உண்ணாவிரதங்களால் நாடே கலகலத்துக் கொண்டிருக்கிறது. உண்ணாவிரதம் இருந்தே ஊழலை ஒழிப்பதில் அன்னா ஹசாரேக்கும், பாபா ராம்தேவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. விளம்பர வெளிச்சம் யார் மீது கூடுதலாகப் படுகிறது என்பதை எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹசாரேயிடம் அடங்கிப் போன மத்திய அரசு பாபா ராம்தேவைக் கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தது. இரண்டாவது வழிமுறைக்கு ஏற்ற பலன் கிடைத்தது. வீராதி வீரர், தீராதி தீரர், எதற்கும் அஞ்சா சத்யாகிரகி பாபா ராம்தேவ் பெண் உடை அணிந்து மேடையில் இருந்து கீழே குதித்து ஓடியே விட்டார். பிறகு அவரை ஒருவழியாக ஓடிப் பிடித்து ரி´கேஷ் வரைக்கும் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தது காவல்துறை. இனி உண்ணாவிரதம் இருந்தால் ஹசாரேக் கும் இந்த முறைதான் பயன்படுத்தப் படும் என்று அரசு சொல்ல, துப்பாக்கிக் குண்டுகளுக்கும் அஞ்சமாட்டேன் என்று வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார் அவர்.

இந்த இரண்டு விளம்பர உண்ணா விரதங்களுக்கு இடையில், ஒரு பொது நோக்கத்திற்காக, ஓசையில்லாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்திருக்கிறார் இன்னொரு துறவி. அவர் பெயர் நிகமானந்தா. அவருடைய உண்ணாவிரதம், பி.ஜே.பி ஆட்சி நடை பெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. கங்கைக்கரையோரமாய் அமைந்திருக்கும் கல்குவாரிகளில் உடைக்கப்படும் கற்களின் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் கங்கையில் கலந்து அதனை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நிகமானந்தாவின் கோரிக்கை.

ஹசாரே, ராம்தேவ் உண்ணாவிர தங்களுக்கு வலியப் போய் ஆதரவு தெரிவித்த பி.ஜே.பி யினர், தங்கள் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் உண்ணாவிரதம் இருந்த  இளம் துறவி நிகமானந்தாவைக் கண்டுகொள்ள வேயில்லை. பி.ஜே.பி.யைப் பொறுத்த வரையில் கங்கை புனிதமானதுதான். ஆனாலும் அதனைவிடக் கல்குவாரித் தொழில் அதிபர்களின் பணமும், ஆதரவும் வலிமையானவை. 36 வயதில் ஒரு துறவி செத்துப்போனால் நமக்கென்ன, எப்படியாவது தொழில் அதிபர்களைக் காப்பாற்றுவதுதான் நம் கடன் என்று இருந்துவிட்டது பி.ஜே.பி. அரசு. இப்போது கேட்டால், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று அவர்கள் சொல்லக்கூடும்.

பி.ஜே.பி.யை விடுங்கள்... நம் ஊடகத்துறை யினருக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணிப் பாருங்கள்! அந்த இரண்டு உண்ணாவிரதங்களுக்கும் அவ்வளவு முதன்மை கொடுத்த இந்தியப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் நிகமானந்தா பற்றிய செய்தியில் வாய்மூடிக் கொண்டனவே ஏன்?

விடை மிக எளியது. அந்த உண்ணாவிரதங்கள் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிரானவை. இந்த உண்ணாவிரதமோ உத்தரகாண்டில் உள்ள பி.ஜே.பி. அரசுக்கு எதிரானது. நம் பத்திரிகையாளர் களுக்கு அறம் பெரிதன்று, அரசியலே பெரிது. அதனால்தான் ஒரே காலகட்டத்தில் நடைபெற்ற மூன்று உண்ணாவிரதங்களில், இரண்டுக்கு மட்டும் எல்லா விளம்பரங்களும் கிடைத்தன. ஒரு உண்ணா விரதமோ யாராலும் அறியப் படாமலே முடிந்து போயிற்று.

கடந்த பிப்பிரவரி மாதம் 19ஆம் தேதி தன்னு டைய உண்ணா விரதத்தைத் தொடங்கிய நிகமானந்தா 119 நாள்கள் பட்டினியோடு போராடினார். கடைசி ஒரு மாதம் அவர் கோமாவில் கிடந்தார். இறுதியாக கடந்த ஜுன் 13ஆம் தேதி மருத்துவ அறிவியல் இமாலயன் நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் காலமானார். என்ன ஒரு பெரிய வேடிக்கை என்றால், இதே மருத்துவமனையில், இதே காலகட்டத்தில்தான் பாபா ராம்தேவ் சிகிச்சை அளிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டார். ஒரே மருத்துவ மனை ஒருவரைக் காப்பாற்றியது, இன்னொருவரைக் கைவிட்டுவிட்டது.

