puviarasuசேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்புப் போராட்டக் களங்கள்

நவசக்தி வழி வரலாற்றுப் பதிவுகள்

ஆசிரியர் : அ.புவியரசு

வெளியீடு : காவ்யா

15,2ஆவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,

கோடம்பாக்கம், சென்னை - 24

தொலைபேசி : 044 - 2326882

விலை : ரூ. 150-/-

---------------------------

1920 காலகட்டங்களில் தமிழ்நாட்டில் களம் கண்ட மூன்று முக்கிய நிகழ்வுகள் மக்கள் கவனத்தை ஈர்த்தன.

1. சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்.

2. வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்.

3. தேவதாசி ஒழிப்பு இயக்கம்

1922 மார்ச் 3 முதல் 1925 ஜுலை 24 வரை வெளிவந்த நவசக்தி, வாரம், மாதம் இதழ்களில் பதிவாகியிருந்த செய்திகளின் அடிப்படையில் ‘சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்புப் போராட்டக் களங்கள் - நவசக்தி வழி வரலாற்றுப் பதிவுகள்’ என்ற நூல் அ. புவியரசு அவர்களால் எழுதப்பெற்று, அதனை ‘காவ்யா’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திருவாரூர் வி. கல்யாணசுந்தரனார் 22.10.1920ஆம் நாள் நவசக்தி என்ற இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார்.

அன்றைய காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களான தந்தை பெரியார், வரதராசுலு (நாயுடு) ஆகியோருடன் திரு.வி.க.வும் இணைந்து மூன்று முன்னணித் தலைவர்களாக விளங்கினார்கள்.

தேசபக்தன் இதழில் இருந்து திரு-.வி.க. விலகிய பின் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் வ.வே.சு. ஐயர். இதழில் எழுதிய தலையங்கம் காரணமாக, பெல்லாரி சிறையில் அடைக்கப்பெற்ற அவர், விடுதலையடைந்த பின்னர், கல்லிடைக்குறிச்சியில் ஓர் ஆசிரமம் அமைத்தார்.

அதுவே, பின்னர் 30 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட, திருநெல்வேலியை அடுத்திருந்த சேரன்மாதேவிக்கு மாற்றப்பெற்று குருகுலமாக - ஒரு பள்ளியாக நடத்தினார் வ.வே.சு.

பெயருக்கு அது பள்ளியாக இருந்தது. உண்மையில் அது ஒரு வருணாசிரம குருகுலம்.

அக்குருகுலத்தில் பயின்ற ஓமந்தூரார் இராமசாமி அவர்களின் மகன் மூலம், அங்கு நடைபெற்ற வருணாசிரம, சாதிய ஒதுக்குதல்கள், ஏற்றத்தாழ்வுப் பிரிவுகளை அறிந்தார் தந்தை பெரியார் அவர்கள்.

அக்குருகுலத்திற்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தந்தை பெரியாரும் பொருளுதவி செய்தார். ‘தமிழ்நாடு’ இதழின் மூலம் வரதராசுலுவும், நவசக்தி மூலம் திரு.வி.க.வும் நிதிதிரட்டி உதவினார்கள்.

ஆகவே பொது நிதியில் நடத்தப்பட்டு வரும் குருகுலப் பள்ளியில் சாதியம் தலைதூக்கியதை தந்தை பெரியார் எதித்தது மட்டுமன்று, அவரின் போராட்ட களத்தை நவசக்தி இதழ் செய்திகளின் மூலம் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

“வருணாசிரம தரும எதிர்ப்பாளரான பெரியார் ஈ.வெ.ரா, சேரன்மாதேவி குருகுலத்தில் சாதிப் பிரிவினையை அகற்றப் போராடினார். டாக்டர் வரதராசுலு நாயுடு, எஸ். இராமநாதன் முதலான பார்ப்பனரல்லாத தலைவர்கள் அவர்பின் நின்றனர். பெரியார் ஈ.வெ.ராவின் சாதி யழிப்புக் களங்களுள் இப்போராட்டம் குறிப்பிடத்தக்கது”. இது இப்போராட்டம் குறித்து நூலாசிரியரின் அழுத்தமான பதிவு.

சாதியத்திற்கு எதிரான இன்னொரு முக்கிய போராட்டக் களம் வைக்கம் போராட்டம். “வைக்கம் வீரர்” என்று தி-ரு. வி.க.வால் பின்னாளில் அழைக்கப்பட்ட தந்தை பெரியாரே இந்தப் போராட்டத்தையும் முன்னின்று நடத்தினார். கேரளத்தில் உள்ள வைக்கம் தெருக்களில், குறிப்பாக அங்குள்ள கோயில்களுக்கு அருகில் உள்ள சாலைகளில் - பாதையில் தீண்டத்தகாதவர்கள் யாரும் நடக்கக் கூடாது என்ற கொடுமை அங்கு நிலவியது.

