லின் பியாவோ எதிர்மறை எடுத்துக்காட்டிற்கு ஒரு சிறந்த ஆசிரியர் ஆவார். அவரின் மிகுதியான குற்றச்செயல்களை விமர்சிக்கும் நிகழ்வுப் போக்கில் “கட்சிக்குள்ளே இருவழிப் போராட்டங்கள் இன்னமும் நீண்ட காலத்திற்கு நிலவும்” என்பதை உணர்ந்தோம். இதை கட்சியின் பத்தாம் பேராய அரசியல் அறிக்கை ஆழமாக சுட்டிக் காட்டியது.

கட்சிக்குள்ளே இருவழிப் போராட்டங்கள் நீண்டகாலமாக நிலவுவது என்பது உட்கட்சி முரண்பாடுகளின் வளர்ச்சியை ஆளும் புறவிதி ஆகும். அனைத்திலும் முரண்பாடுகள் தொடக்கம் முதல் இறுதிவரை இருக்கின்றன. முரண்பாட்டின் கூறுகள் ஒன்றையொன்று சார்ந்திருத்தலும் அவைகளுக்கு இடையிலான போராட்டமும் அனைத்து பொருட்களின் வளர்ச்சியை முன்னே தள்ளுகின்றன. வர்க்கச் சமூகத்தில் வர்க்கங்களும் வர்க்க முரண்பாடுகளும் வர்க்கப் போராட்டமும் இருக்கின்றன. இவை கட்சியில் பிரதிபலிக்கும்பொழுது இருவழிப் போராட்டங்களாக மாறுகின்றன. இதனால்தான் உட்கட்சிப் போராட்டங்கள் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிலர் சரியான வழிக்கு எதிராகவே இருப்பர். இது வினோதமானதல்ல. நீண்ட அமைதி நிலவும் என்பதும் அனைத்தும் எளிதாக இயங்கும் பணியே என்பதும் கருதப்பட முடியாத ஒன்றே. உலகில் முழுமுதலாக பரிசுத்தமானது என எதுவும் இல்லை. இது கட்சிக்கும் பொருந்தும். தரையை 24 மணி நேரமும் பெருக்கிக் கொண்டிருந்தாலும் எப்போதும் தூசி இருக்கும். அதே போல் மீன் தூய்மையில்லாத நீரில் உயிர் வாழ முடியாது.

தலைவர் மாவோ கூறுவதாவது: “எந்தவொரு கட்சிக்கும் வெளியே இதர கட்சிகள் இருக்கின்றன. கட்சிக்கு உள்ளே குழுக்கள் இருக்கின்றன. இது எப்போதும் இவ்வாறு இருந்து வருவதே”. இங்கு “எப்போதும்” என்ற வார்த்தை கட்சிக்குள்ளே உள்ள இருவழிப் போராட்டங்களின் நீண்டகாலத் தன்மையை சுட்டிக்காட்டுகிறது. லெனின் கூறினாற்போல், “சோசலிசப் புரட்சியானது தனியொரு செயல் அல்ல. ஒரு முனையில் நடக்கும் போரும் அல்ல. மாறாக கூர்மையான வர்க்க மோதல்கள் நிறைந்த முழுமையான ஊழிக் காலம் ஆகும்.” இது எதிர்நிலைகளின் ஐக்கியம் என்ற அடிப்படையான பொருள்முதல்வாத இயங்கியல் விதியை பயன்படுத்தி சமூகத்தையும் வரலாற்றையும் பயில்வதிலிருந்து பெறப்படும் சரியான முடிவு ஆகும்.

