நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காவித் தீவிரவாதம் பெருகிவருகின்றது என்று பேசிய வுடன் பா.ஜ.க., சிவசேனா உறுப்பினர்கள் பொங்கி எழுந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பரித்துள்ளனர்.

chidambaram_400தமிழர், தமிழ்மொழிக்கான உரிமைச் சிக்கல்களிலோ, ஈழத்தமிழர் விடுதலைப் போராட் டத்திலோ நாம் மனம் மகிழும் வகையில் ஒருநாளும் ப.சிதம்பரம் பேசியதில்லை. இப்போது தான் முதன்முறையாக ஒரு மிகச்சரியான தொடரை அவர் நாடாளுமன்றத்தில் ஒலித்திருக் கிறார். அதனை எதிர்த்து மதவாதிகள் குரல் எழுப்பும் போது, அவர் கூற்றில் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை, அமைதி யையும், நல்லிணக்கத்தையும் விரும்புகின்ற அனைவருக்கும் உள்ளது.

பா.ஜ.க., உறுப்பினர் ஒருவர், ‘காவி என்றாலே அமைதி என்று பொருள் ’ எனப் பேசியிருக்கிறார். கேட்ட உடனேயே சிரிக்க வைத்து விடுகிற நல்ல நகைச்சுவை இது.

வன்முறையில் பிறந்து, வன்முறையில் வளர்ந்து, வன்முறையிலேயே வாழ்ந்து கொண்டி ருக்கிற இயக்கம்தான் காவி இயக்கம் என்பதை வரலாறு படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே, இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்த பின்பு, இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு கட்ட மைப்பை உருவாக்குவது என்று யஹட்கேவார் உள்ளிட்ட தலைவர்கள் முடிவெடுத்தனர். காவித் தீவிரவாதம் அங்கே தொடங்கிற்று.

1948 ஜனவரி முப்பது அன்று அண்ணல் காந்தியடிகள், கோட்சே என்ற இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோட்சே ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதும், சாவர்க்கரோடு மிக நெருக்கமான தொடர்பு டைவர் என்பதும் உலகறிந்த செய்திகள்.

ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் என்னும் இரண்டே அமைப்புகள் மட்டும் இருந்த காலகட்டத்தில், வன்முறைக்கென்றே 1964 இல் விசுவஇந்துப் பரிசத் என்று ஒர் இயக்கம் தொடங்கப்பட்டது. கோல்வால் கரின் சிந்தனையில் உருவெடுத்த அவ்வியக்கம் இந்து சந்நியாசிகள், சாமியார்கள், மடாதிபதிகளால் கட்டப்பட்டது.1965 இல் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டபோது, இசுலாமியர்களை எதிரிகளாக்கி விசுவபரிசத் விரைந்து வளர்ந்தது.

1966 இல் அதன் முதல் வன்முறை வெறியாட்டம் அரங்கேறிற்று. பசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவரவேண்டும் என ஆளும் கட்சியான காங்கிரசை அது வலியுறுத்தியது. காங்கிரசுக்குள்ளிருந்த நந்தா, பட்டீல் போன்ற வர்களும் அதனை ஆதரித்தனர். நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், நம் தமிழகத் தலைவர் காமராசர்தான் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். அதற்காக அவர் கொடுத்த விலை என்ன என்பதை நாம் அறிவோம். நவம்பர் 7 ஆம் தேதி தில்லியில் காவிப்படை நடத்திய பேரணி, வன்முறை வெறியாட்டமாக முடிந்தது. ஜந்தர் மந்தர் தெருவில் இருந்த காமராசரின் வீடு கொளுத் தப்பட்டது. இரகுராமையாவின் வீடும் சூறையா டப்பட்டது. இருவரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத் தனர். காவி என்றால் அமைதி என்று இதனால் தான் குறிப்பிடு கிறார்களோ என்னவோ? பசுவதைத் தடை கோரும் இவர்கள், 2001 ஆம் ஆண்டு, அரியானா மாநிலத்தில், இறந்து போன ஒரு மாட்டின் தோலை உரித்துக் கொண்டி ருந்ததற்காக, 5 தலித் தோழர்களைக் கொன்று, அவர்களின் தோலை உரித்தார்களே, அதுதான் அமைதியான நடவடிக்கை போலும்.

trisul_2501984 இல் இன்னொரு புது இயக்கத்தைக் காவிப்படை உருவாக்கிற்று. பஜ்ரங்தள் என்பது அதன் பெயர். பஜ்ரங் என்றால் அனுமார் என்று பொருள். எனவே புதிதாய் உருவானது ஒரு வானரப் படைதான் என்பது தெளிவாய்ப் புரிகிறது. அந்தப் படையின் முன்மொழிவுதான் மூன்று மசூதிகளை இடித்து, அயோத்தியில் இருந்து ராமனையும், மதுராவில் இருந்து கிருஷ்ணனையும், காசியில் இருந்து விசுவநாதனையும் மீட்டெடுக்க வேண்டும் என்பது. பாவம், இந்துக் கடவுள்கள் எல்லாம் இப்படி மசூதிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள் போலும்! கடவுள் மனிதரைக் காப்பாற்றுவார் என்பதற்குப் பதிலாக, இந்த மனிதர்கள் அல்லது வானரங்கள் அவரைக் காப்பாற்ற முயல்கின்றனர்.

84 இல் தொடங்கிய அந்தக் கூக்குரல் 92 டிசம்பரில் நிறைவேறியதை நாம் அறிவோம். அயோத்தி மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரா போன்ற இடங்களுக்கும் அடுத்தடுத்து காவித்தீவிரவாதம் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

1998 டிசம்பர் 25 அன்று எல்லோரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் ஒரிசாவில் கிறித்துவர்கள் மிகக் கடுமையான வன்முறைக்கு உள்ளானார்கள். கிறித்துவ அருட்சகோதரிகள் பாலியல் வன்முறைக ளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அறிவியல் வளர்ச்சியும், நாகரிகமும் மிகுந்த நூற்றாண்டு எனக் கருதப்படும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து சமூகத் தொண்டாற்ற வந்த ஒரு பாதிரியாரும், அவருடைய இரண்டு மகன்களும் உயிரோடு கொளுத்தப்பட்டார்களே... அந்தக் கொடுமை யைத்தான் அமைதி நடவடிக்கை என்று காவிப் படையினர் கூறி மகிழ்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மோடியின் தலைமையில் குஜராத்தில் நடந்த கொலைவெறி யாட்டங்களை என்னவென்று சொல்லுவது? அந்த மோடியைத்தான் துக்ளக் சோ தலையில் வைத்துப் போற்றுகிறார். ஜெயலலிதாவோ தலைவாழை இலைபோட்டு அவருக்கு விருந்து வைத்தார்.

இத்தனை கொடுமைகளையும் இழைத்திருக் கின்ற சங்பரிவார நடவடிக்கைகளைக் காவித்தீவிர வாதம் என்று அழைப்பதுகூட சற்று மென்மை யானதுதான். காவிப் பயங்கரவாதம் என்பதே சரியான தொடராக இருக்க முடியும்.