமுறையை எதிர்கொள்ளாமல் கெரில்லாவாத அணுகுமுறையில் எதிர் கொண்டு பின்வாங்கியது. லால்கர் பகுதியை சேர்ந்த எண்ணற்ற ஆண்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறி விட்டனர். பெண்களும் குழந்தைகளும் முதியோரும் உண்ண உணவில்லாமல் அரசாங்கமும் திருணாமுல் காங்கிரசும் ஏற்பாடு செய்த முகாம்களுக்கு செல்ல வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் ஜனநாயக சக்திகளாக உள்ள சில அறிவு ஜீவிகளின் தலையீட்டின்பேரில் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் சில கோரிக்கைகளை முன்வைத்து அதை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மாவோயிஸ்ட் கட்சி கூறியது.

மூன்று கட்டங்களாக வைக்கப்படவேண்டிய கோரிக்கை களை முதல் கட்டத்திலேயே வைக்கப்பட்டதால் அது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

முதல் கட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள்:

1. மத்திய- மாநில படையினரை திரும்பப் பெறுவது.

2. மக்கள் மீதான அடக்குமுறைக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக் கை.

3. கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வது.

4. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லாவிதமான ஈட்டுத் தொகைகளையும் வழங்குவது.

நவம்பர் 2008ல் அரசு அடக்குமுறையின் விளைவாக அமைக்கப்பட்ட போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (PCAPA) யின் 13 அம்ச கோரிக்கைப் பட்டி யலும் இவற்றை ஒட்டியே இருந்தன.

ஆனால் மாவோயிஸ்ட் கட்சியோ இரண்டாம் கட்டத்தில் வைக்கப்பட வேண்டிய குடிநீர் மற்றும் மின்சாரம் சார்ந்த கோரிக்கைகளையும் மூன்றாம் கட்டத்தில் வைக்கப்பட வேண்டிய சந்தால் மொழியில் கல்வி, அல்சிகி வரி வடிவத்தில் சந்தால் மொழி கற்பிப்பு ஆகிய கோரிக்கை களையும் முதல் கட்டத்திலேயே வைத்தது.

இதன் விளைவாக, கோரிக்கைகள் வைக்கப்பட்ட தோடு சரி. அடுத்த கட்டத்திற்கு இவற்றை நகர்த்த முடியவில்லை. அரசாங்கத்தின் தேடுதல் வேட்டைகளும் கைதுகளும் விசாரணைகளும் சித்ரவதைகளும் தொடர்ந்து நடக் கின்றன. மக்கள் அடுத்தடுத்து போராடுவதும்கூட முதல் கட்டமாக பார்க்கப்படக் கூடிய கோரிக்கைகளை வைத்துத் தான் நடக்கிறது. இன்றைக்கு மாவோயிஸ்ட் கட்சியானது பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் மத்திய - மாநில படைகளை திரும்பப் பெறுமாறும் சிறைப் பட்டோரை விடுவிக்குமாறும் முதல் கட்டமாக பார்க்கப்படக் கூடிய கோரிக்கைகள் (அ) நிபந்தனைகளையே வைக்கிறது. மேலும் மாவோயிஸ்ட் கட்சி தனது ஆவணத்திலேயே இந்தியப் புரட்சியை இரண்டு கட்டங்களாகவும் (புதிய ஜனநாயகப் புரட்சி, சோசலிசப் புரட்சி) இராணுவ மூலவுத்தியை மூன்று கட்டங்களாகவும் (மூலவுத்திரீதியான தற்காப்பு கட்டம், மூலவுத்திரீதியான சமநிலைக்கட்டம், மூலவுத்தி தியான தாக்குதல் கட்டம்) என்பதாகவே வகுத்துள்ளது.

அடுத்ததாக, மாவோயிஸ்ட் கட்சியையும் PCAPAவையும் ஒன்றாகப் பாவிக்கும் போக்கு மாவோயிஸ்ட் கட்சியிடம் இருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக் காட்டை முக்கியமாகக் கூறலாம்.

மாவோயிஸ்ட் கட்சியின் சார்பில் ஜார்கண்டில் பிரான்சிஸ் இந்த்வார் என்ற உளவுத்துறை ஆய்வாளரை கடத்திக் கொண்டு போய் அவரை விடுவிக்க வேண்டுமெனில் கோபட் காண்டி (மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்), சத்ரதர் மஹட்டோ (ஞஉயயீய நிர்வாகி), பூஷன் யாதவ் (மாவோயிஸ்ட் கட்சியில் முன்பு இருந்தவர்) ஆகியோரை விடுவிக்க வேண்டுமென்று ஊடகங்களுக்கு செய்தியை வெளியிட்டது. அரசாங்கம் இவர்களை விடுவிக்காததால் அவர் கொல்லப்பட்டார்.

இதில் பூஷன் யாதவ் எப்பொழுதோ கட்சியைவிட்டு விலகிவிட்டார். இத்தகைய ஒருவருக்காகவும் ஞஉயயீய தனி அமைப்பு என்று மாவோயிஸ்ட் கட்சி சொல்லும் நிலையில் அதன் நிர்வாகியான சத்ரதர் மஹட்டோவை கட்சியின் உறுப்பினர் போன்று காட்டுகின்ற வகையில் அவருக் காகவும் இந்த கடத்தல் நடத்தப் பட்டுள்ளது.

சத்ரதர் மஹட்டோ மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என காட்டு கின்ற வகையில் இத்தகைய செயல் நடக் கும்போது அரசாங்கம் அவரை வேறுவிதமாகத்தான் கையாளும். அவரின் விடுதலைக்காக மக்கள் திரளை வைத்து ஞஉயயீய சார்பில் போராடுவதே சரியாக இருக்கும். கட்சி அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கலாம். இதர வடிவங்களில் செயற்படலாம்.

இவ்வாறு மாவோயிஸ்ட் கட்சியின் இராணுவவாத வழியானது மக்கள் திரள் வழியைப் புறக்கணித்து 6 மாதங்கள் மக்கள்திரள் சாதித்த வெற்றிகளையும் பின்னுக்கு இழுத்து அரசு அடக்குமுறையையே கொண்டு வந்தது. இதனால் லால்கர் பகுதியில் மக்களின் ஆற்றலினால் உட்புறம் பூட்டிக் கொண்டு செயற்பட்ட போலீஸ் நிலையம் மீண்டும் வழக்கம் போல் செயற்படத் தொடங்கி விட்டது; ஆங்காங்கே போலீஸ் முகாம்கள் அமைக்கப் பட்டுவிட்டன. அரசு பாதுகாப்புப் படையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தீவிர பாதுகாப்பிலும் ரோந்திலும் இருந்து வருகின்றனர்.

