கடந்த மாதம் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் மூவர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். காவியக் கவிஞர் வாலி, திராவிட இயக்கக் கவிஞர் சாமி. பழனியப்பன், திரைஇசைக் கவிஞர் ஆத்மநாதன் மூவரின் மறைவும், தமிழ்க் கலை இலக்கிய உலகிற்குப் பேரிழப்பேயாகும்.

பாரதிதாசனின் வழிவந்த சாமி.பழனியப்பன் நல்ல மரபுக் கவிஞர். கொள்கை நெறி பிறழாதவர். திராவிட இயக்கத் தொண்டர். இவருடைய மகனான பழனி பாரதி இன்று திரைஉலகில் சிறந்து விளங்கும் பாடலாசிரியர்களுள் ஒருவர்.

இரத்த பாசம் திரைப்படம் தொடங்கி, பல்வேறு திரைப்படங் களுக்கு 75க்கும் மேற்பட்ட பாடல் களை எழுதியவர் கவிஞர் ஆத்மநாதன். புதையல் திரைப்படத்தில் இடம்பெற்ற, “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே” போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறை யையும் ஈர்க்கும் ஆற்றலுடையவை.

1958ஆம் ஆண்டு முதல் பாடலைத் திரைப்படத்தில் எழுதத் தொடங்கி, 2013இல் மருத்து வமனையில் இருக்கும் போதும் தன் கடைசிப் பாடலை எழுதிய வாலி ஒரு சாதனையாளர். 58 ஆண்டுகள், 15 ஆயிரம் பாடல்கள் என்பது சாதனையன்றி வேறென்ன? இவை தவிர, ஏராளமான மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், காவியங்கள் என எழுதிக் குவித்தவர் வாலி.

2013 ஜுலை மாதத்தோடு கவிதை எழுதிய கைகள் மூன்றும் ஓய்ந்துவிட்டன. தமிழக மக்களோ டும், அவர்களின் குடும்பத்தின ரோடும் துயரத்தை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.