ஈழ உறவுகளைக் கொன்றழித்த ராஜபக்சேவைச் சர்வதேச நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என, மத்திய அரசு பரிந்துரைக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட  தீர்மானத்திற்கு நாம் தமிழர் கட்சி கடந்த 18ஆம் தேதி சென்னையில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியது. கட்சியின் தலைவர் சீமான், நடிகர் சத்தியராஜ், இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளும், பதாகைகளும் அக்கூட்டத்தைப் பற்றி மக்களுக்கு அறிவித்தன.

வீர மங்கை வேலுநாச்சியாரே ஜெயலலிதாவாக மறுபடியும் வந்து பிறந்துவிட்டார் என்று கூட்டத்தில் பேசியவர்கள் கொண்டாடினர். முன்பு கலைஞர் ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, கருணாநிதி வெறும் தீர்மானம்தானே நிறைவேற்றுகிறார் என்று சொன்னவர்கள், இன்றோ எங்களின் புரட்சித் தலைவி தீர்மானமே நிறைவேற்றி விட்டார் என்று கூறிப் பூரிப்படைகின்றனர்.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் எல்லாம், நாம் தமிழர் கட்சி ஒரு கூட்டம் நடத்தினால், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் படம்தான் மிகப் பெரியதாகச் சுவரொட்டிகளில் இடம் பெற்றிருக்கும். இப்போது இக்கூட்டத்திற்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், பதாகைகள் எவற்றிலும் மருந்துக்குக்கூட அவரின் படம் இடம்பெறவில்லை. எல்லாச் சுவரொட்டிகளிலும், பெரிய அளவில் ஜெயலலிதாவின் படத்தையும், சிறிய அளவில் சீமானின் படத்தையும் மட்டுமே பார்க்க முடிந்தது.

ஏன் இந்த மாற்றம்? அம்மையாரின் ஆட்சியில் பிரபாகரன் படம் வைக்கக்கூடாது என்னும் அச்சத்திலா, அவர் படத்தை வைத்து அம்மையாருக்கு இடையூறு ஏற்படுத்தி விடக் கூடாது என்னும் எண்ணத்திலா?

ஜெயலலிதாவுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டதைப் பற்றி, அவர்களின் ஆதரவுப் பத்திரிகையான, ஜுனியர் விகடனே இப்படி எழுதியிருக்கிறது. "இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணில் வைத்துப் புலிகள் கொடூரமாகப் படுகொலை செய்தார்கள் என்றும், என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான், புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது என்றும், ராஜீவ் கொலையின் முதல் குற்றவாளியான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நடவடிக்கை எடுத்தது நான்தான் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா சொன்னது சீமானுக்குத் தெரியுமா? பாராட்ட நடத்தவில்லை, பயத்தால் நடத்துகிறார் என்று ஒருவர் கமெண்ட் அடிக்கிறார்"

சுவரொட்டிகளிலும், கூட்ட மேடையிலும் பிரபாகரன் படம் இடம் பெறாமல் போனதற்கு என்ன காரணம் என்று இப்போதுதான் நமக்குப் புரிகிறது.