இதன் விளைவாக மாவோயிஸ்ட் கட்சி லால்கர் பகுதியில் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். மக்களும் கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். ஞஉயயீய நிர்வாகி சத்ரதர் மஹட்டோவும் கைது செய்யப்பட்டுவிட்டார்.

இச்சிக்கலில் மாவோயிஸ்ட் கட்சி செய்த இதர தவறுகள்:

1. மக்கள்திரளிடையே கண்ணியமற்று நடந்து அவர்களின் உணர்வுகளை புறந்தள்ளியமை.

2. ஐக்கிய முன்னணி அணுகுமுறையை அமல் படுத்தாமை.

3. தன்னெழுச்சி.

4. கைவிடப்பட்ட அழித்தொழிப்பு வழி கடைப் பிடித்தமை.

5. வாய்ச்சவடால்கள்.

முதல் தவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக,

*மார்ச் 2009-ல் சிபிஎம்மைச் சேர்ந்த பழங்குடிப் பெண் ஆதரவாளர்கள் சிலர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலங்களில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டனர். சாதாரண பின்னணியைச் சேர்ந்த சிபிஎம் மின் ஆதரவாளர் கோபிநாத் மர்மு என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி ஊர்வலத்தில் கலந்துகொள்ளு மாறு இழுத்து வரப்பட்டார்.

(ஆதாரம்: CPI(ML) (Provisional Central Committee) என்ற கட்சியின் பொதுச் செயலர் சந்தோஷ் ராணா மாவோயிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல பீரோ வுக்கு எழுதிய கடிதம்)

*கார்த்திக் மஹட்டோ என்ற 34 வயதை உடைய ஒருவர் சல்போனி யில் உள்ள போரோ ஜம்டா உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். இவர் 14.9.09 அன்று மாணவர்கள் முன்னிலையிலேயே வகுப்பறையில் மாவோயிஸ்ட் ஆயுதக் குழுவினால் கொல்லப் பட்டார்.

*சிபிஎம் அலுவலகம் எதிரே சல்கு என்பவரின் உடல் வீசி எறியப் பட்டு அழுகும் அளவிற்குக் கிடந்தது.

(ஆதாரம் :- அதிகாரம் - கட்சி -காவல் என்ற கட்டுரை, குமார் ராணா, பக்.51, நூல் -லால்கர் - ஒரு மூன்றாவது பார்வை; புலம் வெளியீடு, சென்னை, 2009)

*ஜார்கண்டில் கொல்லப்பட்ட பிரான்சிஸ் இந்த்வார் என்ற உளவுத்துறை ஆய்வாளரின் உடல் தலை வெட்டப்பட்டு தனியே கிடந்தது.

*1.12.09 அன்று மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சிரிஸ்போனி கிராமத்தில் சத்யசிங்கர் ஹன்ஸ்டா என்ற பள்ளிக்கூட ஆசிரியர் கடத்தப்பட்டு தலை தனியாகவும் உடல் தனியாகவும் கிடந்தது.

இது போன்றவைகளை தவறென்றே மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக்கொள்கிறது.

அதுவும் கடத்தப்பட்டு தலை தனியே வெட்டப்பட்டு கொல்லப்பட்ட முறை (அதுவும் கட்சியை விட்டு விலகிச் சென்ற ஒருவரின் விடுதலையைக் கோரி) தவறென்றே மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கிஷன்ஜி கூறியுள்ளார். (ஆதாரம்: கிஷன்ஜி நேர்காணல், டெஹல்கா, 21 நவ. 2009)

கடத்தல்கள் பற்றி முந்நாளைய மக்கள் யுத்தக்கட்சி பின்வருமாறு மீளாய்வு செய்தது.

“ஒவ்வொரு சிறிய கோரிக்கைக்கும் அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் கடத்துவது சரியான வழி முறை இல்லை. சிக்கல்களை தீர்ப்பதற்கோ எதிர்ப்பை முன்னிறுத்தவோ மக்கள்திரள்கள் பெரிய அளவில் திரட்டப்படக்கூடிய போராட்ட வடிவங்களையே தெரிவு செய்ய வேண்டும்; அவற்றின் மீதே கவனத்தை குவிக்க வேண்டும். மக்கள் திரள்களை பெரிய அளவில் திரட்டாவிடில் புரட்சி நிறைவேறாது. கட்சித் தலைமை முதல் கிராம மட்டத்திலான அலகு வரை இதை புரிந்துகொள்ள வேண்டும். கடத்தல் என்பது ஒரு போராட்ட வடிவம் என்ற வகையில் இறுக்கமான வரம்புகளை உடையது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

ஆதாரம்: மைய அரசியல் - அமைப்பு மீளாய்வு, 1995, பக். 140 (ஆங்கிலப் பிரதி)]

மேலும் ஆந்திரப் பிரதேசத்தில் 1998வாக்கில் கடத்தல் குறித்து சுற்றறிக்கை கட்சி உறுப்பினர்களிடம் விநியோ கிக்கப்பட்டது. அதில் கடத்தலை அரிதான வடிவமாக பயன்படுத்த வேண்டும் எனவும் உரியமட்டத்தில் நன்கு விவாதிக்கப்பட்ட பின்னரே அதை மேற்கொள்ள வேண் டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதையும் கிஷன்ஜி கூறியுள்ளார். மேலும் இத்தகைய ஒரு நிகழ்விற்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

அடுத்ததாக, ஐக்கிய முன்னணி அணுகுமுறை முழுமையாக கடைப்பிடிக்கப்படவே இல்லை.

PCAPAவை தங்கள் முன்னணி அமைப்பு என்று கருது வதால்தான் அதன் நிர்வாகி சத்ரதர் மஹட்டோவை விடுவிக்கக் கோரி ஜார்கண்டில் உளவுத் துறை ஆய்வாளர் கடத்தப்பட்டார்.

PCAPAவில் மாவோயிஸ்ட் கட்சியினை சேர்ந்தவர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் அது மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் - இராணுவவழியில் கொண்டு செல்லப்பட்டு லால்கர் மக்கள் தமது போராட்டத்தில் பார்வையாளர்களாக குறுக்கப் பட்டார்கள்.

