அண்மையில் வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று நம்மைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வரதட்சணை கேட்பதோ, வாங்குவதோ குற்றமில்லை என்று அத்தீர்ப்பு வெளிப்படையாகக் கூறியுள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பவரின் மனைவி சந்தோஷி சென்ற ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதை ஒட்டி அவருடைய கணவர், கணவரின் குடும்பத்தினர் மீது காவல்துறை வரதட்சணை வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் அமர்நாத், அவர் தாயார், அவர் தங்கை ஆகிய மூவருக்கும் அமர்வு நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அமர்நாத் மேல் முறையீடு செய்தார். உயர்நீதி மன்றம் அமர்நாத்தின் தண்டனையை உறுதிப்படுத்தி, மற்ற இருவரையும் விடுதலை செய்தது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அமர்நாத், காவல்துறை ஆகிய இருவருமே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கில்தான் அமர்நாத் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மேற்காணும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அமர்நாத்தும், குடும்பத்தினரும் சந்தோஷியிடம் வரதட்சணை கேட்டது மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ஒருவரைக் கொடுமைப்படுத்தி வரதட்சணை கேட்பதுதான் குற்றமே தவிர, வரதட்சணை கேட்பதே குற்றமாகாது என்பதுதான் தீர்ப்பின் சாரம்.

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் கொடிய குற்றங்கள் என்று இத்தனை காலமும் சொல்லி வந்தோம். அதனை மீறி வரதட்சணை என்பது நடைமுறைப் பழக்கமாக உள்ளது என்னும் அவமானத்தையும் நாம் அறிவோம். மாட்டை விலைபேசுதல் போல் மணமக்களில் ஒருவரை விலைபேசி வாங்குதல்தான் வரதட்சணை என்பது. அதில் ஒன்றும் குற்றமில்லை என்று நீதிமன்றமே கூறிவிடுமானால், இனி வெட்கமில்லாமலும், வெளிப்படையாகவும் வரதட்சணை கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் உண்மை.

வரதட்சணையே கொடுமையானதுதான். அதனைக் கொடுமைப்படுத்தி வாங்குவது, கொடுமைப்படுத்தாமல் வாங்குவது என்று இரண்டாகப் பிரித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இனி இன்னொரு கேள்வி எழும். கொடுமைப்படுத்துதல் என்றால் என்ன என்பதே அக்கேள்வி. அதற்கும் இன்னொருவர் வழக்குத் தொடுப்பார். சாதாரணமாக அடிப்பதே கொடுமைப்படுத்துவதா அல்லது இரத்தம் வரும்வரை அடித்தால்தான் கொடுமைப்படுத்துவதா என்னும் ஐயத்திற்கு நீதிபதிகள் விளக்கம் தருவார்கள்.

நீதிபதிகளின், அதுவும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு, அந்த வழக்கிற்கானது மட்டுமன்று. நீதிபதிகள் உருவாக்கும் சட்டம் (Judge made Law) என்னும் அடிப்படையில், இனிவரும் வழக்குகள் எல்லாவற்றிற்கும், எல்லா நீதிமன்றங்களிலும் அது சட்டமாக ஆகிவிடும்.

இத்தீர்ப்பின் மூலம் சமத்துவம், சமநீதி, பெண்விடுதலை போன்ற உயர் கொள்கைகள் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளன.