தகுதி - திறமை - வெங்காயம்

சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்ட "புலே கல்வி மய்யம்' மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவ, மாணவிகளைப் பெருமைப்படுத்தி, பரிசளிக்க ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை நடத்தி வருகிறது. 5 ஆம் ஆண்டு தலித் கல்வி விழா 22.7.2007 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் டேம் என்ற மின்சாரமே இல்லாத குக்கிராமத்தில் 12 ஆம் வகுப்பு படித்த பழங்குடியின மாணவிகளான ஜெயலட்சுமி, 990 மதிப்பெண்களும், அருணா 1,112 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த கல்யாணி என்ற மாணவி (எஸ்.சி.) பத்தாம் வகுப்பில் 444 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்களுடைய குடும்பங்களில் இப்பெண்கள் தான் முதல் முறையாகப் பள்ளிக்கு வருகிறார்கள். இருப்பினும் நகரங்களில் பல்வேறு வசதிகளுடன் பயில்பவர்களை இம்மாணவிகள் விஞ்சியுள்ளது, மிகுந்த பாராட்டுக்குரியது. உயர் படிப்புக்கு வாய்ப்பு வசதிகள் இல்லாததால், இவர்கள் தற்பொழுது ஆசிரியர் பயிற்சிப் பணியில் சேர்ந்துள்ளனர். ஜாதி அளவுகோல்படி அல்ல; பொருளாதார அளவுகோல்படி, இவர்களுக்கு அய்.அய்.டி.கள் இடஒதுக்கீடு வழங்குமா?

நிரந்தர துக்க நாள்!

திருமலைப்பாளையம், கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம். இங்கு 500 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகம், அங்குள்ள சுமதி என்ற அஞ்சல்காரரின் வீட்டில் இருப்பதால், தலித்துகள் யாரும் இங்கு வந்து அஞ்சல் அட்டைகள் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தலித்துகள் கேட்டுக்கு வெளியே நின்றுதான் வாங்கிக் கொள்ள வேண்டும். இத்தீண்டாமை குறித்த செய்தி, "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் (23.7.07) வெளிவந்தது. இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அஞ்சல் நுழைவுப் போராட்டம் ஒன்றை பெரியார் தி.க. அறிவித்திருந்தது. அதற்குள் பாலமுருகன் என்ற தலித் இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் 24.7.07 அன்று சுமதி கைது செய்யப்பட்டுள்ளார். பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி, தீண்டாமைக் கொடுமையை உறுதி செய்திருக்கிறார்.

அக்கிராம சாதி இந்துக்கள் சுமதியை கைது செய்ய வேண்டாம்; சமரசம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர். கொதித்தெழுந்த தலித்துகள் இதை ஏற்கவில்லை. தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி காட்டினர். பத்திரிகை செய்தியாலும், பெரியார் தி.க.வின் போராட்ட அறிவிப்பாலும் - அஞ்சல் அலுவலகம் அந்த வீட்டின் மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தலித்துகள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை தகர்க்கப்பட்டுள்ளது. திருமலைப்பாளையம், பனிப் படலத்தின் ஒரு சிறு முனைதான். இந்தியாவின் அனைத்து மாநில அஞ்சல் துறைக்கும் சேர்த்து தலைமைப் பதவி வகிக்கும் மத்திய அமைச்சர் ஆ. ராஜா, இதே தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தவர்தான். அவர் இத்தகு உயர் பதவியை வகிக்க முடிந்தாலும், சாதாரண அஞ்சல் அட்டையை காசு கொடுத்து வாங்க, அவர் சார்ந்த சமூகத்திற்குத் தடை! அரசியலில் சமத்துவம்; சமூகத்தில் சமத்துவமின்மை. இந்தியாவின் இத்தகு முரண்பாடுகள் முடிக்கப்படாதவரை - ஆகஸ்ட் 15 நிரந்தர துக்க நாளாகவே இனிவரும் காலங்களிலும் இருக்கும்.

எச்சரிக்கை : ஜாதி யாரையும் வாழ விடாது

"சக்கிலியன்' என்றொரு மாத இதழ் ஆகஸ்ட் 25 முதல் "அருந்ததியர் கலை இலக்கியக் கழகம்' சார்பில் வெளிவர இருக்கிறது ("தலித் முரசில்' இதற்கான விளம்பரம், பக்கம் 31இல் இடம் பெற்றுள்ளது). தாத்தா ரெட்டமலை சீனிவாசன் 1893 ஆம் ஆண்டு "பறையன்' என்ற ஏட்டை சாதி அடையாளத்துடன் கொண்டு வந்ததை சுட்டிக்காட்டி, "சக்கிலியன்' அடையாளத்தை இவ்விளம்பரக் குறிப்பு நியாயப்படுத்துகிறது. தாத்தா, ஒரு சாதிக்குரிய தலைவர் என்பதை ஒரு வாதத்திற்காக "சரி' என்று வைத்துக் கொண்டாலும், இதே "தவறை'த்தான் இவர்களும் செய்யப் போகிறார்களா? ஆனால், அந்த விளம்பரத்தில் அம்பேத்கர் முதல் இடம் பெற்றிருக்கிறார். இப்படி ஒவ்வொரு பட்டியல் சாதியினரும், தங்கள் சாதிப் பெயரில்தான் இயங்க வேண்டும் என்று அம்பேத்கர் எங்காவது சொல்லியிருக்கிறாரா?