PCAPA வை மாவோயிஸ்ட் கட்சி இழுத்துச் செல்லும் விதம் குறித்தும் அதில் உள்ள இதர அமைப்புகளை கையாளும் விதம் குறித்தும் சந்தோஷ் ராணா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லவேயில்லை மாவோயிஸ்ட் கட்சி.

(ஆதாரம்: (1) மேலே பார்த்த சந்தோஷ் ராணாவின் கடிதம்

2) அஜய் எழுதிய கட்டுரை, Peoples March, அக். 2009.

இவ்வாறாக, மாவோயிஸ்ட் கட்சியானது லால்கர் சிக்கலில் மக்கள்திரள் வழியை புறக்கணித்து லால்கர் மக்கள் திரள்களின் போராட் டத்தை சிதைத்து ஏற்கனவே அம்மக் கள் பெற்ற வெற்றியை 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கவிடாமல் அதை அரசாங் கத்திடம் ஒப்புவித்துவிட்டது. இதற்கு காரணம், மாவோயிஸ்ட் கட்சியின் வழியே ஆகும். ஆயுத சீர்திருத்தவாதம் என்பதே அந்த வழியாகும். அதை இறுதியாகப் பார்ப்போம். அதற்கு முன்னர் மக்கள்திரள் வழிபற்றி அக்கட்சி கொண்டுள்ள புரிதலைப் பார்ப்போம்.

மக்கள்திரள் வழி பற்றிய ஒரு கட்டுரையில் (Peoples March, ஜூலை 2005, பக். 19-20) அது வெறுமனே மக்கள் திரளிடமிருந்து வரும் கருத்துகளை பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர்களை அதிகாரம் செலுத்தக் கூடாது எனவும் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

புறநிலையை துல்லியமாக ஆய்வுசெய்து மக்கள்திரள் எப்பொழுது எந்த வடிவத்தில் போராட வருவார்கள் என்ப தை கீழிறங்கி அறிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை அணி திரட்டும் திட்டத்தை வகுத்து பின்னரே அரசியல் பிரக்ஞையுடன் அவர்களை வளர்க்கும் எண்ணத்துடன் அரசியல் அதிகாரத்திற்காக திரட்ட வேண்டும்; திரட்டவும் முடியும்.

இவ்வாறு சொல்லும் பொழுது, மக்கள் திரளின் பிரக்ஞைக்கு வால்பிடிப்பதாக பொருள் அல்ல, அவர்களின் போராடும் அரசியல் பிரக்ஞையை இடைவிடாது தொடர்ச்சியாக வளர்க்கும் முகமாகவே நம்முடைய அனைத்து செயற்பாடுகளும் இருக்கவேண்டும்.

--- “கட்சியானது முன்னே செல்வது மட்டுமல்ல; மாறாக பரந்துபட்ட மக்கள்திரள் பின்தொடர்வதையும் உறுதிப் படுத்தியாக வேண்டும். பரந்து பட்ட மக்கள்திரள்கள் பின்தொடராமல் முன்னே செல்வது என்பது உண்மையில் இயக்கத்திலிருந்து முறித்துக் கொள்வதாகும். பின் புலப் படையிடமிருந்து முறித்துக் கொண்டு பின்புலப் படை தொடர்வதை உறுதிப்படுத்த முடியாமல் முன்னே செல்வது என்பது மக்கள் திரள்களின் முன்னேற்றத்தை குறிப்பிட்ட காலத்திற்கு தடுக்கக்கூடிய வகையில் முன்னே பாய்வதாகும். லெனினிய தலைமையின் சாரம் என்பது துல்லியமாக முன்னணி படையானது பின்புலப் படையின் பின்தொடர்தலை உறுதிப்படுத்த ஏதுவாக இருந்திட வேண்டும்; அதாவது முன்னணிப் படையானது மக்கள் திரள்களிடமிருந்து முறித்துக் கொள்ளாமல் முன்னே செல்ல வேண்டும் என்பதாகும். ஆனால் முன்னணிப் படையானது மக்கள் திரள்களிட மிருந்து முறிக்காத வண்ணம் இருப்பதற்கு, முன்னணிப் படையானது பரந்துபட்ட மக்கள் திரள்கள் பின்தொடர் வதை உண்மையிலேயே உறுதிப்படுத்துவதற்கு தீர்மானகர மான நிலைமை தேவைப்படுகிறது. அதாவது முன்னணிப் படை வெளியிட்ட கட்டளைகளும் ஆணைகளும் முழக் கங்களும் சரியானவை என மக்கள்திரள்கள் தமது சொந்த அனுபவத்தின் மூலமாக தாமே ஏற்க வேண்டும்.

இதை எதிர்ப்போரின் நிலை என்னவெனில் பரந்த மக்கள் திரள்களுக்கு தலைமை தாங்கு வதற்கு இந்த சாதாரண லெனினிய விதியை ஏற்றுக்கொள்வதில்லை; கட்சி மட்டுமே, முன்னேறிய குழு மட்டுமே பரந்துபட்ட மக்கள் திரள்களின் ஆதரவு இல்லாமல் புரட்சியை படைக்க முடியாது என்பதை புரிந்து கொள்வதில்லை; இறுதிப் பகுப்பாய் வில் பரந்துபட்ட மக்கள் திரள்களே புரட்சியை படைக்கின் றனர்.”

ஆதாரம் : சர்வதேசச் சூழலும் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றிய பாதுகாப்பும், ஸ்டாலின், ஆக, 1, 1927, ஸ்டாலின் தேர்வு நூல்கள், 10ஆம் தொகுதி, பக். 29-30 (ஆங்கிலப்பிரதி)]

“----தலைமை என்றால் கட்சிக் கொள்கையின் சரியான தன்மை குறித்து மக்கள் திரள்களை ஏற்க வைக்கும் திறமையே ஆகும்; மக்கள்திரள்களை கட்சியின் நிலைப்பாடுகளுக்கு கொண்டுவந்து கட்சிக் கொள்கையின் சரியான தன்மையை அவர்களின் சொந்த அனுபவத்தின் மூலமாக அவர்கள் உணர்வதற்கு உதவும் வகையில் முழக்கங்களை முன்வைத்து மேற் கொள்வதற் கான திறமையே ஆகும்; கட்சியின் பிரக்ஞை என்ற மட்டத்திற்கு உயர்த்துவதற்கான திறமையே ஆகும். இவ்வாறு மக்கள்திரள்களின் ஆதரவையும் தீர்மானகரமான போராட்டத்திற்கான அவர்களின் தயார்நிலையையும் உறுதிப்படுத்துவதே ஆகும்.”