இது குறித்துப் போராடப் போவதாக கேரள காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கேசவமேனன் 13.03.1924ஆம் நாள் காந்தியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதற்குப் பதில் எழுதிய காந்தியார், வைக்கம் கோயில் அறங்காவலர் சார்பாக சிவராம ஐயரும், வாஞ்சேசுவர ஐயரும் தம்மைச் சந்தித்து விளக்கம் கொடுத்தாகவும், அவ்விளக்கத்தின்படி அந்தப் பொது நடைபாதைகள் கோயில் அறங்காவல் குழுவு-க்குச் சொந்தமானது என்பதை அறிவதாகவும், அதனால் பிற பார்ப்பனர் அல்லாதார் அப்பாதையைப் பயன்படுத்துவதைப் பிராமணர்கள் அனு மதிக்கின்றவரை தீண்டத்தகாதோருக்கும் அனுமதிக்கலாம் என்று பதில் எழுதியிருக்கிறார்.

இதில் பிற பார்ப்பனர் அல்லாதார் அனுமதிக்கப் படும்வரை என்பது, அவர்களையும் பயன்படுத்த விடாமல் செய்வதற்காக காந்தியின் தந்திரம் என்பதை நூலாசிரியர் குறிப்பிட்டுச் சொல்வது கருதத்தக்கது.

“வைக்கம் விஷயமாக அவ்வேலையை ஹிந்துக்களே செய்யும்படி விட்டுவிடுவீர்கனெ நம்புகிறேன்... நீங்கள் சத்தியாகிரகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தல் உசிதமல்ல. சத்தியாகிரகம் செய்தல், நிச்சயமாகவே கூடாது” - என்ற நவசக்தி (9.5.1924) இதழில் பதிவைத் தந்து வைக்கத்தில் காந்தியின் சாதிச் சார்பை வெளிப்படுத்தும் நூலாசிரியர், அவை தொடர்பான பிற செய்திகளையும் தெளிவுறத் தந்திருக்கிறார்.

மூன்றாவது களமாக தேவதாசி ஒழிப்பு இயக்கம் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் தமிழகத்தில் பேசப்பட்ட அளவுக்கு தேவதாசி ஒழிப்பு இயக்கம் பேசப்படவில்லை என்கிறார் நூலாசிரியர் அ. புவியரசு.

“மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும்” என்ற நூலின் ஆசிரியர் பா. ஜீவசுந்தரி, தேவதாசி ஒழிப்புச் சட்டம் பற்றிப் பேசும்போது கூட அதற்காகப் போராடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பேசப்படுவதில்லை என்றும், அவரைப் பற்றிய தகவல்கள் திராவிட இயக்க இதழ்களில் மட்டுமே காணமுடிகிறது என்றும் கூறுகிறார்.

இக்குறிப்பை மேற்கோள் காட்டும் நூலாசிரியர், திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளில் அம்மையார் குறித்து திரு.வி.க. விரிவாக எழுதியிருப்பதாகச் சொன்னாலும், நவசக்தி இதழில் தேவதாசி ஒழிப்பு இயக்கம் பற்றிய பிற செய்திகளே பதிவாகியுள்ளதைக் குறிப்பிடுகிறார்.

இவ்வியக்கம் குறித்து நடைபெற்ற மாநாடுகள் பற்றிய நவசக்தியின் செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலின் முன்னுரையில் அவர் நவசக்தி இதழ்களைத் தேட எடுத்துக் கொண்ட முயற்சி - அல்லல்கள் குறித்து குறிப்பிட்டதைப் படித்தபின் இந்நூல் எத்தகைய உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

நவசக்தி பழைய இதழ்களின் நகல்கள் நூலில் இடம் பெற்றமை, இன்றைய தலைமுறையினருக்குப் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது.

நவசக்தியின் சிறு சிறு செய்திகள் இறுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டிருப்பதும் பயனுடையதாகவே இருக்கிறது.

இந்நூல் நவசக்தி இதழில் பதிவான மூன்று சாதியக் களங்களின் பதிவு.

“இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘வர்ணாசிரமம் வேறு ; தீண்டாமை வேறு’ என்ற வியாக்கியானத்தை வாசிக்கையில் கசக்கத்தான் செய்கிறது காந்தியம். தாய்மொழி வழிக் கல்விக்கான அருமையான செயல்திட்டம் உடன் உண்ணலை மறுத்ததால் பாழ்பட்டுப் போன வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்துள்ளது இந்நூல். உயர்ந்த கல்வித் திட்டம், உயர்ந்த கல்வி கற்றவரால் உருவாக்கப்பட்ட திட்டம், மனிதத்தை மறுதலித்ததால் மறைந்துவிட்டதே என்ற மனக்கவலையை உருவாக்குகிறது இந்நூல். இத்தகு ‘நூல்’ வலிமையை நவசக்தி இதழ்களைக் களமாகக் கொண்டு விளக்குகிறது இந்நூல்” - பேரா. இரா. அறவேந்தனின் இந்த விளக்கமே இந்நூலுக்கான அறிமுகம்.