அன்னா அசாரேவுக்குப் பின்னால் இருந்து கொண்டு, ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் முக மூடியைக் கர்நாடகம் கிழித்துப் போட்டுவிட்டது.

2008ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க. 110 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்தது. முதல்வரானார் பி.எஸ். எடியூரப்பா. தமிழகம், கேரளம், ஆந்திரத்தில் துடைத்து எறியப்பட்ட பா.ஜ.க. தென்னிந்தியாவில் பிடித்த ஒரே ஆட்சி கர்நாடக ஆட்சி.

கர்நாடக பா.ஜ.க.வில் முடிசூடா மன்னனைப் போல இருந்தவர் எடியூரப்பா. காரணம் அவருக்கு ஆதரவாக 60 சட்டமன்ற உறுப்பினர்களும், 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்கப்போவதாகவும், ஊழல் அற்ற ஆட்சியை அளிக்கப் போவதாகவும் ஊர் பூராவும் சொல்லிக் கொண்டிருந்த பா.ஜ.க.வின் முகத்திரை யைக் கிழித்துப் போட்டார் எடியூரப்பா.

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, கனிம நிறுவனங்களுக்குச் சட்டவிரோதமாகச் சுரங்கம் நடத்த அனுமதி அளித்ததாகவும், அதற்குப் பிரதிபலனாக எடியூரப்பாவின் மகன்கள் நடத்தும் அறக்கட்டளை அந்த நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சி.பி.ஐ. விசாரணையில் நீதிமன்றப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு இருக்கிறார் எடியூரப்பா. இத்துடன் நிலம் தொடர்பான ஊழல்வேறு.

இதுதான் ஊழலை ஒழித்து, ஊழல் அற்ற ஆட்சியை வழங்கும் பா.ஜ.க.வின் முகமூடி.

எடியூரப்பாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவருக்கு 60 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு அணியினராக இருக்கிறார்கள் என்பதால், கட்சியைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அவர் முதல்வராகத் தொடர முடியாத நிலை நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்ட பொழுது, அடுத்த முதல்வர் யார் என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைமையால் முடிவு செய்ய முடியவில்லை. எடியூரப்பாவே விரல் நீட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

எடியூரப்பா தன் ஆதரவாளர் சதானந்த கவுடாவை முதல்வராக தேர்வு செய்யப் பா.ஜ.க.வைப் பணிய வைத்தார். முதல்வரானார் சதானந்த கவுடா. முதல்வரான சதானந்தா தன் குரு எடியூரப்பாவுக்கும், அவர் மீதுள்ள வழக்குகளுக்கும் சாதகமாகச் செயல்படாததால், சதானந்த கவுடாவை நீக்க வேண்டும், தனக்கே முதல்வர் பதவி தரவேண்டும் என்று கூச்சமின்றி அடம்பிடித்தார்.

முடிந்தவரை எடியூரப்பாவின் “கெடு” வைத்து மிரட்டும் போக்கைச் சமாளித்து வந்த பா.ஜ.க. மேலிடம், நிலைதடுமாறும் அளவுக்குப் போய்விட்டது.

அதே சமயம் எடியூரப்பாவின் பதவி மோகம், ஊழல் திறமை, மக்களிடம் சாயம் வெளுக்கத் தொடங்கியது. உடனே தன் அடுத்த கைத்தடியான ஜெகதீஷ் ­ட்டரை முதல்வராக்க வேண்டும், சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என்று கொடி பிடிக்கத் தொடங்கினார்.

பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ­ட்டர், கவுன்சிலர் பதவியில் தொடங்கி, முதல்வர் வரை, கடந்த முறை கூடக் கை நழுவிப் போன, முதல்வர் பதவியை அடையும் அளவுக்கு வளர்ந்து வந்தவர். புத்திசாலி. அதனால் அடக்கி வாசிக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, கர்நாடக எடியூரப்பா பிரச்சனையில் தேசியத் தலைமையில் இரண்டு அணிகள் செயல்படுகின்றன. ஓர் அணி, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியின் கீழும், மற்றொரு அணி அத்வானியின் கீழும், அடக்கத்தோடு கோஷ்டிப் பூசலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நிதின்கட்காரி பதவி காலம் முடிந்தவுடன் வேறு ஒருவரைத் தலைவராக்க வேண்டும் என்ற முடிவில் அத்வானி இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலையீட்டால் மீண்டும் தலைவரான நிதின்கட்காரி மீது அதிருப்தியை வெளியிட்டார் அத்வானி.