ஆதாரம்: லெனினிய சிக்கல்கள் சம்பந்த மாக, ஜன. 25, 1926, ஸ்டாலின் தேர்வு நூல்கள், தொகுதி 8, பக். 54-55 (ஆங்கிலப் பிரதி)]

“தலைமை என்பது காலை முதல் மாலை வரை கூக்குரலிடும் முழக்கம் அல்ல; பணிவை கோரும் திமிர்பிடித்த கோரிக்கையும் அல்ல. சரியாகச் சொல்வதெனில், கட்சிக்கு வெளியே உள்ள மக்கள் நமது முன்மொழிதல்களை விருப்பத்தோடு ஏற்கின்ற வகையில் இணங்கவைத்து கற்பிப்பதற்கு கட்சியின் சரியான கொள்கைகளை பயன்படுத்துவதிலும் நமது சொந்த பணியின் வாயிலாக நாம் காட்டுகின்ற உதாரணத்தை பயன்படுத்துவதிலுமே அடங்கி இருக்கிறது.”

(ஆதாரம்: ஜப்பான் எதிர்ப்பு தளப் பகுதிகளில் அரசியல் அதிகாரச் சிக்கல் பற்றி, மாவோ, மார்ச், 6, 1940, தேர்வு நூல்கள், தொகுதி 2, பக். 4157 (ஆங்கிலப் பிரதி)].

“நமது குறிக்கோள் அதன் வெற்றிக்கு பலரையும் சிலர் வரம்புக்குட்பட்ட பாத்திரம் மட்டும் ஆற்றுவதையுமே சார்ந்து இருக்கிறது. சிலர், அதாவது தலைவர்களும் ஊழியர்களும் ஒரு பாத்திரத்தை ஆற்றுகிறார்கள். அதை அங்கீகரித்திட வேண்டும். அதே சமயத்தில் அது பெரிய முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமும் அல்ல. மக்கள் திரள்களே பெரிய முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை ஆற்றுகின்றனர். ஊழியர்களுக்கும் மக்கள் திரள்களுக்கும் இடையிலான சரியான உறவு என்பது ஊழியர்கள் தலைமை யை அளித்து மக்கள் திரள்களே மெய்யான பணியை செய்வதாகும். ஊழியர்களின் பாத்திரம் மிகைப்படுத்தப்படக் கூடாது.”

(மாவோ, நிறைவு உரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டின் உரைகள், மார்ச் 31, 1955, தேர்வு நூல்கள், தொகுதி 5, பக். 166, ஆங்கிலப் பிரதி).

“---மக்களை அணிதிரட்டாமல் அவர்களுடைய உடனடி கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனி நபர்களை கொலை செய்வது போன்ற நடவடிக்கைகள், வறட்டுத்தனமான அரசியல் ஆகியவைகளில் மட்டுமே ஈடுபடுவது - கம்யூனிஸ்டுகளை மக்களிடமிருந்து தனிமைப் படுத்துவதில் கொண்டுபோய்விடும். தனிநபர்களைக் கொல்வது, மக்களைத் தூண்டி எழுப்புவதற்கான ஒரே வழிமுறையாகும் என்ற கருத்தோட்டம் மக்களிடையே யான வேலைக்கு முற்றிலும் விரோதமானதாகும். எவ்வளவு சாதாரணமானவைகளாக இருந்தாலும் உடனடியான தேவைகளைக் கவனத்தில் கொண்டே தீரவேண்டும். மக்களை உணர்வுப்பூர்வமாக தட்டியெழுப்ப அவற்றை இறுதியான நோக்கங்களுடன் இணைக்கவேண்டும். மக்களை அணிதிரட்டாமல் தனிநபர்களை கொல்லும் நடவடிக்கையானது எந்தத் தயாரிப்பும் இல்லாத மக்கள் மீது அரசு இயந்திரத்தின் தாக்குதலைக் கொண்டுவரும். எதிர்த்தாக்குதலுக்கு தயாராயில்லாத நிலையில் மக்கள் இருப்பர். எனவே, இது மக்களுக்கு ஊறு விளைவிக்கிறது.”

(ஆதாரம்: கதீப் அன்சாரி, மக்களிடையே நமது பணிகள், பக். 17, கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை, ஆக, 2001)

இந்த நூலாசிரியர் கோபட் காண்டி என்ற இயற்பெயரை உடையவர் ஆவார். இவர் மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப் பினர் ஆவார். சென்ற செப்டம்பரில் டில்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இப்பொழுது இப்போராட்டத்தில் மாவோயிஸ்ட் கட்சியிடம் தன்னெழுச்சி என்ற தவறு எவ்வாறு செயற்பட்டது என்பதைப் பார்ப் போம்.

லால்கரில் இப்படியொரு போராட்டம் தொடங்கும் என மாவோயிஸ்ட் கட்சிக்கே கணிப்பு இல்லை. லால்கர் இயக்கமானது அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான தன்னெழுச்சியான வெடிப்பே என அக்கட்சியே ஒத்துக்கொள்கிறது (ஆதாரம்: அஜய் கட்டுரை, ஞநடியீடந’ள ஆயசஉh, அக். 2009)புத்ததேவுக்கு எதிராகவும் சி.பொ. மண்டலத்திற்கு எதிராகவும் வைக்கப்பட்ட கண்ணி வெடியில் ஏற்பட்ட அரசு அடக்குமுறை யின் விளைவாக, லால்கர் மக்கள் சிபிஎம் அரசாங்கத்தின் மீது காலம் காலமாக இருந்து வந்த கோபத்தினாலும் போராட்ட பாரம் பரியத்தினாலும் மக்கள்திரள் வழியில் போர்க் குணமிக்க போராட்ட வழியில் வெற்றியை சாதித்து 6 மாதங்கள் வீறுநடை போட்டனர்.

