செம்மொழி மாநாட்டிற்குக் கட்டுரையாளராக வந்திருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆய்வாளர் சூ.யோ.பாத்திமாகரன் அவர்கள் செம்மொழி மாநாடு குறித்துக் கூறிய கருத்து கீழே தரப்பட்டுள்ளது:

 செம்மொழி மாநாடு உலகெங்கும் வாழும் தமிழ் அறிஞர்கள், புத்தி ஜீவிகள், படைப்பாளர்கள் ஒருங்கிணைவதற்கான வாய்ப்பினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் உலகின் பல பாகங்கிலும், தனியான முறையிலும், கூட்டாகவும் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு, தமிழில் தொழில் நுட்பத்தினுடைய தேவைகள் குறித்து நடைபெற்று வந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு எதிர்காலத்தில் முழுமையான, திறமையான ஆய்வு முடிவு வெளிவருவதற்கு வழி சமைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு இருவகைகளில் ஏற்பட்டுள்ளது. ஒன்று, பொது அமர்வுகள் மூலம் மக்களிடையே தம் மொழி செம்மொழி என்கின்ற உணர்வை உருவாக்கியுள்ளது. மிருகங்களுடைய அரசில் “சாப்பிடு அல்லது சாப்பிடப்படுவாய்” என்பது வேதவாக்காக உள்ளது. அதேபோல் மனிதர்களுடைய அரசில், “அடையாளப்படு அல்லது அடையாளப்படுத்தப்படுவாய்” என்பது கட்டளை மொழியாக உள்ளது. அந்த வகையில் தமிழர்கள் தங்கள் மொழியை, செம்மொழி என அடையாளப்படுத்துகின்ற பொழுதே, அதுவும் பல லட்சம் மக்கள் திரண்டெழுந்து மகிழ்ச்சியுடன் எம்மொழி செம்மொழி என்று முழங்குகின்ற பொழுதே, என்றும் செம்மொழியாக உள்ள தமிழ், மக்களால் மீளவும் செம்மொழிதான் என பிரகடனப்படுத்தப்படுகிறது.

இதற்குப் பொது அமர்வுகளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், கவிதைகள், பேச்சுகள், நாடகங்கள், இசை என்பன உதவியுள்ளன. அதேபோல் இரண்டாவதாக ஆய்வாளர்கள் பழமையையும், புதுமையையும் இணைக்கின்ற வகையில் சங்கம் முதல் இன்றுவரை தமிழ் படைத்த இலக்கண இலக்கிய எழுச்சிகளை செம்மொழி மாநாட்டின் மூலம் விளக்கித் தமிழின் செம்மொழித் தன்மையை வெளிப்படுத்தினர். அதே வேளை, இன்றைய யுகத்தின் கணிணித் துறையில் தமிழ் அடைந்த, அடைய வேண்டியனவற்றையும் இணைய மாநாட்டின் மூலம் எடுத்து விளக்கினர். இவ்வகையில் செம்மொழி மாநாடு 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் பெற வேண்டிய வளர்ச்சிகளுக்கு வித்திட்டுள்ளது. மக்களை ஒருங்கிணைப்பதிலும், ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் மூலம் ஆய்வுத் தேடலுக்கான ஒரு புதிய பரிணாமத்தைத் தோற்றுவிப்பதிலும் இம்மாநாட்டை ஒழுங்கு செய்தவர்களும், பங்குபெற்றவர்களும், இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த தமிழக முதல் அமைச்சர் அவர்களும் இந்த மகாநாடு தொடர்ந்தும் மக்கள் ஆய்வாளர் உறவுப் பணியாக வளர்த்துச் சென்று தமிழ் வளமும், பலமும், தமிழர் சிறப்பு வாழ்வும் பெற உதவவேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

Pin It