வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழுகின்ற மக்களுக்கு உதவ வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையின் படி தலைவர் கலைஞரின் அரசு பல இலவச திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், இலவச மின்சாரம் போன்றவை குறிப்பிடத்தக்கது. இதைக்கூடப் பொறுக்கமாட்டாமல், ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு சோ - என்ற ராமசாமி 21.04.2010 நாளிட்ட துக்ளக் என்ற தன் பத்திரிகையில் ஒரு கேள்விக்குப் பதில் அளிப்பது போல் இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டி எழுதியிருக்கிறார்.

“ஏழைகளுக்கு - மாதம் ஒரு பாட்டில் மினரல்வாட்டர் இனாமாகக் கொடுத்தால் தீர்ந்தது குடிநீர்ப்பிரச்சனை! ஆளுக்கொரு டார்ச் லைட் இலவசமாகக் கொடுத்தால் தீர்ந்தது மின்வெட்டுப் பிரச்சினை! முன்பு ஆங்கிலேயர் காலத்தில் இனாம் நிலங்கள் பெற்று, பலர் ஜமீன்தார்கள் ஆக விளங்கினார்கள். இன்று தமிழகத்தையே இனாம் நிலமாகப் பெற்றிருக்கிறது கழக ஜமீன் சோ என்ற ராமசாமிக்குத் தெரியவில்லை. இந்த இலவசங்களைத் தொடங்கி வைத்து, இலவசங்களை ஓடி, ஓடி வாங்கியவர்கள் பார்ப்பனர்கள் என்று! இதற்கு எழுத்தாளர் அருணன் பதில் கூறுகிறார் :-

“நிலங்களை பிராமணர் கூட்டம் ஒன்றுக்கு தானமாகத் தருவது பிரமதேயம். பெரும்பாலும் இவை இறையிலியாக - வரியில்லாதவையாக வழங்கப்பட்டன. நிலங்களை ஒரே ஒரு பிராமணனுக்குத் தானமாகத் தந்தால் அது ‘ஏகபோக பிரமதேயம்’. அநிருத்த பிரம்மராயர் என்பவருக்கு ஏகபோக பிரமதேயமாக பத்துவேலி நிலம் வழங்கப்பட்டதை சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. - காலந்தோறும் பிராமணியம், பக் - 249

நிலங்களை மட்டுமா பார்ப்பனர்கள் இனாம் வாங்கினார்கள். பசுக்கள், குதிரைகள், தானியங்கள், இன்றும் கூட கோயில்களில் பார்ப்பனர்கள் இனாம் வாங்கவில்லையா?

தங்கள் முன்னோர்கள் இனாம் வாங்கிய வரலாறு தெரியாமல், ஏழைகளையும் அவர்களுக்கு உதவும் கழக அரசையும் ஏளனமாகப் பேசித் திரியும் சோ என்ற ராமசாமியை நாம் ஏளனப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. ‘கற்றனைத்தூறும் அறிவு’ - என்கிறார் வள்ளுவர்!

- கவிராயர்