இதை அடுத்தகட்டமாக வளர்த்தெடுப்பது பற்றி அறவே எந்தப் பார்வையும் இல்லாத மாவோயிஸ்ட் கட்சி, 15ஆண்டுகளாக அந்தப் பகுதியில் பணியாற்றிய நிலையில் ஆயுதப் போராட்டத்தினை எப்படியாவது ஆரம்பித்துவிட முடியாதா என்ற எண்ணத்தில் அகநிலை காரணியின் வளர்ச்சி மட்டத்தை புறம்தள்ளி சி.பி.எம்.மின் ஆதிக்கச் சக்திகளை அழித்தொழிக்கத் தொடங்கியது. மக்களில் ஒரு சிறிய பிரிவினர்ஆதிக்கச் சக்திகளின் வீடுகளை அடித்து நொறுக்கினர். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. கட்சி அதை அரசியல்ரீதியான அடுத்த கட்டத்திற்கு வளர்த்திருக்க வேண்டும்.

மாறாக ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது (அ) அடுத்த கட்டத்தை அடைந்து விட்டது என எண்ணத் தொடங்கிவிட்டது. விடுதலை பிரதேசம் அமையத் தொடங்கி விட்டது எனவும் ஊடகங்களிடம் பேசவும் செய்தது. (ஆயுதக்குழு அமைத்த அன்றே ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது என்றும் கூட அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். உண்மையில் முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சியும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையமும் இந்நாளைய மாவோயிஸ்ட் கட்சியும் அவ்வா றே கருதுகின்றன)

“----அகநிலை அம்சங்கள் எதுவாக இருந்தபோதிலும் அது புரட்சியின் வெற்றிப்பாதை யில் நிற்கமுடியாது. இந்தக் கண்ணோட்டத்தின்படி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஆயுதப் போராட்டத்தை நாம் தொடங்க மட்டுமே வேண்டும்; அது தானாகவே தன்னுடைய இயக்க விசையைத் திரட்டிக் கொள்ளும் --- இந்தக் கணிப்புதான் மக்களை திரட்டுவதற்கும் ஸ்தாபனப் படுத்துவதற்கும் கட்சி ஸ்தாபனத்தை உறுதிப்படுத்துவதற்கும் போதுமான கவனத்தை கொடுக்காமலேயே ஆயுதம் தாங்கிய நடவடிக்கையானது எல்லாவற்றையும் சரியாக்கிவிடும் என்ற சிந்தனைக்கு இட்டுச் சென்றது----”

(மேலே பார்த்த சுயவிமர்சன அறிக்கை, பக்.21)

இந்தப் பத்தியில் சொல்லப்பட்டுள்ள வைதான் நடந்தன.

கைவிடப்பட்ட அழித்தொழிப்பு வழி மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டமை

இந்தச் சிக்கலில் சி.பி.எம். மின் ஆதிக்கச் சக்திகளையும் கருங்காலிகளையும் எதிர்த்து மக்கள் திரள் வழியில் மக்களை அணிதிரட்டுவதற்கு மாறாக 1970களில் கடை பிடிக்கப்பட்டு தவறென பின்னர் மீளாய்வு செய்யப்பட்ட அழித்தொழிப்பு வழி மீண்டும் கடைப் பிடிக்கப்பட்டது.

இந்த ஆதிக்கச் சக்திகளும் கருங்காலிகளும் இறப்பது பற்றி மக்கள் நலனை நேசிக்கும் யாருக்கும் வருத்தம் இருக்கப் போவதில்லை. ஆனால் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அவர்களை ஈடுபடுத்தியே மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களை ஒடுக்கும் (அ) சுரண்டும் ஆதிக்கச் சக்திகள், மக்களை காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் ஆகியோ ருக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடுவதற்கு பதிலாக மாவோயிஸ்ட் கட்சியின் ஆயுதக் குழுக்களே அவர்களை அழித்தொழித்து விடுகின்றன.

“----வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது--- போராட்ட வடிவங்களில் ஒன்றாக மேற்கொள்வது தவறல்ல. ஆனால் இந்த போராட்ட வடிவத்தை வர்க்கப் போராட்டத்தின் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் அரசியல் போர்த் தந்திரப் பாதையின் நிலைக்கு விஸ்தரித்ததில்தான் நம்முடைய கோளாறு அடங்கி இருக்கிறது.---”

“----அழித்தொழிப்பு பாதையில் பார்க்கப்பட்ட முறையானது வெகுஜனப் போராட்டத்தை கட்டவிழ்த்து விடவும் புரட்சிகர வெகுஜன ஸ்தாபனங்களை கட்டவும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இறுதி விளைவு அதற்கு நேர்மாறாக இருந்தது.---- மக்கள் படையின் அடிப்படையான மக்களின் ஆயுதந்தாங்கிய ஸ்தாபனம் இந்தப் பாதையை பின்பற்றுதலின் மூலம் கட்டப்பட முடியாது. மிக முன்னேறிய போர்க்குணமிக்க வர்களைக் கொண்ட சில குழுக்கள் மட்டுமே கட்டப்பட முடியும். இப்படிப்பட்ட ஒரு நிலையில் மக்களின் செயலற்ற தன்மையை துடைத்தெறிய இந்தக் குழுக்கள் அதிக நடவடிக்கைகள் மூலம் முயற்சி செய்தால் அவை “வீரர்களே வரலாற்றை உருவாக்க முடியும்” என்ற தத்துவத்தால்தான் வழிகாட்டப்பட முடியும்----”

“எனவே அழித்தொழிப்பு பாதையை மறுப்பதற்கு நாம் மார்க்சியத்துக்கு அந்நியமான, தவறான தத்துவத்தையும் அதனுடைய விளைவான அரசியல், ஸ்தாபன வெளிப்பாடுகளையும் மறுக்க வேண்டும். இந்தப் பிரச்னையை வேறுவிதமாக முன்வைப் பது அதனை முழுமையாக உணரு வதற்கு நமக்கு உதவாது. எதிரி அழித் தொழிக்கப்பட்ட வேண்டுமா வேண்டாமா என்பதோ அல்லது பிற போராட்ட வடிவங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமா வேண்டாமா என்பதல்ல பிரச்னை. மாறாக பிரச்னை என்ன வென்றால் கட்சியானது வெகுஜனப் பாதையை மேற்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதே ஆகும்---”

