(சென்னை, கேரள சமாஜத்தில், 28.07.2010 அன்று மாலை, தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியுள்ள, பொதுவுடைமை வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழாவில், ஆசிரியர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி)

திராவிட இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பொதுவுடைமை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களும் தமிழை வளர்த்துள்ளன என்பது வெளிப்படையான உண்மை. அவை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டியவை. அந்த நோக்கில்தான் இந்நூலும் எழுதப்பட்டுள்ளது.

பொதுவுடைமை இயக்கம் எப்படியெல்லாம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்னும் செய்திகளைத் தோழர் அகத்தியலிங்கம் தேடித் தொகுத்துள்ளார். அவருடைய உழைப்பை, நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்க முடிகிறது.

bharathi_360பொதுவுடைமை இயக்கத்தின் மொழிக் கொள்கை, அதில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் நூலுள் காணப்படுகின்றன. அக்கொள்கையின் அடிப்படையில் இயக்கம் மேற்கொண்ட செயற்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

தோழர் சிங்காரவேலர் 1935 ஆம் ஆண்டு வெளிக்கொண்டுவந்த, தமிழின் முதல் அறிவியல் நூலான ‘புதிய’ உலகம் குறித்த செய்திகள் பாராட்டத்தக்கனவாக உள்ளன.

பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய இந்நூலில் காணப்படும் சில செய்திப் பிழைகளையும், வரலாற்றுப் பிழைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் நமக்குள்ளது.

தந்தை பெரியார், பொதுவுடைமைக் கட்சி அறிக்கையை 1933 இல், குடியரசு இதழில் வெளியிட்டார் என்னும் செய்தி, நூலில் இரண்டு இடங்களில் காணப்படுகின்றது. இது சரியன்று, 1931 அக்டோபர் 4 ஆம் தேதி குடியரசு இதழில் தொடங்கி, சமதர்ம அறிக்கை என்னும் பெயரில், அறிக்கையின் முதல் பாகத்தை அய்யா பெரியார் தொடராக வெளியிட்டார் என்பதே சரியானது.

33 இல் வெளிட்டால் என்ன, 31 இல் வெளியிட்டால் என்ன என்று நாம் கருதி விடக்கூடாது. இரண்டிற்குமிடையில் மிக முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. தந்தை பெரியார் 1931 டிசம்பரில் சோவியத் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் புறப்பட்டார். 1932 நவம்பரில் நாடு திரும்பினார். எனவே, சோவியத் பயணத்திற்குப் பின்புதான், பொதுவுடைமை, சமதர்மக் கோட்பாடுகளில் அவர் நாட்டம் கொண்டார் என்று பலரும் கருதுகின்றனர். அந்த அடிப்படையில்தான், சோவியத் போய் வந்த பிறகு, 1933 இல் சமதர்ம அறிக்கையை அவர் வெளியிட்டார் என்று சொல்லப்படுகின்றது.

உண்மை என்னவெனில், சமதர்மக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட காரணத்தினால்தான், பெரியார் சோவியத் செல்ல வேண்டும் என்றே கருதினார். சோவியத் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, தன் குடியரசு வார இதழில் சமதர்ம அறிக்கையையும் வெளியிட்டார். பொதுவுடைமைக் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் வெளியிட்ட பெருமை பெரியாரையே சாரும்.

இன்னொரு செய்தியையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். 1931 ஆகஸ்ட் மாதம், விருதுநகரில் நடைபெற்ற, மூன்றாவது சுயமரியாதை வாலிபர் மாகாண மாநாட்டிலேயே, பொதுவுடைமையும், சமதர்மமும்தான் நம் குறிக்கோள் என்று பெரியார் வெளிப்படையாகவும், உறுதியாகவும் பேசியுள்ளார். அந்தப் பேச்சும் குடியரசு இதழில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி 1925 ஆம் ஆண்டே தோன்றிவிட்டதெனினும், 1936 ஆம் ஆண்டுதான் தமிழகக் கிளை தோற்றுவிக்கப்பட்டது என்னும் செய்தி இந்நூலில் இடம் பெற்றுள்ளது. அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே, பொதுவுடைமைக் கட்சியின் கொள்கையை வரவேற்று, கொள்கை அறிக்கையையும் தமிழில் வெளியிட்ட தந்தை பெரியாரைப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் நன்றியோடு நினைவுகூர்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்நூலில் காணப்படும் இன்னொரு செய்தி, பாரதியாரைப் பற்றியது!

மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்

ஆஹாவென் றெழுந்தது பார்யுகப் புரட்சி

என்று பாரதியார், சோவியத்தின் நவம்பர் புரட்சியைப் பாராட்டிப் பாடியுள்ளார் என்று பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் பூரிப்படைவது வழக்கம். இந்நூலிலும் அச்செய்தி இடம் பெற்றுள்ளது.

இந்திய மக்களால் வணங்கப்படும் காளி, வறுமையும், அறியாமையும் நிறைந்துள்ள இந்தியாவை விட்டு விட்டுச் சோவியத்திற்குப் போய்க் கடைக்கண் வைத்தது ஏன் என்ற வினா ஒருபுறமிருக்க, பாரதியார் பாராட்டியது நவம்பர் புரட்சியைத்தானா என்ற வினாவையும் இங்கு நான் எழுப்ப வேண்டியுள்ளது. ஏனெனில், அந்தப பாடலைப் பாரதியார் பாடியது, 1917 மார்ச் மாதத்தில். இலெனின் தலைமையில் புரட்சி நடந்ததோ நவம்பர் மாதத்தில். நவம்பரில் நடந்த புரட்சியைப் பாரதியார் மார்ச்சில் எப்படிப் பாடியிருக்க முடியும்?

அவர் 1917 பிப்ரவரியில், மென்ஷ்விக்குகள் தலைமையில் நடைபெற்ற புரட்சியைத்தான் வாழ்த்திப் பாடியுள்ளார் என்பது உண்மை. ஆகையினால்தான், சார் மன்னன் வீழ்ச்சியைப் பற்றி அதில் அவர் குறிப்பிடுகிறார்.

1917 நவம்ரில், இலெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பாரதியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுமன்று, அதனை அவர் கடுமையாக எதிர்த்தும் எழுதியுள்ளார் என்பதே மிக முகாமையானது.

பாதியார் கட்டுரைகள் தொகுப்பில், செல்வம் என்னும் தலைப்பில், இரண்டு கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் இரண்டாவது தலைப்பின் கீழ், லெனின் வழி சரியான வழியில்லை என்கின்றார். இன்னொரு இடத்தில், அதே கட்டுரையில், இன்னும் கடுமையாக, அநியாயம் செய்வோரை, அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார் எனறு சொல்லிவிட்டு, இப்படிச் சொல்பவர்கள், தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன் எனகிறார்.

 படித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ, பாரதி குறித்த எந்த ஒரு அதிர்ச்சியையும் பொதுவுடைமைத் தோழர்களிடம் இதுவரை நான் பார்த்ததில்லை.

இதுபோன்ற விமர்சனங்கள் எல்லாம் பாரதியைக் குறைத்து மதிப்பிடுவதற்காக எழுப்பப்படவில்லை. பாரதியைத் தவிர்த்துவிட்டு, தமிழ் இலக்கிய வரலாற்றை, அதிலும் குறிப்பாக தற்காலக் கவிதை வரலாற்றை ஒருநாளும் நாம் எழுதிவிட முடியாது. தமிழால் பாரதி தகுதி பெற்றதையும், தமிழ் பாரதியால் தகுதி பெற்றதையும் யாரால் மறுக்க முடியும்? நான் இங்கே குறிப்பிட்டிருப்பதெல்லாம், பொதுவுடைமை பற்றிய பாரதியின் கருத்து எவ்வாறு இருந்தது என்பது குறித்து மட்டுமே. விஞ்ஞான சோசலிசத்துக்கு மாறாக, தர்மகர்த்தா சோசலிசம் என்னும் கற்பனாவாதத்தைத்தான் பாரதி முன்வைத்தார் என்பதை மட்டுமே இங்கு நான் நினைவூட்டுகிறேன்.

(மேடையில் அமர்ந்திருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்), தமிழ்மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், சோவியத் செல்வதற்கு முன்பே சமதர்ம அறிக்கையை பெரியார் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தினார். இறுதியில் நிறைவுறையாற்றிய, இந்திய பொதுவுடைமைக்கட்சியின் மாநிலத் தலைமைக்குழு உறுப்பினர் அய்யா நல்லகண்ணு அவர்கள், பாரதி குறித்த செய்திக்கு ஒரு மறுப்பை வெளியிட்டார். பாரதி தன் இறுதிக் காலத்தில் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக்கொண்டும், லெனினைப் பாராட்டியும் எழுதி இருப்பதாகக் கூறினார்)

Pin It