nedumaran_2212011ஆம் ஆண்டுத் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தமிழர் தேசிய இயக்கத்தின் நிலைப்பாடு குறித்துப் பழ.நெடுமாறன் அவர்களின் அறிக்கையைத் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, நாள், வார ஏடுகளில் விளம்பரம் செய்துள்ளது. அந்தக் கூட்டமைப்பை நாம் யாரும் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை. அதன் முகவரி அந்த விளம்பரத்தில் காணப்படவில்லை. இருப்பினும், குமுதம் ரிப்போர்ட்டரில் முழுப்பக்கமும், தினமலரில் கால் பக்கமும் விளம்பரங்கள் கொடுக்கும் அளவிற்கு நம் தமிழின உணர்வாளர்கள், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருப்பது நமக்கு மகிழ்ச்சி. அதற்குப் பின்னால் ஏதும் ‘நடராஜ’ ரகசியங்கள் உள்ளனவா என்பதை எல்லாம் தேர்தல் ஆணையமோ, புலனாய்வு ஏடுகளோ தேடியதாகத் தெரியவில்லை. தி.மு.க.விற்கு எதிரான விளம்பரம் அது என்பதால், அவர்கள் கவலை கொள்ள வாய்ப்பில்லை.

போகட்டும், நமக்கு ஒரே ஒரு சந்தேகம்.

“தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால்...” என்று அந்த அறிக்கை தொடங்குகின்றது. அவ்வியக்கம் எந்த அரசினால், யார் முதலமைச்சராக இருந்த போது தடை செய்யப்பட்டது என்னும் தகவல், கவனமாக இருட்டடிக்கப்பட்டுள்ளதே, ஏன் என்பதே நமது சந்தேகம்.

தங்கள் முகவரியைத் தெரியப்படுத்தாத தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு, இந்த வினாவிற்கான விடையையேனும், தங்களின் அடுத்த விளம்பரத்தில் தெரியப்படுத்துவார்களா?