“காதலிக்கிறதே பெரிய தப்பாம். என்னமோ பண்பாடெல்லாம் அழியுதாம். என்ன தாத்தா, நான் சொல்றது கேட்குதா?”

“அடப்போடா! நானும் கெழவியும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவ வேற சாதி, நான் வேற சாதி. ஊர விட்டுத் தள்ளிவச்சாங்க. இப்ப எல்லாம் சரியாப் போச்சு. நாங்க என்ன குடியா முழுகிட்டோம். ”

-ஈரோடு மாவட்டம் கோட்டைக்காட்டு வலசு என்ற சிற்றூரில் ஒரு தேனீர்க் கடையில் ஓர் இளைஞரும், ஒரு முதியவரும் பேசிய இந்தப்பேச்சை எதிர்பாராமல் கேட்க நேர்ந்தது. இந்தியாவின் இதயம் கிராமம் என்றார் காந்தியார். அந்தக் கிராமத்தின் இதய ஒலிதான் மேலே கேட்ட உரையாடல்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினம். உற்சாகமாக இருந்த இளைஞர்களைப் பார்த்து மிரட்டின ராம்சேனா, சிவசேனா, இந்துமுன்னணி போன்ற இந்து மதவாத அமைப்புகள். கட்டிக் காத்த பண்பாடு எல்லாம் அழிந்துவிடும் என்று கூச்சல் போட்டன இந்த இந்துத்துவ அமைப்பினர். என்ன அது பண்பாடு?

இராமனும் சீதையும் மணம் செய்துகொள்ளும் முன்னரே, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். அதைக் கம்பன் சொல்கிறான், “ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” இராமன் சீதையின் பார்வையில் இழைந்தோடிய காதலைக் கம்பனின் வரிகள் சுவைபடக் கூறுவதைக் காணலாம். இது காதல். அதே இராமன் சீதையின் கற்பைச் சந்தேகப்பட்டு, அவளை எரியும் நெருப்பில் இறங்க வைத்தான். இங்கே இராமனின் ஆணாதிக்கம், சீதையின் மேல் திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம் மேலோங்கியது. மனிதநேயத்தைத் தகர்த்து எறிந்த இது அவர்களின் பண்பாடு.

வசிட்டரின் மனைவி அருந்ததியின் உடலில் துணியே இல்லாமல் அவளிடம் பால் குடித்தான் சிவன். கொளதம முனிவரின் மனைவி அகலிகையை, அவள் கணவனை ஏமாற்றிவிட்டு, கணவனைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு உடலுறவு கொண்டவன் இந்திரன். அதனால் அம்முனிவரின் சாபத்தால் இந்திரன் உடல் முழுவதும் பெண்குறிகள் தோன்றிவிட்டன.

கம்சனுக்கு வாசனைத் திரவியங்கள் பூசுகின்ற குப்ஜா என்ற கூனல் விழுந்த பெண்ணின் கூனலை நிமிர்த்தி அவளைப் புணர்ந்தவன் கிருஷ்ணன். அதிரதன் என்ற தேர்ப்பாகனின் மனைவி ராதையை அபகரித்து தனக்குரியவளாக ஆக்கிக் கொண்டவனும் கண்ணனே.

சிவன் ஓர் ஆண். விஷ்ணு ஓர் ஆண். விஷ்ணு பெண்ணாக வடிவம் மாறி சிவனுடன் கூடி அதனால் பிறந்தவன் அய்யப்பன். பெண்ணாக மாறினாலும் விஷ்ணு அடிப்படையில் ஓர் ஆண். ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்றால். இது ஹோமோ அல்லவா?

கந்தர்வ முறையில் கட்டிய மனைவி சாகுந்தலையைக் காட்டில் விட்டுவிட்டு, சீச்சீ இந்தப் பழம் புளிக்கிறது என்று ஓடியவன் துஷ்யந்தன்.

காசிபர் என்ற மகாமுனிவர் குரோதவசை என்ற பெண்ணைப் புணர்ந்து புலி மற்றும் சிங்கங்களைப் பெற்றான். பிறகு தாமரை என்ற பெண்ணைப் புணர்ந்து குதிரை, கழுதை, பறவைகளைப் பெற்றான். அதன்பின் சுரபியைப் புணர்ந்து பசுக்கூட்டங்களைப் பெற்றான். விநயையைப் புணர்ந்து கருடனைப் பெற்றெடுத்திருக்கிறான். ஏன் மனிதர்களைப் பெறவில்லை என்று கேட்கக்கூடாது?

மதுரைக் கள்ளழகர் தன் தங்கை மீனாட்சி திருமணத்திற்கு வருகிறார். வைகை ஆற்றைக்கடக்கும்போது பாதிவழியில், தங்கை மீனாட்சி திருமணம் நடந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. கோபம் கொண்ட கள்ளழகர் உடனே வீடுதிரும்பாமல், வண்டியூருக்கு நேராக ஆற்றுவழியே சென்று அங்கு ஒர் இஸ்லாமியப் பெண்ணுடன் தங்கி விடுகிறார்.

இது ஒருபுறமிருக்க - மங்களர் என்ற மகாமுனிவருக்கு 5000 மனைவிகள். கிருஷ்ணபரமாத்மாவிற்கு 16 ஆயிரத்து 108 மனைவிகள். ரேவதர் என்ற மகாமுனிவருக்கு 101 பிள்ளைகள். வசிட்டனுக்கும் 101 பிள்ளைகள். மகாபாரத திருதராஷ்ட்டிரனுக்கு 100 பிள்ளைகள். நம்முடைய கிருஷ்ணனுக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் பிள்ளைகள். இதை எல்லாம்  உண்மைதானா என்று கேட்கக் கூடாது. அவர்களின் புராணங்கள் சொல்லுகின்ற கதை இது. எப்படி இருக்கிறது கதை!