நிகமானந்தாவின் போராட்டம் ஒருவகையில் அரசு சார்புடையது என்றே கூறவேண்டும். 1985ஆம் ஆண்டு, இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்து ராஜீவ்காந்தி தொடக்கி வைத்த கங்கைத் தூய்மைத் திட்டம் என்பதன் தொடர்ச்சிதான் இது. அந்தத் திட்டம் அன்றைக்கு பி.ஜே.பி.யின் வற்புறுத்தலின் பேரில்தான் தொடங்கப்பட்டது. கங்கையை எப்போது காப்பாற்ற வேண்டும், தொழில் அதிபர்களை எப்போது காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் அவாளுக்குத் தெரியாதா என்ன?

பொதுவாகவே உண்ணாவிரதம் என்னும் போராட்ட முறை பற்றி இருவேறு கருத்துகள் உண்டு. காந்தியாரும், பெரியாரும் அதில் இருதுருவங்களாக நின்றனர். அது உலகிலேயே மிகச் சிறந்த போராட்ட முறை என்று கருதினார் காந்தியார். அது போராட்டமே இல்லை, வெறும் சண்டித்தனம் என்றார் பெரியார். தன் பொதுவாழ்வில் பலமுறை உண்ணாவிரதத்தை ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறார் காந்தியார். ஒருமுறை கூட அந்தப் பக்கம் திரும்பியதே இல்லை பெரியார்.

தங்கள் கோரிக்கை என்னவென்று சொல்லி, அதற்கான நியாயங்களை எடுத்து விளக்கி, ஏற்கப்படாத போது, ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல் என்று பல்வேறு வகைகளில் எதிர்ப்பைக் காட்டுவதுதான் போராட்டமே அல்லாமல், சாப்பிட மாட்டேன், சாப்பிட மாட்டேன் என்பது எந்த வகையில் போராட்டமாகும் என்பார் பெரியார்.

பெரியாரைப் பின்பற்றும் என் போன்றோர் கூடச் சில நேரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பெரும் பான்மையாக ஒருநாள் உண்ணாவிரதம். அதாவது ஒருவேளை உண்ணாமல் இருப்பது. இந்த ஒருநாள் உண்ணாவிரதம், தொடர் உண்ணாவிரதம் என்பதெல்லாம் காந்தியாருக்கே கூடத் தெரியாது. இவையயல்லாம் நம் கண்டுபிடிப்பு. அவர் கடைப்பிடித்தது அனைத்தும் கோரிக்கை நிறைவேறும் வரை அல்லது சாகும் வரை என்பதுதான். ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல், உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போராளி உலகிலேயே ஈழத்து  திலீபன் மட்டும்தான். வலுக்கட்டாயமாக ஏற்றப்படும் திரவத்தைத் தவிர, உணவேதும் உண்ணாமல் கடந்த 11 ஆண்டுகளாய்ப் போராடிக்கொண்டிருக்கும் மணிப்பூரின் ஐரோம் சர்மிளாவை வரலாறு மறக்காது.

எங்களைப் போன்றவர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தை ஏற்றுக்கொண்டதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது ஒரு வகையிலான கவன ஈர்ப்பு என்னும் அடிப்படையில் மட்டுமே அதனை ஏற்கிறோம். ஆனாலும் அவ்விதமான போராட்டத்தை விட்டுவிடுவதுதான் சரியானதுதான் என்னும் எண்ணத்தை இன்றைய உண்ணாவிரதங்கள் நமக்கு ஏற்படுத்துகின்றன.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பல சிக்கல்கள் உள்ளன. எதிர் எதிர்க் கோரிக்கைகளுக்காக இருவர் அல்லது இரு அணியினர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினால், யார் உயிர் மலிவானது என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கும். அந்த இடத்தில் கோரிக்கைகள் தங்களின் முக்கியத்துவத்தை இழந்து, உண்ணாவிரதம் இருப்பவர்களில் யார் வலிமையானவர்கள் என்பதே முக்கியமாகிறது. தெலங்கானாவில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் நெருங்கி வந்த காட்சிகளை நாம் பார்த்தோம்.

எனவே, ஒட்டுமொத்தமாகவே உண்ணாவிரத மிரட்டல்களை எல்லோரும் கைவிட வேண்டிய தருணம் நெருங்கியிருக்கிறது. ஹசா ரேக்களுக்கு அச்சப்பட வேண்டியதுமில்லை, பாபா ராம்தேவ்களுக்குப் பயப்பட வேண்டியதுமில்லை. நிகமானந்தாக்களை இழக்க வேண்டியதுமில்லை.

Pin It