எடியூரப்பா எத்தனை தடவை பா.ஜ.க.வின் தேசியத் தலைமையை மிரட்டினாலும், சமாதானம்... சமாதானம் என்று பூசி மெழுகிக் கொண்டு இருப்பவர் நிதின்கட்காரி.

எப்பொழுது பார்த்தாலும் மிரட்டிக் கொண்டே இருக்கிறார் எடியூரப்பா. இனியும் சமாதானம் தேவையில்லை என்கிறார் அத்வானி.

அவ்வளவுதான் சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என்று 9 அமைச்சர்கள் பதவி விலகினார்கள். கட்சித் தலைமை அதை ஏற்கவில்லை. அதனால் என்ன? சதானந்தாவைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிப்போம் என்று கசிய விட்டார்கள் செய்தியை.

வேறு வழியில்லை. டில்லியில் நிதின்கட்காரி வீட்டில் கூட்டப்பட்ட உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முதல்வரை மாற்றலாம் என்று நிதின்கட்காரியும், இனியும் பொறுக்க முடியாது, கர்நாடக அரசைக் கலைத்து விட்டுத் தேர்தலை நடத்தலாம் என்று அத்வானியும் கூறினார்கள்.

அதுமட்டுமல்ல, நிதின்கட்காரி, எடியூரப்பாவின் ஆதரவாளரும் அடுத்த முதல்வராக வரப்போகின்ற வருமான ஜெகதீஷ் ஷ‌ட்டரை அத்வானி சந்திக்க மறுத்துவிட்டார். அதே சமயம், சதானந்தாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதுதான் அக்கட்சியின் கோஷ்டி மோதலின் அப்பட்டமான வெளிச்சம்.

ஆனாலும் அத்வானியைச் சமாதானப்படுத்திச் சதானந்தகவுடாவிடம் பதவி விலகல் கடிதத்தை வாங்கிக் கொண்ட கட்காரி, ஜெகதீஷ் ஷ‌ட்டர் அடுத்த முதல்வர், முறைப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார் என செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.

சதானந்தாவிடம், பதவி விலகல் கடிதத்தை வாங்கிக் கொண்டு, செய்தியாளர்களிடம் பேசும் போது, நிதின்கட்காரி, “கடந்த 11 மாதங்களாக சதானந்த கவுடா சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்” என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் சிறந்த ஆட்சியளாரான சதானந்த கவுடாவை நீக்கிவிட்டு, ஊழல் வாதியான எடியூரப்பா காட்டும் ஆளை ஏன் பா.ஜ.க. முதல்வர் ஆக்குகிறது? பா.ஜ.க. ஊழலுக்குத் துணை போகிறது என்பதற்கு இதைவிடச் சான்று என்ன இருக்க முடியும்?

இது குறித்துக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அரிபிரசாத் விடுத்த அறிக்கையில், “கர்நாடகப் பிரச்சனைக்கு முதல்வர் மாற்றம் என்பது தீர்வாகாது. பாரதிய ஜனதா கட்சியின் குழப்பத்தால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து இருப்பதால், சட்டப்பேரவையைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்துவதே தீர்வாகும்” என்று கூறியிருக்கிறார். இதைத்தான் அத்வானியும் சொல்லி இருக்கிறார்.

யார் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், தேர்தலைச் சந்தித்தால், எடியூரப்பாவின் ஊழல் ஆட்சியும், அவர் நடத்திக் கொண்டிருக்கும் நாடகமும், அதற்குத் துணை செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையும் மக்கள் வாக்குகளால் தூக்கி எறியப்பட்டால் என்ன செய்வது? இதுதான் பா.ஜ.க.வின் மாபெரும் பயம்.

அதனால்தான் 4 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியும், ஊழலுக்குத் துணைபோயும், எடியூரப்பாவுக்கு அடங்கி ஒடுங்கியும் இருக்கிறது பா.ஜ.க.

எல்லாம் சரி. இன்று எடியூரப்பா ஆதரவாளர்கள் பதவி விலகல் நாடகம் நடத்தியது போல, நாளை சதானந்த கவுடாவின் ஆதரவாளர்களும் இதே நாடகத்தை நடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் தரப்போகிறது பா.ஜ.க.

முதல்வர் ஷ‌ட்டருக்கும் நாளை ஷ‌ட்டர் விழும். நாடகம் தொடரும்! காட்சிகள் மாறும்! கடைசியில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. காணாமல் போகும்.

இதுதான் பா.ஜ.க.வின் தலை “விதி” என்கிறார்கள் மக்கள். எடியூரப்பாவிடம் பணிந்தது பா.ஜ.க.