காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர அ.தி.மு.க. தயாராக இருக்கிறது என்று நாடறியத் தனியார் தொலைக்காட்சியில் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

இது என்ன வெட்கக்கேடு! காங்கிரஸ் கட்சி இவரிடம் ஆதரவு கேட்டதா? அது குறித்தும், நிபந்தனை பற்றியும் பேசியதா என்ன? - ஒரு வெங்காயமும் இல்லை.

தேசியத் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்தப் பார்த்தார். அடுத்த பிரதமர் என்ற தோற்றத்தை உருவாக்கிப் பார்த்தார். எதிர்வரும் தேர்தலில் தன் முதல்வர் கனவும் பலிக்காது என்பதை அறிந்த ஜெயலலிதா, இப்பொழுது காங்கிரசின் காலில் விழுந்து நிபந்தனை அற்ற ஆதரவு என்கிறார், அதற்காக ஒரு கணக்கையும் சொல்கிறார்.

தி.மு.க.வுடனான கூட்டணியை காங்கிரஸ் முறிக்க வேண்டுமாம். தி.மு.க.வின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக, ஜெயலலிதா தன்னுடைய கட்சியின் 9 உறுப்பினர்களுடன், வேறு கட்சிகளிடம் இருந்து இன்னும் 9 உறுப்பினர்களை ‘வாங்கி’க் காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றப் போகிறாராம். இப்படிச் செய்வதற்குப் பெயர் நிபந்தனையற்ற ஆதரவு என்கிறார் ஜெயலலிதா. ஒரு கட்சியின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவர், இப்படித் தரகு வேலைகளில் இறங்கித் தன் தரத்தைக் குறைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.

சோனியா காந்தியைப்பற்றித் தரம் தாழ்ந்து பேசிய இவர் சொல்கிறார், கடந்த காலங்களை எல்லாம காங்கிரஸ் மறந்துவிட வேண்டுமாம்.

காங்கிரஸ் கட்சியிடம் கையேந்துகிறார் ஜெயலலிதா.

ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், இன்னும் கூட சில தலைவர்கள் போயஸ் தோட்ட வாசலில் நின்றது போய், இன்று சோனியாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார் அம்மையார்.

பாவம் கம்யூனிஸ்ட்டுகள். கொள்கையில் நிலையற்ற ஜெயலலிதா இப்படி காங்கிரஸ் இருக்கும் திசையைப் பார்த்து கையேந்துவார் என்பதை எண்ணிப் பார்க்க மறந்து, செய்வதறியாது - சொல்வதறியாது தலைசுற்றிப் போய் நிற்கிறார்கள்.

ஜெயலலிதா தி.மு.க., அரசை ‘மைனாரிட்டி’ அரசு என்று சொல்லிப்பார்த்தார். அறிக்கைகள் விட்டுப் பார்த்தார். உப்புக்கும், புளிக்கும் ஊர் ஊராக ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் எடுபடாததால் இப்பொழுது ஊழல்...ஊழல் என்கிறார்.

மக்களுக்குத் தெரியாதா என்ன? ஊழல் வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் வாய்தா வாங்கிக்கொண்டிருப்பவர் ஜெயலலிதா என்று. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா,அப்போது தோழி சசிகலாவுடன், நகைகளை உடலில் சுமந்து காட்சி கொடுத்ததை மக்கள் மறந்தா போனார்கள்?

அவர்களுக்குத் தெரியும் கலைஞரின் அரசு மக்கள் நலத்திட்டங்களின் அரசு என்று. அதனால்தான் தன் முதல்வர் கனவு இனியும் பலிக்காது என்று காங்கிரசிடம் சரணாகதி அடையப் பார்க்கிறார். கூடவே இவரின் ஆதரவை ஏற்கவில்லையானால், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டித் தானே தலைமை ஏற்றுப் போராடப் போவதாகவும் மிரட்டிப்பார்க்கிறார்.

கொடுமை என்னவென்றால், இவ்வளவையும் பேசிவிட்டுத் தமிழ்நாட்டில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பற்றிக் காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார் அம்மையார்.

காங்கிரஸ் தலைமையோ, ஜெயாவின் ‘தமாஷை’ வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருக்க, அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் ‘தமாஷா’கச் சொல்லி விட்டார், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் ‘காலி இல்லை’ என்று. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் துவிவேதி உறுதியாகச் சொல்கிறார்,தமிழ்நாட்டின் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.,தான் முக்கிய கட்சி என்று.

பிறகென்ன - கொடநாடுதான்!