யார் அல்லது எந்த இனம் அர்ச்சகராக வேண்டும்? மற்றவர்கள் அர்ச்சகர்களாக ஆகக் கூடாதா?

இதற்கு மனுவாதிகளின் விளக்கம் தேவையில்லை.

சமூக நீதியின் அடிப்படையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்ற தந்தை பெரியாரின் அழுத்தமான குரல், இன்று வலிமை பெறத் தொடங்கிவிட்டது.

“குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது என்ற கொள்கை வலுப்பெற்றுவரும் இந்த நாளில், அப்படிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஆண்டவனுக்கு அர்ச்சகர்களாக குறிப்பிட்ட சாதியினர்தான் இருக்க வேண்டுமெனில், அது அநியாயமாகும்” தலைவர் கலைஞரின் இந்த வரிகள் தெளிவான விடையாக அமைந்துவிட்டது.

கலைஞர் சொல்பவர் மட்டுமல்லர். சொன்னதைச் செய்பவரும் கூட.

1970களில் குறிப்பிட்ட சாதி என்று இல்லாமல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் தீர்மானத்தை அரசு கொண்டு வரும் என அறிவித்தார்.

02.12.1970இல் சொன்னபடியே அதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேறச் செய்தார். 2006ஆம் ஆண்டில், இதனை அமைச்சரவை ஏற்றுக் கொண்டு சட்டவடிவமாக்கியது.

200க்கும் மேற்பட்டோர் அர்ச்சகர் பணிக்கான பயிற்சி பெற்றுப் பணிக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் மனுவாதிகள் சார்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு.

வழக்கு ஒரு புறம் இருந்தாலும், திராவிட இயக்கத்தவர்கள் சமூக நீதிக்கான போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை.

ஆகஸ்ட் 1ஆம் நாள் திராவிடர் கழகம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகத் தமிழகம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது-.

இப்போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல்வேறு இயக்கங்கள் ஆதரவு தெரிவித்ததுடன், மக்களின் ஆதரவும் பெருகுவது கண்டு பார்ப்பனியத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அர்ச்சகர் வேலைக்குத் தனியாகப் படிப்பு இருக்கிறதாம். அது சமற்கிருத அறிவு. அதனை வகுப்பெடுத்துச் சொல்லிக் கொடுக்க முடியாதாம். நாட்டியம், சங்கீதம் போல அது இயல்பாகவே வந்துவிடுமாம். சொல்கிறார் துக்ளக் சோ.

சோ சொல்கிறார். கோயிலில் இருக்கும் பல்லி கூட தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்வதில்லை என்று.

கோயிலைக் கட்டியவன் கைகட்டி வெளியே நின்று கொண்டே இருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கருவறையில் அர்ச்சகராக இருப்பது என்ன நியாயம்?

உழைப்பவன் ஒண்டிக்கிடக்க, உழைக்காதவன் தலைமேலே ஏறுவதா?

தந்தை பெரியாரின் சமூகநீதிப் போராட்டம் தோல்வியைத் தழுவாது. இன்றல்ல, நாளை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகத்தான் போகிறார்கள், துக்ளக்குகள் பார்க்கத்தான் போகிறது.