காய்கறிகளின் விலை கூடிக்கொண்டே போக, மக்களின் கோபமும் கூடுகின்றது என்பதை உணர்ந்த தமிழக அரசு, ‘பசுமைப் பண்ணைக் காய்கறிக் கடை’ என்னும் பெயரில், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் 31கடைகளைத் திறந்துள்ளது.

7 கோடியே 21 இலட்சம் தமிழர்களுக்கு 31 கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் ‘அற்புதத் திட்டம்’ இது!

இடைத்தரகர் எவருமின்றி,விளைபொருள்களை மக்கள் நேரடியாகப் பெற இத்திட்டம் உதவும் என்கின்றனர்.அப்படியானால்,இதே கோட்பாட்டின் அடிப்படையில் தொடங்கப்பெற்று, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ‘உழவர் சந்தை’ திட்டத்தை இந்த அரசு ஏன் நிறுத்தியது?

கலைஞர் தலைமையிலான அரசில் தொடங்கப்பெற்ற எந்த ஒரு நல்ல திட்டத்தையும் தொடரவே கூடாது என்ற ‘நல்ல எண்ணம்’ தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

1999 நவம்பர் 14 அன்று, முதன்முதலாக, மதுரை மாநகரில் முதல் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும், படிப்படியாக 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.

அதிகாலை 4 மணிக்கெல்லாம், கடைக்கோடியில் உள்ள சிற்றூருக்குக் கூடச் சென்று, உழவர் சந்தை வண்டிகள் காய்கறிகளைப் பெற்றுவரும்.உழவர்களின் சரக்குகளுக்குக் கட்டணம் கூட இல்லை. சந்தைக்கு வந்தவுடன், தராசும், படிக்கற்களும் இலவயமாக வழங்கப்படும். உழவர்களுக்கு மகிழ்ச்சி, நுகர்வோர் முகங்களில் பூரிப்பு!

எல்லாவற்றையும் அழித்துவிட்டு, இன்று காய்கறிக்கடை நடத்த முன்வருகிறது இன்றைய அரசு.

இரண்டிற்கும் எவ்வளவு வேறுபாடுகள்.ஒரு சந்தை என்றால்,அதில் பல கடைகள் இருக்கும். கடை என்றால் ஒரே ஒரு கடைதான். எனவே அன்று பலநூறு கடைகள். இன்று வெறும் 31 கடைகள்.

உழவர் சந்தை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. காய்கறிக் கடைகளோ, சென்னையைச் சுற்றிலும் மட்டுமே அமைந்துள்ளன.