வர்க்கப் போராட்டம் சமூகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் முன்தள்ளுவதைப் போலவே இருவழிப் போராட்டமும் கட்சியின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் முன்னோக்கிச் செலுத்துகிறது. “கட்சியில் முரண்பாடுகள் இல்லாவிட்டால் அவற்றை தீர்ப்பதற்கு கருத்தியல் போராட்டங்கள் இல்லாவிட்டால் கட்சியின் உயிர் முடிவுக்கு வரும்.” வர்க்கங்கள் மறைந்துபோன கம்யூனிஸ்ட் சமூகத்திலும் இருவழிப் போராட்டங்கள் இன்னமும் இருக்கும். அனைத்துப் பொருட்களிலும் உள்ள முரண்பாட்டுக் கூறுகள் ஒன்றையொன்று சார்ந்திருத்தலும் அவைகளுக்கு இடையிலான போராட்டமும் சமூகத்தின் முன்னேற்றத்தை உந்தும் அடிப்படையான இயக்கு சக்தியாக நீடித்து நிற்கும். அப்பொழுதுகூட மேற்கட்டுமானத்திற்கும் பொருளாதார அடிக்கட்டுமானத்திற்கும் உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையே ஒன்றோடொன்று ஒத்திசைவு இருந்தாலும் முரண்பாடுகள் பெரியளவிலோ சிறயளவிலோ இன்னமும் இருக்கும். மக்கள் வேறுபட்ட பார்வையில் பொருட்களை இன்னமும் பார்ப்பார்கள் என்பதால் இந்த முரண்பாடுகள் பழையவற்றிற்கும் புதியவற்றிற்கும் இடையிலான; முன்னேறியதற்கும் பின்தங்கியதற்கும் இடையிலான; சரியானதற்கும் தவறானதற்கும் இடையிலான-பிரதிபலிக்கும் கருத்தியல் போராட்டங்களும் அதே சமயத்தில் போராட்டங்களும் இருக்கும். அவை தற்போதைய இருவழிப் போராட்டங்களின் உள்ளடக்கத்தில் மட்டுமே மாறுபட்டதாக இருக்கும்.

பெருந்திரளான வரலாற்றுத் தரவுகள் கட்சியில் இருவழிப் போராட்டங்கள் நீண்டகாலம் நிலவிவருவதற்கான சான்றளிக்கின்றன. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமானது தொடக்கம் முதற்கொண்டே சிக்கலான கூர்மையான இருவழிப் போராட்டங்களின் ஊடே கடந்து வந்துள்ளது. மார்க்சும் எங்கெல்சும் புருநோன், லஸ்ஸால், பகுனின், டூரிங் ஆகியோருக்கு எதிராகவும் அதே சமயத்தில் எல்லாவிதமான போலி சோசலிசவாதிகளுக்கும் எதிராகவும் ஏறத்தாழ அரை-நூற்றாண்டுப் பேராட்டத்தை நடத்திய பின்னர்தான் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் மார்க்சியத்தை பரவலாக பரப்பி பாட்டாளிவர்க்க அரசியல் கட்சியை நிறுவி வளர்த்தெடுக்க முடிந்தது. லெனினோ பெர்ன்ஸ்டைன், காவுட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்த மாக்கியவாதிகள் (Machists), டிராட்ஸ்கியவாதிகள், புகாரியவாதிகள் ஆகியோருக்கு எதிரான நீடித்த சமரசமற்ற போராட்டங்களுக்கு தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்து அதன்வாயிலாக போல்ஷ்விக் கட்சியை திடப்படுத்தி வளர்த்தெடுத்து உலகில் முதல் சோசலிச நாட்டை நிறுவினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ அது பிறந்தது முதற்கொண்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருவழிகளுக்கு இடையிலான 10 பிரதான போராட்டங்களை தொடுத்துள்ளது. லின் பியாவோ விமானவிபத்தில் இறந்துபட்டாலும் கட்சியில் இருவழிப் போராட்டம் முடிவுறாமல் நீண்ட தொலைவுக்குச் சென்றுள்ளது. லியு ஷாவோசி, லின் பியாவோ போன்ற நபர்கள் மீண்டும் தோன்றுவார்கள். இருவழிகளுக்கு இடையிலான உட்கட்சிப் போராட்டங்களும் பத்து, இருபது அல்லது முப்பது தடவைகள் நிகழும். இது நமது விருப்பத்திற்கு வெளியே உள்ளது.”

