வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டுக்காக 1994 சூலையில் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது சிக்காகோ நகரத்திற்குச் சென்று, 1886இல் மே நாளுக்கு வழிகோலிய வைக்கோல் சந்தை (ஹே மார்கெட்) நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைத் தேடிக் கண்டுபிடித்தது பற்றித் தமிழர் கண்ணோட்டம் மற்றும் இனி (அல்லது நந்தன் வழி) ஏடுகளில் எழுதியிருந்தேன். ஒரு கட்டுரையின் தலைப்பு: ஹே மார்க்கெட் இதோ இதோ என்பதாகும்.

16 ஆண்டு கழித்து அதே பேரவை மாநாட்டுக்காக 2010 சூலையில் கவிஞர் தாமரை, மகன் சமரன் ஆகியோரோடு வட அமெரிக்கா போயிருந்தேன். இம்முறையும் சிக்காகோ சென்று எங்கள் இனிய நண்பர் தங்கம் - சந்திரகுமார் இல்லத்தில் தங்கினோம்.

 அவர்களின் துணையோடு மேநாள் ஈகியர் நினைவுச் சின்னத்துக்கும் வைக்கோற் சந்தை நினைவுச் சின்னத்துக்கும் சென்று அங்கே செவ்வணக்கம் செலுத்தியது ஒரு சிலிர்ப்பான அனுபவம். மேநாள் ஈகியர் நினைவுச் சின்னம், வைக்கோற் சந்தை நினைவுச் சின்னம் ஆகியவை பற்றிய தகவல்களை இணையம் வாயிலாக முன் கூட்டியே திரட்டிக் கொடுத்துவிட்ட அன்புத் தோழருக்கு நன்றி!

 1887 நவம்பர் 11இல் தூக்கிலிடப்பட்ட ஸ்பைஸ், ஃபிஷர், எங்கெல், பார்சன்ஸ் ஆகிய மேநாள் ஈகியருக்கான நினைவுச் சின்னம் ஃபாரஸ்ட் ஹோம் கல்லறைத் தோட்டத்;தில் இடம் பெற்றுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை வடித்தவர் ஆல்பர்ட் வீனெர்ட் என்ற சிற்பி.  பிரான்ஸ் நாட்டின் தேசியப் பண் 'மார்சல்ஸ்' தந்த ஊக்கத்தால் அவர் இச்சின்னத்தை வடித்தாராம். ஆல்பர்ட் தூக்கிலிடப்படுவதற்குப் புறப்படுமுன் சிறைக் கொட்டடியில் இப்பாட்டைப் பாடினார் என்பது வரலாறு.

 மாண்டு வீழ்ந்த மாவீரனின் நெற்றியில் மலர் வளையம் சாத்திவிட்டு நீதிப் பெருமகள் வருங்காலம் நோக்கி உறுதியாக முன்னேறிச் செல்வது போல் இந்த நினைவுச் சின்னம் வடிக்கப்பட்டுள்ளது.

 1886 மே 4ஆம் நாள் நடைபெற்ற தொழிலாளர் பேரணியின் போது வைக்கோற் சந்தை டெஸ் பிளெய்ன்ஸ் தெருவில் ஒரு வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தி அதன் மீது ஏறிநின்று அகஸ்த் ஸ்பைஸ் உரையாற்றினார்.காலை 10.30 அளவில் அவர் தமது உரையை நிறைவு செய்து கொண்டிருந்த போது காவல்துறையினர் அணிவகுத்து வந்து தொழிலாளர்களைக் கலைந்து போகச் சொல்லி ஸ்பைஸ் நின்ற வண்டியை நோக்கி முன்னேறினர். அப்போது எங்கிருந்தோ ஒரு குண்டு வந்து விழுந்து வெடித்தது. இதில் காவல்துறையைச் சேர்ந்த டீகன்; என்பவர் கொல்லப்பட்டார். காவல்துறையினர் உடனே தொழிலாளர்களை நோக்கிச் சுடத் தொடங்கினர். தொழிலாளர்களும் திரும்பத் தாக்கினர். முடிவில் காவல்துறையைச் சேர்ந்த எட்டுப் பேரும், குறைந்தது நான்கு தொழிலாளர்களும் உயிரிழந்தனர். இருதரப்பிலும் ஏராளமானோர் காயமுற்றனர். இந்நிகழ்ச்சியை ஒட்டி ஆல்பர்ட் பார்சன்ஸ் உட்பட எட்டுத் தொழிலாளர் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நால்வர் முடிவில் தூக்கிலிடப்பட்டனர்.

 அன்று எட்டு மணி வேலை நாள் கோரிக்கைக்கான தொழிலாளர் பேரணிக்கு மேடையாகப் பயன்படுத்தப்பட்ட வண்டியை நினைவுபடுத்தும் விதத்தில் வைக்கோற் சந்தை நினைவுச் சின்னத்தை வடித்தவர் மேரி பிராகர் என்ற சிக்காகோவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இது 15 அடி உயர வெண்கலச் சிற்பமாகும். 2004 செப்டெம்பர் 14 ஆம் நாள்  சிக்காகோ நகர மேயர் ரிச்சர்டு எம்.டேலியும் தொழிற்சங்கத் தலைவர்களும் இந்தச் சின்னத்தைத் திறந்து வைத்தார்கள்.

Pin It