இன்னும் தமிழருக்குள் எத்தனை பிணக்கு?
ஏனோ நமக்குள்ளே வம்பு வழக்கு?
அண்ணன் தம்பிகள்நம் உறவா கசக்கும்?
அள்ளியே கொடுத்தாலும் பகையா இனிக்கும்?

கட்சி அரசியலால் பிரிந்தே கிடக்கிறார்
கண்கள் ஒன்றைஒன்று பகைத்திட நினைக்கிறார்!
எச்சில் சோற்றுக்கே இனத்தையே பழிக்கிறார் - அட
இன்னுமா புரியவில்லை தம்மையே அழிக்கிறார்!

தாழ்ந்து கிடந்தவர்கள் துடித்தே எழுந்தார்
தந்தை பெரியாரே தூக்கம் கலைத்தார்!
வீழ்ந்த தமிழினத்தார் பாதியில் விழித்தார்
வாழ்ந்த வரலாற்றை மீண்டும் மறந்தார்!

அஞ்சிக் கிடந்தவர்கள் ஆட்சியைப் பிடித்தார்
ஆண்ட இனத்தவர்கள் மாட்சிமை இழந்தார்!
நெஞ்சில் இதுநமக்கு எரியும் நெருப்பு
நாளை தமிழனுக்கு விடியுமா கிழக்கு?