தலைவர் மாவோ உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற இருவழிப் போராட்ட அனுபவத்தை தொகுத்து சோசலிசத்தின் ஒட்டுமொத்த வரலாற்று காலப்பகுதிக்குமான அடிப்படை வழியை நமது கட்சிக்கு வகுத்தளித்து இருக்கிறார்; “இந்தப் போராட்டத்தின் நீடித்த சிக்கலான இயல்பை அங்கீகரிப்பதற்கு” நமக்கு கற்பித்தார். சோசலிசத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுக் கட்டத்தைப் பொறுத்தவரை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின்கீழ் உள்ள நமது நாடு மிக சுருக்கமான வரலாற்றையே உடையது. மாறாக, நமது கட்சியோ 20 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் பல பிரதான இருவழிப் போராட்டங்களின் ஊடே இரு வழிகளுக்கு இடையிலான உட்கட்சிப் போராட்டங்களுக்கு கருத்தியல்ரீதியாக முழுவதுமாக தயாராக தீரவேண்டும் என்பதை காணலாம்.

கட்சியில் இருவழிப் போராட்டங்கள் நீடித்து நிலவுவதற்கு உள்நாட்டு காரணங்களும் சர்வதேச காரணங்களும் இருக்கின்றன. திரிபுவாதிகள் கட்சியில் அடிக்கடி தோன்றுகின்றனர். நாட்டில் நிலக்கிழார்கள் மற்றும் முதாலளிவர்க்கத்தின் பாதிப்புகளே இதற்குக் காரணம் ஆகும். இதுதான் திரிபுவாதத்தின் உள்நாட்டுத் தோற்றுவாய் ஆகும். ஏகாதிபத்திய அழுத்தத்திற்கு சரணடைவு என்பது வெளிப்புற தோற்றுவாய் ஆகும். லெனின் நிலக்கிழார்கள் மற்றும் முதலாளிவர்க்கம் பற்றி பேசுகையில் குறிப்பிட்டதாவது: “முதலாளிய வர்க்கத்தின் ஒரு தலைமுறை அப்புறப்படுத்தப்பட்ட களத்தில் புதிய தலைமுறைகள் வரலாற்றில் தொடர்ந்து தோன்றுகின்றன. களம் அவர்களைத் தோற்றுவிக்கும் வரையில் அது என்னற்ற முதலாளி வர்க்கத்தினரைத் தோற்றுவிக்கின்றன.”

நாம் எந்தச் சூழ்நிலையிலும் கட்சியில் கலங்காமல் இருந்து இரு வழிகளுக்கு இடையிலான நீண்ட போராட்டங்களுக்கு கருத்தியல்ரீதியாக முழுவதுமாக தயாராக இருந்தே ஆகவேண்டும். இந்தப் போராட்டங்களில் நாம் தவறிலிருந்து சரியானதை வேறுபடுத்தி மார்க்சிய வழியில் ஊன்றி நின்று திரிபுவாத வழியை எதிர்த்து நிற்கும்வரை நிலக்கிழார்களும் முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் திரிபுவாதமும் பிற்போக்காளர்களும் தீட்டும் அனைத்து சூழ்ச்சிகளும் இறுதிவரை தோற்பதுதான் நடக்கும். எத்தனை எத்தனை பிரதான இருவழிப் போராட்டங்கள் நடக்கட்டும். அது பொருட்டல்ல. அவை வரலாற்று வளர்ச்சி என்ற மாற்றப்பட முடியாத விதியை ஒருபோதும் மாற்ற முடியாது.

                                                                                - யி பாவோ

நன்றி: பீகிங் ரிவ்யூ, தொ. 16, எண். 46, நவ.16, 1973இல் வெளிவந்த கட்டுரையின் சுருங்கிய வடிவம்                               

மொழியாக்கம் – பாஸ்கர்

Pin It