ஈழத்தில் 2009ஆம் ஆண்டு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இராஜபக்சே நடத்திய மனித உரிமை மீறல்கள், சர்வதேச போர் விதிகளுக்கு மாறாக நடத்திய போர் அத்துமீறல்களுக்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் அவையின் அறிக்கையும் இதனை உறுதிசெய்திருக்கிறது.

இந்நிலையில் 04.09.2011 அன்று இலங்கையில் பேசிய மகிந்த ராஜபக்சே, “இலங்கையை அமைதிப் பூங்காவாக, அனைவருக்கும் சம உரிமை உள்ள, வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நாடாக உருவாக்க முயன்று வருகிறோம். மனித உரிமைகளைப் பேணுவதில் இலங்கைக்கு நிகர் யாரும் இல்லை” - என்று ஆணவத்துடன் பொய்களை அள்ளி வீசியிருக்கிறார்.

இராஜபக்சேயின் செயல்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்துவதாக அமைகிறது.

அமெரிக்கா அண்மையில் கொடுத்த நெருக்கடியி னாலும், ஐரோப்பிய நாடுகளின் நெருக்குதல்களாலும், தன்னைச் சுயம்புவாகக் காட்டிக் கொள்ள, இலங்கையில் நடைமுறைப்படுத்தி இருந்த அவசர காலத் தடைச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அண்மையில் தமிழகம் வந்திருந்த மட்டக் களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேசுவரன் இது குறித்துக் கூறும்போது, “ அவசர காலத் தடைச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுவிட்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இராஜபக்சே பலப்படுத்தி விட்டார் ” என்று கூறியிருக்கிறார்.

அதாவது அவசர காலத்தடைச் சட்டததைத் திரும்பப் பெற்ற ஓரிரு நாட்களிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் ராஜபக்சே.

இது உண்மையில் தமிழர்களுக்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான நடவடிக்கை என்பதை அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் மோகன் பெரீஸ் செப்டம்பர் 2ஆம் நாள் கொழும்பில் செய்தியாளர் களிடம் உறுதி செய்து பேசியிருக்கிறார்.

“ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும் என அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அவசர நிலை நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். எவரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத் தின் மீதான தடை அப்படியேதான் உள்ளது. இதனையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உறுதி செய்கிறது ”. பெரீசின் இந்தப் பேச்சு ராஜபக்சேவின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையை உறுதி செய்கிறது.

இலங்கையின் நீதித்துறை அமைச்சர் ஹக்கீம் விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில் 1200 தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகச் சொல்கிறார். இந்த எண்ணிக்கை சரியா என்பதே முதல் ஐயமாக இருக்கிறது.

“ புலிகள் என்ற குற்றச்சாட்டில்  சந்தேகத்தின் பேரில் ” என்று ஹக்கீம் கூறுவதில் இருந்து, சிறையில் இருக்கும் இளைஞர்கள் புலிகள் என்ற பெயரால் கைது செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

அவசர நிலை திரும்பப் பெற்றதும் இவர்கள் விடுதலை ஆவார்கள் என்று ஹக்கீம் சொல்லியிருந்த நிலையில், அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் இந்த இளைஞர்கள் விடுதçல் செய்யப்படமாட்டார்கள் என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

இலங்கையில் அமைச்சர்களும், அதிகாரிகளும், ராஜபக்சேவும் மாற்றிமாற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், மனித உரிமைகளைப் பேணுவதில் இலங்கைக்கு நிகர் இலங்கைதான் என்று பேசிவிட்டு, ஐக்கிய நாடுகள் அவையில் சர்வதேச நாடுகளைக் கண்டனம் செய்து பேசியிருக்கிறார் ராஜபக்சே.

இலங்கை ராணுவத்தின் மீதான சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டுகள் கறை படிந்தனவாம். இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாகக் கோரப்படும் விசாரணைக்கு சர்வதேச நாடுகள், ஆதரவு அளிக்கக் கூடாதாம். இலங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டுமாம்.