“உண்மையான தவறு, அழித்தொழிப்பே ஒரே வர்க்கப் போராட்ட வடிவமென்று ஏற்றுக் கொள்கின்ற, பிற போராட்ட வடிவங்களை பொருளாதார வாதம் என்றும் வர்க்கப் போ ராட்டத்துக்கு தடைகள் என்றும் கூறி மறுக்கின்ற ஒரு பாதையாக அழித்தொழிப்பை கருதுவதில்தான் அடங்கியிருக்கிறது. ஒரு ரகசிய சதி முறையில் ரகசிய குழுக்களை உருவாக்கி வெறுக்கப்படுகின்ற வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பதை தீவிரப்படுத்துவதன் மூலம் மக்களுடைய முன்முயற்சி கட்டவிழ்த்து விடப்பட முடியும் என்று கொள்ளப்பட்டது. அழித்தொழிப்பை மேற் கொள்வதற்கு முன்னால் தீவிரமான அரசியல் பிரச்சாரத்துக்கு அதிக அழுத்தம் கொடுப்பது தவறானது என்று சுட்டிக் காட்டப்பட்டது. வேறு வார்த்தையில் சொல்லப் போனால் அழித்தொழிப்புகள் தாங்களே பிரச்சாரத்தின் பாத்திரத்தையும்கூட நிறைவேற்றும் என்று கொள்ளப் பட்டது. இந்த வகையான குழுக்கள், முழுமையான ரகசிய செயல்முறையை இன்னும் தேர்ச்சி அடைந்து இருக்காத பிரதேச கட்சி கிளைகளிடம் இருந்தும்கூட ரகசியமாக வைக்கப்பட வேண்டி இருக்கும். இது கட்சியின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை ஒவ்வொரு போராட்டத்திலும் புறக்கணித்திருக்கிறது.”

“--- உண்மையான தவறானது அந்த வடிவத்தை குறிப்பிட்ட சூழ்நிலையை கண்டு கொள்ளாமல் அதாவது அந்த குறிப்பிட்ட இடத்தில் வர்க்கப் போராட்டத்தின்போது அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உண்மையில் தோன்றியதா என்ற உண்மையை கண்டுகொள் ளாமல் - அந்த வடிவத்தை நாம் மேற்கொண்டதில்தான் அடங்கியுள்ளது..---”

“----இந்தப் போராட்ட வடிவத்தை நாடு முழுமைக்கும் ஒரே போராட்ட வடிவமாகவும் செயல்படுத்தியதில்தான் தவறு அடங்கி இருக்கிறது. சுருக்கமாகக் கூறினால் விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு போராட்ட வடிவமாகவும் எல்லாவற்றிற்குமான ஒரு சர்வரோக நிவாரணியாகவும் வர்க்க எதிரியை அழித்தொழிப்பதை முன்வைத்ததிலும் பிற போராட்ட வடிவங்களையும் ஸ்தாபன வடிவங்களையும் மறுத்ததிலும் தவறு அடங்கி இருக்கிறது.”

“-----பிற எந்த போராட்ட வடிவத்தையும் போல அழித்தொழிப்பு போராட்ட வடிவமும் தன்னுடைய சொந்த வரையறையை கொண்டிருக்கிறது. எந்த ஒரு போராட்ட வடிவமும் சர்வவியாபக மதிப்புடையதாக மாறமுடியாது.---- எதிரியுடைய சக்திக்கும் மக்களின் சக்திக்கும் இடையில் உள்ள சக்தியின் சமநிலை படிப்படியாக மக்களுக்கு சாதகமாக மாறமாற கெரில்லா போர்முறை யானது நிலையான போர்முறை (இந்தச் சொல்லுக்கு ஆங்கிலப் பிரதியில் (Mobile warfare என்று இருக்கிறது) வடிவத்தை எடுக்கும்; அப்போது கெரில்லாப் போர்முறை ஒரு துணை வடிவமாக மாறும். ஒரு யுத்தத்தில் முன்னேற்றகரமான மாற்றங்களுக்கு ஏற்ப போராட்ட வடிவமும் மாறும்; உயர்ந்த வடிவங்களாக மாறுதலை அடையும்.

வர்க்க எதிரியின் அழித்தொழிப்பும் இதற்கு விதி விலக்கல்ல. மக்கள் படையின் தோற்றத்தின்போதும் அரசின் படைக்கும் மக்கள் படைக்கும் இடையில் உள்ள யுத்தம் ஒரு முக்கிய வடிவமாக முன்னணியில் வளரும் போதும் வர்க்க எதிரி அழித்தொழிப்பானது ஒரு துணை வடிவமாக மாறலாம். மக்கள் யுத்தம் தீவிரம் அடைய அந்த போராட்ட வடிவம் தன்னை மக்கள்யுத்தத்தில் மூழ்கடித்துக் கொண்டு மறைந்துகூட போகலாம். ---- புரட்சிகர தலைமையானது போராட் டத்தின் வளர்ச்சியின்போது அந்தந்த போராட்ட வடிவங் களின் எல்லைகளை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அவற்றை புரட்சியின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்த திறமையை வளர்க்க வேண்டும். இது வர்க்க எதிரி அழித்தொழிப்புக்கும்கூட மிகச் சரியாகப் பொருந்தும்.”

(ஆதாரம்: மேலே பார்த்த சுய விமர்சன அறிக்கை, பக். 26-31)

30ஆண்டுகளுக்கு முன்பேயே அழித்தொழிப்புவழி பற்றி இவ்வாறு மீளாய்வு செய்யப் பட்டிருந்தாலும் மாவோ யிஸ்ட் கட்சி இதை பிரயோகிக்கவே இல்லை. மாறாக, மக்கள்திரளின் மக்கள்திரள் வழிமூலம் சாதிக்கப்பட்ட வெற்றிகளைக்கூட பின்னுக்கு இழுக்கும் வகையில் கட்சி யின் ஆயுதக் குழுவினர் அழித்தொழிப்பு வழியையே பின்பற்றத் தொடங்கி அதில் தெரிந்த தோற்ற வெற்றியில் ஏமாந்து விடுதலைப் பிரதேசம் என அறிவிக்கப்போய் இருந்ததையும் இழந்ததுதான் பலன்.

அழித்தொழிப்பு வழியை பின்பற்றி கடந்த 7 மாதங்களில் மட்டும் சிபிஎம்மைச் சேர்ந்த 52 பேர் அழித்தொழிக்கப் பட்டுள்ளனர் (ஆதாரம் : கிஷன்ஜி நேர்காணல், டெஹல்கா, 21 நவ. 2009)

லால்கரில் மக்கள்யுத்தம் நடப்ப தாகவும் இன்னும் பிறவாகவும் மிகைப் படுத்திச் சொல்லும் மாவோயிஸ்ட் கட்சியா னது மேலே பார்த்த வாசகங் களின்படி அழித்தொழிப்புகள் நின்று வேறு போர் வடிவங்கள் தோன்றி யிருக்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. மாறாக, அழித்தொழிப்புகளே தொடர் கதையாகின்றன.