தங்களுக்கு கீழேயும் மேலேயும் எந்த சாதியும் இருக்கக் கூடாது என்பதில் உறுதி காக்கும் சாதி மறுப்பாளர்கள், இத்தகைய போக்குகளை எதிர்க்காமல் இருக்க முடியாது. தலித் கருத்தியலை சிலர், ஒரு சாதிக்குரியதாகத் திரிக்க முயல்கிறார்கள் என்பதற்காக, அக்கருத்தியலே தேவையில்லையா? ஆம் எனில், எழுச்சிக்கு வித்திடும் சாதி, மதமற்ற அடையாளங்களில் அல்லவா வெளிப்பட வேண்டும்! எ.கா. : ஆதித்தமிழர் பேரவை. இந்து மதத்திற்கு எதிராகச் சமரிடும் ஒரு சிலர் சோரம் போகிறார்கள் என்பதற்காக, இந்து மத எதிர்ப்பையே கைவிட்டு விட முடியுமா? அல்லது இந்து அடையாளங் களைத்தான் நாம் வலிந்து சுமக்க முடியுமா? அம்பேத்கர் உட்சாதி அடையாளங்களுடன் இயங்கி இருந்தால், இன்றைக்கு அவரை இந்தியத் துணைக்கண்டத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் - சாதி, உட்சாதி, மொழி, மாநிலம் எனப் பாகுபாடின்றி ஏற்றுக் கொண்டிருப்பார்களா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அம்பேத்கர்தான் முன்னுதாரணமாகவும் தலைவராகவும் இருக்க முடியும். தவறான முன்னுதாரணங்கள், மேலும் தவறுகளுக்குதான் வழிவகுக்கும். அவர்களுடைய ஆசிரியர் குழுவே குறிப்பிட்டிருப்பது போல, அறிவைதான் ஆயுதமாக்க முடியும்; ஜாதியை ஆயுதமாக்க முடியாது. அது, பாதிக்கப்பட்டவர்களைத்தான் மென்மேலும் பதம் பார்க்கும்!

பெண்களின் "கற்பை' கட்டிக்காக்கும் கற்புக்கரசன்கள்!

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2,500 பெண் சிசுக்கொலைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம், தருமபுரி, தேனி, மதுரை, திண்டுக்கல், வேலூர், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் இப்படுகொலை தொடர்ந்து நீடிப்பதாக அரசு வட்டாரங்களே தெரிவிக்கின்றன. சேலத்தில் பால் விகிதம் : 2004 இல் 1000 ஆண்களுக்கு 878 பெண்கள்; 2005 இல் 892; 2006 இல் 807. சேலம் மாவட்டத்தின் குக்கிராமங்களில் இன்றளவும் பெண் சிசுக்கொலை நடப்பதாக, அரசு அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குஷ்பு "கற்பு' பற்றி தெரிவித்த கருத்துகளுக்காக, தமிழ்ப் பண்பாடே சீரழிந்து விட்டதாக சில முற்போக்குவாதிகளும் - தமிழ்த் தேசியவாதிகளும் கொதித்தெழுந்தனர் - தனிநபருக்கு எதிராக, தனி நபர் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக. ஆனால், பெண்களை கருவிலேயே கொல்லும் (ஆணாதிக்க) பண்பாட்டுச் சீரழிவு குறித்து, எந்தப் பரப்புரைகளையும் நடத்த அவர்களில் யாரும் தயாராக இல்லை. ஏன்? பெண்களின் "கற்பு'தான் தமிழ் ஆண்களை பாதிக்கும்; பெண்களின் சாவு அவர்களை பாதிக்காது!

மாநகரங்களில் ஏது தீண்டாமை?

படிப்பறிவில்லாத பட்டிக்காடுகளில்தான் தீண்டாமைக் கொடுமைகள் நடக்கும்; சென்னை போன்ற "அறிவுவாளி'கள் வசிக்கும் மாநகரங்களில், அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று நுனிப்புல் மேயும் பலரைப் பார்த்திருக்கிறோம். உண்மை என்ன? சென்னை அடையாறில் வசிக்கும் சக்திவேல் (58) என்ற வயலின் இசைக் கலைஞர் (தலித்), 30 ஆண்டுகளாக சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 6.7.2007 அன்று அலுவலக உணவு விடுதியில் அவர் நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, வானொலி நிலைய இசைத் தொகுப்பாளர் பத்மநாபன் (55) அங்கு வந்து சக்திவேலிடம் ஏதோ பேச, வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. தன்னை சாதிப் பெயரை சொல்லி பத்மநாபன் திட்டியதாக, நிலைய இயக்குநரிடம் புகார் செய்திருக்கிறார் சக்திவேல். அதற்குப் பிறகு நான்கு நாட்கள் கழித்து, சக்திவேலுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு (பக்கவாத நோய்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி ராஜேஸ்வரி, காவல் துறை ஆணையரிடம் ""என் கணவரை சாதிப் பெயரைச் சொல்லி பத்மநாபன் திட்டியுள்ளார். அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் என் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பத்மநாபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகார் செய்துள்ளார். இந்தப் புகாரில் உண்மை இருப்பதாகத் தெரிய வந்ததால், பத்மநாபன் கைது செய்யப்பட்டுள்ளார் ("குமுதம் ரிப்போர்ட்டர்' - 9.8.2007). மாநகரங்கள் என்ன, செவ்வாய் கிரகத்தில் போய் இந்துக்கள் குடியமர்ந்தாலும் - அவர்கள் அங்கும் ஜாதியை கொண்டு செல்வர். இந்துக்களைப் பொறுத்தவரை, ஜாதி பிறவிச் சொத்து; அவர்களின் உயிர் மூச்சு. ""வரும் 2020 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடு என்ற உன்னத நிலையை எட்டும்'' என்று நம்ம கலாம் பாய், ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து கனவு காண்கிறார். ஆனால், இந்துக்கள் எல்லாம் "ஜந்து'க்களாக இருக்கும் வரை - இந்தியா ஒருபோதும் வல்லரசாகாது!
Pin It