sivathamby_200உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வருகை தந்த அறிஞர் பெருந்தகை கா. சிவத்தம்பி அவர்கள் நேர்காணல் ஒன்றில், “ஈழம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட விடயம். என் அபிப்பிராயப்படி ஈழம் என்பது சிங்களச் சொல்லில் இருந்து வந்ததாக நினைக்கிறேன். துரதிஷ்ட்டவசமாக இன்றைக்கு ஈழம் என்ற சொல், இலங்கையில் வேறுசில கருத்துகளை ஏற்படுத்துகின்றன” என்று சொல்லி இருக்கிறார். இன்னொரு நேர்காணலில் ஈழம் என்ற சொல் சிங்களத்தில் இருந்து திரிந்து வந்ததாகவும் சொல்லி இருக்கிறார். இது நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

கடைச்சங்க காலமான கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியமான, பத்துப் பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையில் “ஈழத்து உணவும்” என வருகின்றது. ஈழ நாட்டின் உணவு என்பது இதன் பொருள்.

ஈழத்துப் பூதந்தேவனார் என்ற புலவரும், ஈழத்து என்ற அடைமொழியில் இன்னும் சில புலவர்களும் கடைச்சங்க காலத்தில் பாக்கள் இயற்றி வாழ்ந்துள்ளார்கள் என்பது இலக்கியச் சான்று.

இலங்கையின் வரலாறு என்று சிங்களர்களால் போற்றப்படும் மகாவம்சத்திலோ அல்லது தீபவம்சம், சூளவம்சத்திலோ ஈழம் என்று எங்கும் சொல்லப்படவில்லை. மாறாக லங்கா என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே ஈழம் என்பது சிங்களச் சொல் அன்று, தமிழ்ச்சொல்தான் என்பதை அறிஞர் பெருந்தகையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

- சிலம்பன்

Pin It