மிகப்பெரிய இனப்படுகொலை செய்த ராஜபக்சே என்ற மனிதனுக்கு மனிதாபிமானம், மனித நேயம் என்பது கிஞ்சித்தும் இல்லை என்பதை இந்தப் பேச்சு உறுதிசெய்கிறது.

“ இதுபோன்ற  (போர்க்குற்றச் சாட்டு கூறப்படும்) விசயங்களில் வளரும் நாடுகள் ஒன்று பட்டு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். போர்க் குற்றச் சாட்டு குறித்த இயல்பற்ற நடைமுறைகளைக் கூட்டு முயற்சியுடன் தடுத்து நிறுத்த வேண்டும். புலிக களின் பின்னடைவுக்குப் பின்னர் ஒன்றுபட்ட, துடிப்புடைய தேசமாக இலங்கை மாறுவதற்கான அடித்தளத்தை அரசு அமைத்து வருகிறது. புலம் பெயர்ந்த மக்கள், கடந்த 30 மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டனர். இலங்கை வடக்குப் பகுதி ராணுவத்தின் பிடியில் இருப்பதாக செய்யப்படும் பிரச்சாரம் உள்நோக்கம் உடையது ” என்று 24 செப்டம்பரில் ஐ.நா. அவையில் பேசியிருக் கிறார் மகிந்த ராஜபக்சே.

ஈழத்தில் ராஜபக்சேவும் அவரின் சிங்கள இனவெறி இராணுவமும் நடத்திய இனப்படுகொலை, அதன் அவலம் குறித்து லண்டன் சேனல் 4 தொலைக் காட்சி அம்பலப்படுத்தி உலகையே குலுங்க வைத்து விட்டது.

இதற்குப் பின்னும் தன் மீது போர்க்குற்றம் இல்லை என்றும், அந்தக் குற்றச்சாட்டை முறியடிக்க உலக நாடுகளை, வளரும் நாடுகளை துணைக்கு அழைக்க ராஜபக்சேவுக்கு ஒரு துணிச்சல் இருந்திருக் கிறது.

புலிகளோடு போர் என்று சொல்லிச் சொல்லி, தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஒன்றுபட்ட இலங்கை என்கிறார் அவர். அது என்ன சிங்களர் ஒன்றுபட்ட இலங்கையா? எஞ்சி இருக்கும் தமிழர்களின் நிலை இனி என்ன ஆகும்?

இன்னமும் ஈழப்பகுதிகள் சிங்கள ராணுவத்தின் கோரப் பிடியில்தான் இருக்கிறது. அதில் மாற்றம் ஏதும் இல்லை.

இப்படிப்பட்டச் சூழலில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீதான போர்க்குற்றம் குறித்து 18ஆம் அவையில் கனடா நாடு குற்றப்புகார் அளிக்க இருக்கிறது. இதற்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல ஆசிய ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

ஆனால் பாட்டாளி வர்க்கம், மனித நேயம், தேசிய சிறு பான்மையினரின் உரிமை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், சோசலிசம் பேசிக்கொண்டிருக்கும் சீனாவும், இரஷ்யாவும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன.

உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் அல்லது வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கும் அல்லது புறக்கணிக்கும் என்று தகவல்கள் சொல்கின்றன. இவைதான் ராஜபக்சேவின் துணிச்சலுக்கான காரணம்.

இது ராஜபக்சேவின் வெள்ளை உடையில் படிந்த இரத்தக்கறையை மறைக்கும் முயற்சியாகும்.

பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இருக்கும் மனிதநேயமிக்க உணர்வு இந்தியாவுக்கு இல்லை என்றால், உலக அரங்கில் நாளை இந்தியா தலை கவிழும் நிலை ஏற்படும்.

இந்தியா தன் நிலையை மாற்றி இராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றத்தைத் தோலுரித்துக் காட்டி, அந்த மனிதனை குற்றக் கூண்டில் ஏற்ற முன்வர வேண்டும்.

இந்தியா அதனைத் செய்யுமா?

உலக நாடுகள் கட்டாயம் அதைச் செய்யும். ஈழம் ஒருநாள் மலரும்!