mala_350“நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். பள்ளிக்குப் போகும் என்னுடைய கனவை இன்று அடைந்து விட்டேன்.உலகிலுள்ள எல்லாச் சிறுமிகளும் இந்த அடிப்படை வாய்ப்பைப் பெற வேண்டும் என விரும்புகிறேன்”என்று சொல்லி இருக்கிறாள் மலாலா யுசாப்ய் (MalalaYousafzai). பதினான்கு வயதே நிரம்பிய இந்தச் சிறுமி கல்விக்காகக் கொடுத்த விலை மிக மிக அதிகம். பாகிஸ்தானில் தாலிபான்களால் சுடப்பட்டு, இங்கிலாந்தில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு,இப்போது பர்மிங்ஹாம் நகரிலுள்ள ஒரு பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.பிறந்த மண்ணில் தனக்கு மறுக்கப்பட்ட அடிப்படை வாய்ப்பை,அயல்நாட்டில் பெற்றிருக்கிறாள்.

"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே"

பிச்சை எடுத்தாகிலும் கல்வி கற்பது நன்று என்று நாம் படித்திருக்கிறோம்.ஆனால் ‘துப்பாக்கித் தோட்டாக்கள் உடலைத் துளைத்தாலும் கல்வியை, கல்வி பெறும் உரிமையை விடாதே’ என்று உலகப் பெண்கள் அனைவருக்கும் உரத்துச் சொல்லியிருக்கிறாள் அருமை மகள் மலாலா.

சரி, ஆனால் சுட்டுக்கொல்லும் அளவுக்கு, இந்தச் சிறுமியின் மீது தாலிபான்களுக்கு என்ன கோபம்?பாகிஸ்தானில்,தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுவாட் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பெண் குழந்தைகள் கல்விச்சாலைகளுக்குப் போகக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.அதுவரை தன் தோழிகள் சூழ மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் சென்று வந்த மலாலா, வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல். இது அவளின் மனத்தில் பல்வேறு வினாக்களை எழுப்பிக் கொண்டே இருந்தது. அந்த வினாக்கள் உரிமைக் குரலாக மாறியதருணத்தில்மலாலா,உலகின் பார்வையை மட்டுமல்ல,தாலிபான்களின் கண்களையும் உறுத்தத் தொடங்கினாள்.

கல்வியாளரும்,கவிஞருமான தன்னுடைய தந்தையின் மூலம்,பிபிசயின் வலைப்பூ தளத்தில்,சுவாட் பள்ளத்தாக்கிலுள்ள பெண் குழந்தைகளின் கல்வி நிலை பற்றி எழுதுகின்ற வாய்ப்பினைப் பெற்றாள். மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அஞ்சி ஒதுங்கிய வேளையில், தன்னுடைய மகளை எழுதுமாறு ஊக்கப்படுத்தினார் மலாலாவின் தந்தை.

குழந்தை மனத்துடன்,உள்ளதை உள்ளபடி அப்படியே எழுதிக் கொண்டு வந்தாள் மலாலா. முகம் தெரியாத அந்தப் பதினொரு வயதுச் சிறுமியின் உள்ளக்குமுறல்கள் உலகத்தின் பார்வையை சுவாட் பள்ளத்தாக்கின் பக்கம் திருப்பியது.அதேநேரத்தில்,மத அடிப்படைவாதத்தலிபான்களின்துப்பாக்கியும்அவள்இருந்ததிசையைத்தேடிக்கொண்டிருந்தது.ஒரு நேர்காணலில் முகம் காட்டிய மலாலாபள்ளி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, தாலிபான்களால் சுடப்பட்டாள். தலையிலும், கழுத்திலும் தோட்டக்கள் பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்தது அந்தச் சின்னஞ்சிறு மலர்.சுவாட் பள்ளத்தாக்குக் குழந்தைகளின் குரலை எழுத்தில் வடித்துக் கொண்டிருந்த,மலாலாவை மத அடிப்படைவாதம் எத்தனை கொடூரத்திற்கு ஆளாக்கியிருக்கிறது பார்த்தீர்களா?

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த அருமை மகள் மலாலாவின் குரல்,பெண் கல்விக்காக மீண்டும் ஒலிக்கட்டும்! தோழிகளைப் பிரிந்திருப்பது கவலையளிக்கிறது என்று கூறியிருக்கிறாள்.பெரிய காரியத்தைச் சிந்தித்தாலும்,ஆடிப்பாடித் திரியும் வயதுதானே! கவலைப்படாதே மகளே! இப்போது உலகிலுள்ள அனைத்துப் பெண் குழந்தைகளின் தோழி நீ! பெண் குழந்தைகள் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும், இனி உனக்கும் ஓர் இடமுண்டு. வாழ்க மகளே நீ பல்லாண்டு!

Pin It