இதைத்தான் பண்பாடு பண்பாடு என்றும், அழிகிறது அழிகிறது என்றும் கூச்சல் போட்டுச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களா இவர்கள்?

சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி.

காட்டில் ஓர் ஆண் மானும், பெண் மானும் தாகம் வாட்டியதால் தண்ணீர்தேடி அலைகின்றன. கையளவே நீருள்ள ஒரு குட்டையைக் காண்கின்றன. அந்நீர் ஒருவருக்கு மட்டுமே போதுமானது. பெண் மானை முதலில் நீர் அருந்தச் சொல்கிறது ஆண் மான். பெண் மானோ ஆண் மானை முதலில் அருந்தச் சொல்கிறது. இறுதியில் இருவரும் ஒரே நேரத்தில் நீர் அருந்தலாம் என்று முடிவு செய்து குட்டை நீரில் வாயை வைக்கின்றன. சிறிது நேரம் செல்கிறது. குட்டையில் தண்ணீர் அப்படியே இருக்கிறது, கொஞ்சமும் குறையவில்லை. காரணம், ஆண் மான் அருந்தட்டும் என்று பெண் மானும், பெண் மான் அருந்தட்டும் என்று ஆண் மானும் நீரைக் குடிப்பது போல பாவனை செய்தன.

இந்தக் காட்சியில் இரண்டு மான்களிடமும் இருந்த காதலும், அந்தக் காதலின் வலிமை என்ன என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. ஆனால் இந்து முன்னணிக் காரர்கள், காதலர் தினத்தில் இரண்டு கழுதைகளுக்குத் தாலிகட்டித் திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.  மானுக்கு இருந்த உணர்வோ, அறிவோ கூட இவர்களிடம் இல்லை. என்ன கேவலமான செயல். என்ன கேவலமான பண்பாடு!

ஆரியப் பண்பாட்டின் அடிப்படையே, ஆதிக்கம். பெண்ணைப்  போகப் பொருள் என்றும் அவர்கள் இளவயதில் தந்தைக்கு அடிமை என்றும், திருமணத்திற்குப் பின் கணவனுக்கு அடிமை என்றும், முதிய வயதில் மகனுக்கு அடிமை என்றும் மனு ஸமிருதி சொல்லும் பண்பாடு ஆரியத்தின் ஆதிக்கப் பண்பாடு.  கைம்பெண் திருமணம் செய்வதைக் கண்டித்தும், அப்படிப் பட்ட பெண்களை மொட்டை அடித்தும், வெள்ளை உடை அணியச் செய்தும், அவளைக் கணவன் எரியும் நெருப்பில் சதி என்ற பெயரால் எரிய வைத்ததும் ஆரியத்தின் பண்பாடு.

இந்தப் பண்பாட்டைத் திராவிட இனத்தின் மீதும் திணித்தார்கள் அவர்கள். இதற்கு எதிராகப் போராடி மக்களை விழிப்படையச் செய்தார்கள் புத்தர், பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற பல சீர்திருத்த முற்போக்களார்கள். வெள்ளையர்களின் வருகைக்குப் பின் எழுந்த கல்வி வளர்ச்சியினால், இளைஞர்களும், இளம் பெண்களும் இந்துத்துவப் பண்பாட்டு மரபுகளைத் தகர்க்கத் தொடங்கினார்கள்.

காதல், அகமணமுறையை உடைத்துப் புறமணமுறையை நடைமுறைப்படுத்துகிறது. காதல்,  சாதிகளைத் தகர்த்துச் சாதிச் சுவர்களை உடைக்கிறது. காதலினால், மதம் பிடித்த மதம் வீழ்த்தப்படுகிறது. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வைத் தாண்டிச் செல்லும் வலிமை காதலுக்கு உண்டு. கைம்பெண்கள் காதலினால் மறுமணம் செய்த வரலாறுகளும் இருக்கத்தான் செய்கிறது. காதலினால் எழுச்சியுறும் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்விடுதலையை நோக்கித் தங்கள் குரலை எழுப்பத்தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தக் காதலின் பண்பாடு சமத்துவத்திற்கான அடித்தளத்தின் முதல் படி. இந்தக் காதல் பண்பாடு ஆரியத்திற்கு எதிரானது. இக்காதல் பண்பாடு நிலைத்து வளர்ந்து விட்டால், இந்துத்துவம் என்ற ஆரியப்பண்பாடு வீழ்ச்சியடைந்து விடும்என்ற காரணத்தினால்தான் இந்துத்துவ அமைப்புகள் காதலை எதிர்க்கின்றன. காதலர் தினத்தையும் எதிர்க்கின்றன.

அதுவும் கருத்து அடிப்படையில் அல்லாமல், “பிடி தாலியை, கட்டு ” அல்லது “ அடி..உதை..ஓடு.. ”என்று வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இது பாசிசம். பாசிச இந்துத்துவப் பண்பாட்டை முறியடிக்க காதல் ஒரு போர்வாள். காதலர்கள் போர்வீரர்கள். போர்க்குணம் மிக்கக் காதலையும், காதலர்களையும், காதல் பண்பாட்டையும் வாழ்த்துவோம், வரவேற்போம் -இந்துத்துவப் பண்பாட்டை வீழ்த்துவதற்காக.

- எழில்.இளங்கோவன்

Pin It