பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, இந்த ஆண்டு இன்னொரு சிறப்பையும் பெறுகின்றது. சென்னை, கோட்டூர்புரத்தில் அன்றைய தினம் திறக்கப்படவுள்ள மிகப்பெரிய நூலகம், தமிழ் அறிவுலகம் மேலும் சிறந்தோங்கக் கிடைத்த செல்வமாகும்.

நம் தமிழக முதலமைச்சர், மூன்று பெரிய கனவுகளோடு, இவ்வாண்டின் தொடக்கத்தில் கால்வைப்பதாகக் கூறினார். முதல் கனவு, தமிழகச் சட்டமன்றப் புதிய கட்டிடம். அது கடந்த பிப்ரவரியில் நிறைவேறியது. இரண்டாவது கனவு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அந்தக் கனவும் மூன்று மாதங்களுக்கு முன் வெகு சிறப்பாய் நிறைவேறியது. இப்போது, நூலகம் என்னும் இக்கனவு, அண்ணாவின் பிறந்தநாளில் மெய்ப்பட உள்ளது.

8 ஏக்கர் நிலப்பரப்பில், ஏறத்தாழ 172 கோடி ரூபாய் செலவில், வானுயரத் தலைநிமிரவிருக்கும் கோட்டூர்புரம் நூலகம், வரலாற்றில் சாதனை ; அறிவுலகின் பெருநிதியம் !

எட்டு மாடிக் கட்டிடமாகத் திட்டமிடப்பட்டிருக்கும் நூலகத்தின் கீழ்த்தளமும், மூன்று மாடிகளும் இப்போது திறக்கப்படவுள்ளன. பிற பகுதிகள், பணி நிறைவடைந்தபின் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள கணினி நூலகத்தைப் போல், தமிழர்களுக்கும் இப்புதிய நூலகம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நூல்கள் அனைத்தும் இனித் தமிழகத்தின் தலைநகரை வந்தடையும் என்பது நமக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது.

வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வருகின்ற தமிழ் ஆய்வாளர்களுக்குத் தேவையான அனைத்து நூல்களும் இந்நூலகத்தில் கிடைக்கும். ஒரு சில நூல்கள் இல்லாமலிருப்பின், அவற்றைச் சுட்டிக் காட்டினால், மூன்றே நாள்களுக்குள் வரவழைத்துக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பிற மாநிலங்களில் உள்ள மொழிப்பாட நூல்களின் படிகள் அனைத்தும் கிடைப்பதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டுள்ளன.

அன்றைய அரசுகள், கோயில்கள் கட்டிக் குடமுழுக்குச் செய்து கொண்டிருந்தன. இன்றைய நம் அரசோ, அறிவுத் திருக்கோயிலை எழுப்பி, புதிய வரலாற்றுக்குப் புத்தெழுச்சி தந்துள்ளது.

நல்லதொரு நூலகத்தை உருவாக்கித் தந்துள்ள தமிழக அரசுக்கும், தனிப்பெரும் தலைவர் கலைஞருக்கும், தமிழினத்தின் அடுத்தடுத்த தலைமுறையும் நன்றி சொல்லும் !

Pin It