அடுத்து வாய்ச்சவடால்கள் எவ்வாறு மாவோயிஸ்ட் கட்சியிடம் விளை யாடுகின்றன என்பதைப் பார்ப் போம்.

6 மாதங்களுக்கும் மேலாக அரசு நிர்வாகத்தை முடக்கி மக்கள்திரள் வழியின் செல்வாக்கில் இருந்த லால்கர் பகுதியில் அதை மேலும் வலுப்படுத்துவதற்கு பதிலாக கைவிடப்பட்ட அழித்தொழிப்பு வழியினை மீண்டும் மேற்கொண்டு மக்கள்திரள் செல்வாக்கில் இருந்த அப்பகுதியை மாவோயிஸ்ட் கட்சியின் ஆயுதக் குழுக்களின் செல்வாக்கின் கீழ் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. அதன் அங்க மாக சிபிஎம் ஆதிக்க சக்திகளும் கருங்காலிகளும் அழித்தொழிக் கப்பட்டபோது மிகச் சிறிய அளவில் மக்கள் திரளில் ஒரு பிரிவினர் பங்கெடுத்ததாலும் உள்ளூர் சிபிஎம்காரர்கள் தங்கள் கட்சியிலிருந்து விலகி தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பகிரங்கமாக அம்முடிவை அறிவித்ததாலும் விடுதலைப் பகுதி என ஆர்ப்பாட்டமாக அறிவித்தது மாவோயிஸ்ட் கட்சி.

அடுத்தடுத்து இதையே அறிவித்ததால் மத்திய - மாநில அரசாங்கத்தின் கூட்டுப் படைகள் அப்பகுதியில் இறங்கி அடக்கு முறையில் ஈடுபட்டதால் இருந்த செல்வாக்கை இழந்ததுதான் மிச்சம்.

ஆனால் அதுபோன்ற வாய்ச்சவடால்களை மட்டும் நிறுத்தவில்லை மாவோயிஸ்ட் கட்சி. அதை வரிசையாக பார்ப்போம்.

* 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பேயே கோல்கத்தா நகரத்தில் ஆயுதங்களுடன் நடமாடுவோம்.

* லால்கர் இயக்கம் இரண்டாவது நக்சல்பாரி ஆகும்.

* இந்த இயக்கத்தில் 1100 கிராமங்கள் எங்களுடன் இருக்கின்றன.

* முந்தைய இயக்கத்தில் (நக்சல்பாரி) நடைபெற்றதைப் போலவே அரசின் மிகப் பலவீனமான புள்ளியில் தாக்கினோம். அது தானாவே எங்களின் கோட்டையாக மாறுகிறது. -கிஷன்ஜி

(ஆதாரம் : கிஷன்ஜி நேர்காணல், டைம்ஸ் ஆப் இந்தியா, ஜுலை, 2009, கோல்கத்தா பதிப்பு)

நாங்கள் 5000 கிரமாங்களை கட்டுப் படுத்துகிறோம். -கிஷன்ஜி.

(ஆதாரம் கிஷன்ஜி நேர்காணல், ஆசியன் ஏஜ், ஆங்கில நாளிதழ், (26-9-09), புதுடெல்லி பதிப்பு)

மேலே உள்ள கூற்றுக்களின் அபத்தங் களை யாவரும் அறிவர். ஜுலை 1 அன்று 1100 கிராமங்களில் செல்வாக்கு இருக்கும் என்று சொல்லும் நிலையில் ஏன் அம்மக்களை முன்னிறுத்தி அடக்குமுறையை எதிர்கொள்ளவில்லை?

அடுத்த இரண்டு மாதத்திற்குள்ளாகவே 5000 கிராமங்களை கட்டுப்படுத்துவதாக கூறுவது எவ்வாறு சாத்தியம்?

அரசு அடக்குமுறைக்கு எதிரான உணர்வையும் சிபிஎம் அரசாங்கத்திற்கு எதிரான கோபத்தையும் செல்வாக்கு என்பதாகவும் கட்டுப்படுத்துதல் என்பதாகவும் விடுதலைப் பிரதேசம் என்பதாகவும் அர்த்தம் கொள்ளலாமா?

இதற்கும் மேலாக இந்த இயக்கத்தை இரண்டாவது நக்சல்பாரி என்று கிஷன்ஜி கூறுகிறார்.

இவ்வாறு கூறுவது சாரு மஜூம்தாரை கொச்சைப் படுத்துவதாகும்.

நக்சல்பாரி எழுச்சி புதிய ஒரு அரசியல் வழியோடு ஏற்பட்டது.

லால்கர் இயக்கத்தினோடு எந்தவொரு புதிய அரசியல் வழியும் வரவில்லை.

மேலும் கிஷன்ஜியின் இந்த கூற்றுகள் எதுவும் மாவோயிஸ்ட் கட்சியின் வெளியீடுகள் எவற்றிலும் வரவில்லை. அடுத்ததாக, அக் -17 அன்று வெளியான மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கணபதியின் நேர்காண லிலும் இவ்வாறு குறிப்பிடப் படவில்லை.

இறுதியாக மாவோயிஸ்ட் கட்சியின் அத்தனை தவறுகளுக்கும் காரணம் அதன் அரசியல் வழியிலேயே அடங்கி இருக்கிறது. ஆயுத சீர்திருத்தவாதம்தான் அந்த அரசியல்வழி ஆகும்.

லால்கர் மக்கள் PCAPAவை அமைத்து போராடத் தொடங்கிய பின்னர் அப்பகுதியின் அடிப்படை வசதிகளை தமக்குத்தாமே நிறைவேற்றிக் கொண் டனர். இது கருணாநிதியின் நமக்கு நாமே திட்டம் போன்றதே.

அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அரசாங்கத்தை நோக்கி மக்களை போராடச் செய்வதற்கு பதிலாக தமக்குத்தாமே நிறைவேற்றிக் கொள்ளுமாறு வழிகாட்டுகிறது மாவோயிஸ்ட் கட்சி. ஜார்கண்டிலும் சட்டீஸ்கரிலும் முன்பு ஆந்திரப் பிரதேசத்திலும் இவ்வாறே வழிகாட்டப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பகுதிகளை தற்போது தளப்பகுதி (அ) விடுதலைப்பகுதி என மாவோயிஸ்ட் கட்சி குறிப்பிட்டு விடுகிறது. அதற்கு முந்தைய இரண்டு கட்டங்களான சிவப்பு எதிர்ப்பு பகுதி (Red Resistance Area), கெரில்லாதளம் என்பதாகவும்கூட குறிப்பிடப் படுவ தில்லை.

ஆனால் அக்கட்சியின் ஆவணத்திலோ தளப்பகுதி என்பதற்கு வேறு மாதிரியான வரையறைகளே இருக்கின்றன.

எனினும் அக்கட்சியானது தனது புரிதலில் எவ்வாறு இருக்கிறதோ அதைத்தானே நடைமுறைப்படுத்தும்.

கட்சியிடம் பொருளாதாரவாதப் புரிதல்தான் இருக்கி றது எனவும் பாசனவசதித் திட்டம், அணைகட்டுதல், சாலை அமைத்தல், குடிநீர்வசதி திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அதிக அழுத்தம் இதில் வெளிப் படுகிறது எனவும் அரசியல் அதிகாரத்திற்காக மக்களை திரட்டுதல் என்ற பிரக்ஞை கட்சியிடம் இல்லை; எனவே மக்களிடம் அதற்காக திரள வேண்டும் என்ற பிரக்ஞை இல்லை எனவும் முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சியின் மையக் குழு உறுப்பினர் ஷ்யாம் போலி மோதலில் கொல்லப்படுவதற்கு முந்தைய மாதம் (நவ. 1999) எழுதிவிட்டுச் சென்றார்.

கட்சி கொடுத்த பணியின் பேரில் கட்சியின் செல்வாக்கு பலமாக உள்ள இடங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியிடம் பொருளாதாரவாதப் போக்கு உள்ளதென ஒரு ஆய்வறிக்கையை அளித்தார்.

அவரது இக்கட்டுரை முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சியின் மையக் குழு நடத்திய உட்கட்சிப் பத்திரி கையான மக்கள்யுத்தம் என்ற பத்திரிகையில் அவர் இறந்தபின் வெளியானது.

இந்த மீளாய்வு கணக்கில் எடுக்கப் படாததால் ஆயுத சீர்திருத்தவாதம் என்ற பரிமாணத்தை எடுத்துள்ளது.

இதுவரை நாம் பார்த்த லால்கர் போராட்டத்தில் மாவோயிஸ்ட் கட்சியிடமிருந்து எதிர்மறை அம்சங்களை தொகுத்து உரைத்தால்....

* மக்கள்திரள்வழியை புறக்கணித்தமை.

* மக்களிடம் கண்ணியமில்லாமல் ஜனநாயகமற்று நடந்து அவர் களின் உணர்வுகளை புறந்தள்ளி யமை.

* ஐக்கிய முன்னணி அணுகுமுறை இல்லாமை.

* உச்சகட்ட தன்னெழுச்சி.

* கைவிடப்பட்ட அழித்தொழிப்பு வழியை கடைப் பிடித்தமை.

*மக்களைவிட ஆயுதங்களையும் ஆயுதக் குழுக்களையும் நம்பியமை.

* ஆயுத சீர்திருத்தவாதம்.

ஆயுத சீர்திருத்தவாதம் என்ற அரசியல் வழியிலிருந்து மாவோயிஸ்ட் கட்சி மீண்டால்தான் இதுபோன்ற தவறுகளை இழைக்காது.

இதற்கு அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு வெளியிடும் இதழான “போராளி” (எண். 24, நவ. 2009) இதழில் வெளிவந்திருக்கும் மாவோ எழுதிய “நமது படிப்பைச் சீர்செய்வோம்” என்ற கட்டு ரையில் சொல்லப் பட்டி ருக்கும் கருத்துகளையே பிரயோகிக்க வேண்டும்.

முந்நாளைய மக்கள் யுத்தக் கட்சி 1980ல் வெளியிட்ட சுய-விமர்சன மீளாய்வு அறிக்கையும் ஷ்யாம் எழுதிய கட்சியில் பொருளாதாரவாதம் பற்றிய ஆய்வு அறிக்கையும் கவனத்தில் கொள்ளப்பட்டால்தான் ஆயுத சீர்திருத்தவாதத்தில் இருந்து விடுதலை அடையமுடியும். இந்த இரண்டு அறிக்கைகளும் வழிகுறித்த சிக்கலை அடிப்படையாகத் தீர்க்கவில்லை. எனினும் நடைபெற்ற தவறுகளை சரிசெய்வதற்கு கவனத்தில் கொண்டே ஆக வேண்டும்.

“---- நமது கட்சியைப் போன்றதொரு பெரிய அரசியல் கட்சிக்கு நாம் சேகரித்துள்ள விசயங்கள் சிறுதுண்டுகளே. அரசியல், இராணுவம், பொருளாதாரம், பண்பாடு ஆகிய ஒவ்வொரு அம்சத்திலும் நமது ஆராய்ச்சி ஒழுங்கற்ற தாகவே இருக்கிறது.... புறநிலை யதார்த்தத்தை பரிசீலித்து படிக்கும் நிலையில் இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம். ---”

“--- மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரிடமிருந்து மேற்கோளை மனம் போன போக்கில் ஒருதலைப் பட்சமாக எடுத்துக் காட்டுவதற்கு மட்டும்தான் அவர்களால் முடியும். ----- மார்க்சிய - லெனினியத்தை இப்படி அணுகுவது பெரும் தீமையை விளைவிக்கிறது. குறிப்பாக, மேல்தட்டு, இடைத்தட்டு ஊழியர்களிடையே இப்படிப்பட்ட அணுகல்முறை ஊறுவிளைவிப்பதாக உள்ளது.”

“நாம் பல தவறான வழிகளில் சுற்றி வந்திருக்கிறோம். ஆனால் தவறுகள் என்பது அனேகமாக சரியானது எது என்பதன் முன்னறிவிப்பாளனாகவே இருக்கிறது.---”

-மாவோ (“நமது படிப்பைச் சீர்செய்வோம்”)

(ஆதாரம்: போராளி இதழ் எண். 24, நவ. 2009, பக் - 35,39]

-          பாஸ்கர்

Pin It